சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC என்ற விருதை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியிருக்கிறார். அப்போது அவர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து பேசியிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரலால் இந்திய மக்களின் மனதைக் கவர்ந்தவர். சில காலங்களிலேயே கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் என இந்தியா முழுவதும் இசையமைக்கத் தொடங்கினார். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது பாடல்களுக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருது வென்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல இடங்களில் கச்சேரி நடத்தி வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
பொதுவாக புதிதாக வரும் தொழில்நுட்பங்களையும் இந்தியாவில் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திப் பார்ப்பதில் விருப்பம் கொள்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தவகையில் கடந்த 2022ம் ஆண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் லீ மஸ்க் என்ற 5டி திரைப்படத்தை செயற்கைத் தொழில்நுட்பம் மற்றும் VR தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இயக்கியிருந்தார். இதற்காகதான் தற்போது விருது வாங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த விருது விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் உலகளவில் பிரபலமான தொழில்நுட்பங்கள் குறித்து பேசியிருந்தார். அதாவது, “இந்த உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக இங்கு விருது வாங்குவது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதுவும் நான் பிறந்த ஊரில் இந்த விருதை வாங்குவதில் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த தொழில்நுட்பம் கொண்ட 30 நிமிட படத்தைப் பார்த்தவர்கள் இது என்ன 10 நிமிட படமா? என்று கேட்டனர். ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட படம் என்பதால் அனைவரும் ரசித்தனர். ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது?
நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். VR தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் கோவில்களை சுற்றிப் பார்க்கலாம். திருமண நிகழ்ச்சிகளை உணர்வுப்பூர்வமாக ரசிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது.” என்று பேசியிருக்கிறார்.