தமிழ் சினிமா மட்டுமல்லாது இலக்கிய துறையிலும் ஆளுமையாக விளங்கும் கவிப்பேரரசு வைரமுத்து ஜூலை 13 இன்றுடன் 70ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
வைரமுத்து, இவரது வார்த்தை ஜாலங்களில் ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக மயங்கிக் கிடக்கிறது தமிழ்சினிமா. புலவர்கள் இதிகாசங்களாக, காப்பியங்களாக சொல்ல வேண்டிய கவிதைகளையும் ஒன்று இரண்டு வரிகளில் வைரமுத்துவால் சொல்லிவிடமுடியும். ஐந்தாம் வகுப்பு முதலே தமிழ் மீது தீராக் காதல் கொண்ட வைரமுத்து பச்சையப்பா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் பொழுதே முடிவு செய்துவிட்டார் தான் ஒரு பாடலாசிரியர் என்பதை. “இளமை உன் தோள்களில் இருக்கும்போதே எது நிசம் என்பதை எட்டிவிடு, எழுதியபடிதான் நடக்கும் எல்லாம் விதிவசம் என்பதை விட்டுவிடு" என பாடலில் வைரமுத்து எழுதியது அவருக்கு அவரே எழுதிக் கொண்ட அறிவுரை. 1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் படத்துக்காக தன்னுடைய முதல் திரை பாடலை எழுதினார் வைரமுத்து.
முதலில் வைரமுத்துவை பார்த்ததும் இளையராஜாவுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. சிக்கலான மெட்டை கொடுத்துவிட்டு நாளை வரும்படி சொல்லியிருக்கிறார். மெட்டை கொடுத்த வேகத்தில் வைரமுத்து பல்லவியை கொட்ட, இளையராஜாவும் பாராதிராஜாவும் மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கிறார்கள். அப்படி உருவான பாடல்தான் தமிழ் திரையிசையில் புது அத்தியாயத்தை துவக்கி வைத்த ’இதுவொரு பொன்மாலை பொழுது’. தமிழ் பாடல்களில் கண்ணதாசனுக்கு பிறகு இலக்கிய நயம் குறைந்து வருவதாக இளம் பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களுக்கு விமர்சனங்கள் வந்தபோது வைரமுத்து எழுதிய இதயநிலா பொழிகிறது பாடல் தமிழ் இலக்கிய கவிதைகளுக்கு நெருக்கமான ஒன்றாக கொண்டாடப்பட்டது.
வைரமுத்துவின் வரிகள் பல காரணங்களுக்காக கொண்டாடப்பட்டாலும் வைரமுத்து அளவிற்கு தமிழ் சினிமாவில் கிராமத்தை வார்த்தைகளால் வடித்த கவிஞர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கிராமிய மணம் கமழும் பாடல்கள் வடித்தாலும் அறிவியலும் அங்காங்கே வைரமுத்துவின் பாடல்களில் வினைபுரிவது அவரின் தனிச்சிறப்பு. ‘இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிரிருக்கும்’, ‘நிலவில் பொருள்கள் எடை இழக்கும், நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்’, ‘அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்’ என எண்ணற்ற அறிவியல் தகவல்களை தன் பாடல்கள் மூலம் இளைய தலைமுறைக்கு எளிதாய் கடத்தி இருக்கிறார் வைரமுத்து.
ஏ ஆர் ரகுமானுக்கும், வைரமுத்துவிற்க்கும் இருக்கும் நெருக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அமெரிக்காவில் ஐ.நா சபையில் நடந்த இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதின விழா இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பு கிடைத்தபோது ஏ ஆர் ரகுமான் வைரமுத்து வரிகளில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே பாடலை முதல் பாடலாக பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா திரைப்படம் துவங்கி காற்று வெளியிடை வரை வைரமுத்து பாடல்கள் இடம் பெறாத படமே இல்லை எனும் அளவிற்கு ஏ ஆர் ரகுமானின் எல்லா திரைப்படங்களிலும் ஏறத்தாழ 85 சதவீதத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து ரஹ்மானின் வெற்றிகரமான பயணத்திற்கு பின்னால் முக்கியமான ஒருவராக தோல் நிற்கிறார்.
50 ஆண்டுகள் இலக்கியப் பயணம், 40 ஆண்டுகள் திரைப்பாட்டுப் பணி, பத்மபூஷண் - பத்மஸ்ரீ – சாகித்ய அகாடமி விருதுகள், திரைப்பாட்டுக்கென 7 தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற கவுரவம், தமிழக அரசின் 6 மாநில விருதுகள், மூன்று பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள், 38 நூல்கள், 7500 பாடல்கள் என்று விரியும் வைரமுத்துவின் புகழ் தமிழ் போல என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.