இயக்குனர் டி.ராஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 2 வார காலம் தங்கியிருந்து சிகிச்சை பெறப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் டி.ராஜேந்திரன் கடந்த மாதம் 19-ம் தேதி தீடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப் பட்டார்.இந்நிலையில் நேற்று(ஜூன் 14) மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் டி.ராஜேந்திரன் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசியதாவது;
நான் முழு உடல் நலத்துடன் உள்ளேன். என் உடல் நலம் குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். என் மீது அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. இன்று செய்தியாளர்களை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை என்றாலும் என்னைப் பற்றிய தவறான தகவல்களை யாரும் நம்பக் கூடாது என்பதால்தான் உங்களைச் சந்திக்கின்றேன்.
நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவனில்லை. என் முகத்தில் தாடி உண்டு. ஆனால் என் வாழ்க்கையில் மூடி கிடையாது. நான் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்று தான் அமெரிக்கா செல்கிறேன். விதியை மீறி எதுவும் நடக்காது, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஜி கே வாசன், பச்சைமுத்து, அண்ணன் கமலஹாசனுக்கு நன்றி.
எல்லாவற்றையும் விட முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தபோது, அவரது அன்பில் நெகிழ்ந்து போனேன்.
நான் இன்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படக் காரணமே எனது மகன் சிலம்பரசன் தான். அவனுக்காகத்தான் ஒப்புக் கொண்டேன். எனக்காக சிம்பு தன் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை மரியாதை தெரிந்தவனாகவும் வளர்ந்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன் நிஜத்தில் நல்லவன்.
-இவ்வாறு டி ராஜேந்திரன் கண்ணீர் மல்க பேசினார்.