எழுபத்தி நான்கு வயது.
திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள்.
170 படங்கள்.
நாற்பது ஆண்டுகளாக உச்சம்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கொண்டாட்டம்.
தமிழ் படங்களின் வெற்றியை அகில இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் கொண்டு சென்ற முதல் நடிகர்.
இவர் படங்களின் வெளியீட்டு விழாக்கள் தமிழகம் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் ஒரே மாதிரியான கொண்டாட்டங்களைத் தான் கொண்டு வரும்.
அப்படிப்பட்ட ஒரு மந்திர சக்தி தான் ரஜினிகாந்த். மக்களுக்குச் சூப்பர் ஸ்டார்.
ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் எவ்வளவு வருடங்கள் இடைவெளி விட்டாலும், இவர் பட அறிவிப்பு வந்தால் போதும், மீடியாக்களில் சூடு பிடித்து விடும்.
ஒவ்வொரு ஸ்டில்லும் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு அறிவிப்பும் அவர்களுக்கு ஸ்கூப் தான். மசாலா படங்களில் மட்டுமே நடிப்பார். கமர்ஷியல் படங்கள் தவிர அவர் நோக்கம் எதுவும் இல்லையெனச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர் அதை ஒப்புக்கொள்கிறார். "நான், பணம் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அதை வாங்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், என்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்கள் இவர்கள் யாரும் ஏமாறக் கூடாது என்று நினைப்பவன். அவர்கள் ரசிப்பதைக் கொடுப்பது என் வேலை. அதை மட்டும் செய்வேன்."
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று கூட ரஜினி நடித்திருக்கிறார். ஆனாலும் மக்கள் அவர்மேல் வைத்துள்ள அபிமானமும், அர்ப்பணிப்பும் மாறவில்லை. அவர் படம் வெளியாகும் நாள் தான் அவர்களுக்குக் கொண்டாட்ட நாள். தீபாவளியோ, பொங்கலோ அவர் படம் வெளியாகும் நாள் அவர்களுக்கு அந்தந்த பண்டிகைகள் அவ்வளவே. அந்த விதத்தில் இந்த ஆண்டு தீபாவளி ரஜினி ரசிகர்களைப் பொறுத்த வரை அக்டோபர் பத்தாம் தேதி (நாளை - வியாழக்கிழமை). ஞானவேல் இயக்கத்தில் அவர் நடிக்கும் வேட்டையன் படம் வெளியாகும் நாள்.
பெரிய இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் ரஜினி. கால மாற்றத்தில் தன்னை இந்தக் கால நடிகர்களோடு ஒப்பிடத் துவங்குவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். யாருமே எதிர்பார்க்காமல் ஒரு நாள் சட்டென்று சம்பந்தமே இல்லாமல் பா ரஞ்சித்தை அழைத்து அவரது படத்தை இயக்கச் செய்தார். இப்படி சொல்வது கூடச் சரியல்ல. ரஞ்சித்தின் இயக்கத்தில் அவர் நடித்தார். சாதாரண ரஜினி ரசிகர்களுக்கென்று இருக்க வேண்டிய காட்சிகள் மிகக் குறைவு. ஆனாலும் கபாலி மிகப் பெரிய வெற்றி. உடனடியாக அடுத்த படமும் ரஞ்சித் இவருக்கே இயக்க வேண்டி வந்தது. புதிய இயக்குனர்கள் எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது. அந்தந்த கால கட்டங்களில் வெற்றிப்படங்களைக் கொடுத்த கொடுக்கும் இயக்குநர்களைத் தனது பக்கம் வர வைத்தார். கார்த்திக் சுப்பாராஜ், சிவா, ஏ ஆர் முருகதாஸ் என அவர் முயற்சிகள் தொடர்ந்தது.
தர்பார், அண்ணாத்த என இரண்டு படங்களின் தோல்விகள் மறுபடியும் திரையுலகில் வழக்கமான பேச்சைக் கொண்டு வந்தன. ரஜினியின் ஆதிக்கம் முடிந்தது. அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டும். கேரக்டர் ரோல்களில் நடிக்கலாமென ஆரம்பித்தனர். வந்தது லோகேஷ் கனகராஜின் விக்ரம். கமல்ஹாசனுக்கு அவர் திரையுலக வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றி. பணம். புகழ். பொன்னியின் செல்வன் 1, விக்ரம் என அடுத்தடுத்து இண்டஸ்ட்ரி ஹிட். 500 கோடிகள் வசூல் என்று தமிழ்த் திரையுலகம் களைகட்ட ஆரம்பித்தது. முதலிடத்திலேயே நீண்ட காலம் இருந்து வரும் ரஜினிக்கு இது மிகப் பெரிய சவாலாக அமைந்தது.
வந்தது ஒரு அறிவிப்பு. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர். படம் அறிவிப்பும், முதல் பார்வையும் பெரிதாக ஈர்க்கவில்லை. நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் ரிசல்ட்டும் எதிர்பார்த்தவாறு இல்லை. ஆனாலும் இளைய தலைமுறை இயக்குனர்களுடன் பணியாற்றுவது எனது தான் எடுத்த முடிவிலிருந்து மாறத் தயாரில்லை ரஜினி. வந்தது ஜெயிலர். பின்னர் நடந்தது வரலாறு. மற்றுமொரு இண்டஸ்ட்ரி ஹிட். அவரது சிம்மாசனம் அவருக்கே என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜெயிலரின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு அவர் யாருடன் படம் செய்யப் போகிறாரென எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அடிபட்ட ஏகப்பட்ட பெயர்களில் த செ ஞானவேலின் பெயர் இல்லவே இல்லை. எப்படி ரஞ்சித்தையும் ரஜினியையும் எதிர்பார்க்கவில்லையோ அதே போல் தான். இவர் தான், இவர் தானென எதிர்பார்த்துக் கொண்டிருக்க திடீரென்று வந்த ஒரு அறிவிப்புதான் லைக்கா தயாரிப்பில் த சே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்.
ஜெய் பீம் என்று மிகப் பெரிய வெற்றிப்படம். அது ஓ டி டி வெளியீடாக அமைந்தும் கதைக்கும், பாசாங்கற்ற இயக்கத்திற்கும் பேசப்பட்ட படம் அது. சூர்யா தனது ஹீரோ என்ற முகத்தைக் கழற்றி வைத்து விட்டு ஒரு பாத்திரமாகவே மாறி இருந்தார். அப்படிப்பட்ட இயக்குனர் ஞானவேல். முன்னாள் பத்திரிகையாளர். சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர். இரண்டே படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். முதல் படம் வந்ததே பலருக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் இந்தப் புதிய கூட்டணி திரையுலகம் மட்டுமன்றி ரசிகர்களின் ஆவலையும் கூட்டியது.
படத்தின் காஸ்டிங் பற்றிய அறிவிப்புகள் வரத் துவங்கியதும் எதிர்பார்ப்பு ஏறத் தொடங்கியது. அமிதாப் பச்சன், பாஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா, அபிராமி, ரோகிணியென நட்சத்திரப் பட்டாளங்கள். ரஜினி படங்களே அடுத்த மொழிகளில் நல்ல வருவாய் ஈட்டும் வேளையில் இப்பொழுது பிடித்திருக்கும் பான் இந்தியா மோகம் இதில் இயல்பாகவே அமைந்து பிரம்மாண்டமாக உருவாகத் துவங்கியது வேட்டையன்.
என்கவுண்டர் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த். இது என்கவுன்டருக்கு எதிரான படம் என இரண்டே தகவல்கள் தான். வெகுநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் தூத்துக்குடி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். படத்தைப் பற்றிய வேறு எந்தத் தகவலும் வெளியாகாமல் கவனமாக இருந்தனர் படக்குழுவினர். சில ஸ்டில்கள் மட்டுமே வந்தன.
எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் கூடத் தெரியாத நிலையில் இமயமலை பயணத்தின்போது அங்கு இருந்த ஒரு ஆசிரமத்தில் இவர் யதார்த்தமாகச் சொன்ன விஷயம் தான் வேட்டையன் அக்டோபர் மாதம் தசராவை ஒட்டி வருகிறது என்பது. ஆனாலும் படக்குழுவிலிருந்து ஆதாரப்பூர்வமாக அறிவிப்புகள் வரவில்லை. எனவே சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் அக்டோபர் பத்து என்று அறிவிக்கப்பட்டது. இது நடந்து சில தினங்களிலேயே வேட்டையனும் அதே நாளில் வெளியாகும் என அறிவித்தது லைகா. இரண்டு படங்கள். ஒன்றுக்கொன்று போட்டியென முணுமுணுப்புகள் எழுந்தன.
கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தலைவர் படத்துடன் நாங்கள் மோதவே மாட்டோம் என்று முதலிலேயே அறிவித்திருந்தார். நாங்கள் பிறந்ததிலிருந்து இவர் நடிப்பை பார்த்து வளர்ந்தோம் அவருடன் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டார் சூர்யா. என் வழி தனி வழியென அவர் வசனத்துக்கேற்ப இவர் படம் வெளியாகும் தினம் வருவது சரியாக இருக்காது என அனைத்து ஹீரோக்களும் ஒதுங்கும் நிலை தான் இன்று வரை. ஒரே விதிவிலக்கு அஜீத் நடித்த விஸ்வாசம்.
அறிவிப்புகள் வந்ததே தவிர டீசர், ட்ரைலர், என எந்த ஏற்படும் தெரியவில்லை. இக்கால வழக்கப்படி முதல் சிங்கிள் 'மனசிலாயோ' வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தது. அது ஜெயிலரில் மிகப் பிரபலமான ஒரு வசனம். மனசிலாயோ வந்தது. இனிமேல் இந்தப் படத்திற்கு எந்த விளம்பரமும் தேவையில்லையென முடிவு செய்யும் அளவு ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இன்று வரை ஐம்பத்தி ஆறு மில்லியன் பார்வைகள். மூன்று லட்சங்களுக்கும் மேல் ரீல்கள்.
குறி வெச்சா இரை விழணும் என்று அவர் பிறந்த நாளன்று வெளிவந்த டைட்டில் அறிமுகத்தோடு காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர்கள் எதையெல்லாம் ரசிப்பார்களோ அதை மட்டும் வைத்து ஒரு டீசர் வந்தது. என்னடா இது ஜெயிலர் மாதிரியே இருக்கிறது என ஒரு சாரார் பேச ஆரம்பித்தனர்.
அடுத்து வந்த 'ஹண்டர்' பாடல் இன்னொரு அனிருத் வெடிகுண்டு. அடுத்தடுத்து இப்படித் தாக்கியதில் எதிர்ப்பார்ப்புகள் எகிற ஆரம்பித்தன. படத்தின் ட்ரைலர் கதையைக் கோடிட்டு காட்டியதோடு நிறுத்திக் கொண்டது. டீசரில் இருந்த பில்டப்புகள் ட்ரைலரில் குறைவு. "டீசர் ரசிகர்களுக்கு. ட்ரைலர் படத்தின் கதை என்ன என்று ரசிகர்களுக்குக் கோடிட்டு காட்டுவதற்கு" என்றார் இயக்குனர் ஞானவேல்.
"ரஜினி சாரை வைத்துப் படம் எடுக்கும்போது அவர் ரசிகர்களைக் கவனத்தில் கொள்ளாமல் எப்படி எழுத முடியும். அவரை வைத்து ஒரு சிறிய காட்சியை யோசித்தாலும் அது மாஸாகவே வந்து முடிகிறது. அவரின் ஆளுமை அப்படி. கதை கருத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும் தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்ற அவர் முதல் நோக்கம் என்னால் என்றும் பாதிக்கப்படாது. திரையில் பார்த்து வியந்த பல நட்சத்திரங்களை ஒரே படத்தில் நான் கொண்டு வரும்போது சும்மா பொம்மைகள்போல நான் காண்பிக்க முடியாது. இவர்கள் இருவரும் இருக்கும்போது இவர்களை மீறி நாங்கள் என்ன செய்து விட முடியும் என்று தான் ராணாவும் பாஹத்தும் கேட்டனர். அவர்கள் பாத்திரங்களை விளக்கியதும் ஒத்துக் கொண்டனர். அது அவர்கள் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது" என்கிறார் ஞானவேல்.
படத்தை முடித்துக் கொடுத்து விட்டுக் கூலி படப்பிடிப்பிற்குச் சென்று விட்டார் ரஜினிகாந்த். அங்கிருந்து வந்து வேட்டையன் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு ஐம்பது நிமிடங்கள் பேசிப் படத்தின் சூட்டை ஏற்றிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
திடீரென்று ஏற்பட்ட ஒரு உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி ஓய்வில் உள்ளார். நலமுடன் இருக்கிறார் பதினேழு அல்லது அக்டோபர் நான்காம் வாரம் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வாரெனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கோடிக்கணக்கில் வசூல் என்பதெல்லாம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே உண்டான ஒரு சாதனை. யாருமே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் ஜெயிலரின் மூலம் 600 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையைச் செய்தார் ரஜினி. வேட்டையன் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று இப்போதே சமூக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டனர். எந்நூற்றி ஐம்பது திரையரங்குகளுக்கு மேல் வெளியாக இருக்கும் வேட்டையன் அந்தச் சாதனையைத் தொடுமா என்பதெல்லாம் காலத்தின் கையில். ஆனாலும் ஒரு பட வெளியீட்டிற்கு அதன் வெற்றி தோல்விக்கு உலகெங்கும் ஒரு கவனிப்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது என்றால் அது சூப்பர் ஸ்டார் படங்களுக்கு மட்டுமே. இது சாதாரண சாதனையல்ல.
அக்டோபர் 10 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வேட்டையன் மட்டுமே திரையிடப்படுகிறது. முதல் நாள் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். இது சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் உள்ள நிலை. வெளிநாடுகளில் வேட்டையனை வரவேற்க பலவிதமான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே சொன்னது போல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே தலைவர். ஒரே சூப்பர் ஸ்டார். அது வேட்டையனிலும் தொடர்கிறது. படத்தின் வசூல் எல்லாம் தயாரிபாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும். ரசிகர்களுக்கு அவர் படங்கள் தரும் சந்தோஷங்கள், ஆர்ப்பரிப்புகள், அனுபவங்கள் அது மட்டுமே போதும்.