இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைக்கோர்த்து இந்திய சினிமா வரலாற்றில் பிரம்மாண்டமாக உருவாகப்போகும் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து கலந்துரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ஹாலிவுட் சினிமாவில் வெளியாகி சாதனைப் படைத்த பாதிப் படங்களுக்கு ஹான்ஸ் ஜிம்மர்தான் இசையமைத்திருக்கிறார். Pirates of carribean படத்தில் வரும் இவரது இசையானது கேட்கும்போதெல்லாம் புல்லரிக்கும் விதமாக இருக்கும். அதுமட்டமல்லாமல் the lion king, Sherlock Holmes, inception, the dark knight, Dune, Interstellar, pearl harbour என உலகளவில் ஹிட்டாகி உலக மக்களைக் கவர்ந்த முக்கால் வாசி படங்களுக்கு இவர்தான் இசையமைத்திருக்கிறார்.
இப்படி பல உலகப் படங்களுக்கு இசையமைத்த இவர் இந்திய படம் ஒன்றுக்கு முதன்முதலாக இசையமைக்கவுள்ளார் என்றால், யாருக்குதான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் கூடாது.
ஆண்டாண்டு காலம் ராமாயணம் கதையைப் படமாகவும் சீரியல்களாகவும் எடுத்தாலும் இன்றுவரை யாரும் கதையில் இருக்கும் அதே உணர்வை மக்களுக்கு கொடுத்ததில்லை என்றே கூற வேண்டும். திருப்திகரமான சீரியல்கள் சில வந்தாலும் 2.30 மணி நேர படத்தில் அந்த உணர்வை கொடுப்பது மிக மிக கடினமே. ஏனெனில் ஒரு யுக வாழ்க்கையை வெறும் இரண்டரை மணி நேரத்தில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம்தான்.
சமீபத்தில் ராமாயண கதையில் எடுத்த ஆதிப்புருஷ் படம் விமர்சன ரீதியாக தோல்வியையே அடைந்தது. ஆனால் இம்முறை அப்படி நடக்காது என்றே கூறப்படுகிறது. ஏனெனில் அதற்கான ஏற்பாடுகளும் கடின உழைப்புகளும் மிகவும் அதிகம்.
இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஸன் வேலைகள் மட்டுமே வெகு நாளாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் படத்தை இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எடுக்காத பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அந்தவகையில் ராமாயண படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகிவுள்ளது. இதன் படப்பிடிப்பு விடியோ இணையத்தில் வைரலாகி வந்தன. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இதற்கு முன்னதாக ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாஷிடன் தான் பேசப்பட்டது. ஆனால் அவர் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பேன் என்று கேட்டு வாங்கி நடிக்கிறார்.
ராமாயண படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். அந்தவகையில் இந்தப் படத்திற்காகத்தான் ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் அவருடன் இணைந்து இசையமைக்கவுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.