Wrestling - ancient martial art Img Credit: Pinterest
கலை / கலாச்சாரம்

"கோதாவுக்கு வரியா?" கைக்குக் கை சண்டை! மல்யுத்தம் - மிகப் புராதனமான சண்டைக்கலை!

பிரபு சங்கர்

எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் கைக்குக் கை என்ற சண்டைவகைதான் மல்யுத்தம். உலக சரித்திரத்திலேயே மல்யுத்தம்தான் மிகப் புராதனமான சண்டைக் கலையாக இருந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இது இதிகாச காலந்தொட்டே பரவியிருக்கும் தற்காப்புக் கலையாகும்.

மல்லா-யுத் அல்லது மல்யுத்தப் போர் என்ற சொல் ராமாயணத்தில் காணப்படுகிறது. ராவணனுக்கும், வாலிக்கும் இடையே இந்தச் சண்டை நடைபெற்றதாக அதில் குறிப்பு உள்ளது. அதேபோல மகாபாரதத்திலும் கிருஷ்ணன், பலராமன் துரியோதனன் மற்றும் பீமன் ஆகியோர் மல்யுத்தப் போரில் ஈடுபட்ட சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களும் தமிழகத்தில் மல்யுத்த போட்டிகள் நிகழ்ந்திருப்பதைச் சொல்கின்றன.

மகாபாரத இதிகாசத்தில் ஆதி பர்வம், சபா பர்வம், விராட பர்வம் ஆகிய கட்டங்களில் பீமன் தன் மல்யுத்தத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறான். மகத மன்னன் ஜராசந்தனுடன் மல்யுத்தம் புரிந்து அவன் முதுகெலும்பில் தன் முழங்காலை அழுத்தி, எலும்புகளை ஒடித்து அவனை மாய்த்தான். அதேபோல தன் மனைவி திரௌபதியைத் துன்புறுத்திய மத்ஸ்ய நாட்டு தளபதியான கீசகனை மல்யுத்த நுட்பங்களால் வெறும் கைகளைக் கொண்டே அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் உடைத்து, பிய்த்து எறிந்து கொன்றான்.

பால கிருஷ்ணரும் தன்னைத் தாக்கத் தன் தாய்மாமன் அனுப்பிய சானூரன், முஷ்டிகன் என்ற அரக்கர்களை மல்யுத்த நுணுக்கங்களால் ஊனப்படுத்திக் கொன்றார். 

காந்தாரக் கலைச் சிற்பங்கள் சில மல்யுத்தச் சண்டையை வர்ணிக்கின்றன. இளவரசர் சித்தார்த்தர் (பின்னாளில் கௌதம புத்தரானவர்) போட்டியாளர் ஒருவருடன் மல்யுத்தம் செய்வதையும், சுற்றிலும் பலர் நின்றும், அமர்ந்தும் அதைக் காண்பதையும் போட்டியாளர்கள் இருவரும் ஒருவருடைய இடைத் துணியை அடுத்தவர் பற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் கீழே வீழ்த்த முயற்சி செய்வதையும் அந்த சிற்பங்கள் தெரிவிக்கின்றன.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, கிரேக்க நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதே மல்யுத்தம் இடம் பெற்று, இப்போதுவரை அங்கம் வகித்து வருகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 13ம் நூற்றாண்டில் ஜேஸ்தி-மல்லர் என்ற குலத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் குஜராத் மாநிலத்தின் மொதேராவைச் சேர்ந்த தொழில்முறை மல்யுத்த வீரர்கள். இந்த விவரம் மல்ல புராணம் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. வீரர்கள் மேற்கொள்ளும் தினசரி பயிற்சிகள், பருவ காலங்களுக்கேற்ப அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகள், போட்டிக் களத்தில் மல்யுத்தக் குழி வெட்டுதல், எதிரியைக் கையாளும் குறிப்புகள் என்று பல தகவல்கள் அந்நூலில் சொல்லப் பட்டிருக்கின்றன. மூட்டு முறித்தல், குத்துதல் முதலான தாக்குதல் மற்றும் எதிர்த் தாக்குதல் முறைகளையும் இந்நூலில் காணலாம். 

பலசாலி யார் என்று தீர்மானிக்கும் விளையாட்டுப் போட்டியாகவும் மல்யுத்தம் தமிழக கிராமங்களில் விளங்கியிருக்கிறது. மல்யுத்தப் பயிற்சிக் களங்களும், பயிற்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள்.

‘கோதாவுக்கு வரியா?‘ என்ற சவால் குரல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் ஒலித்தன. அதாவது குத்துச் சண்டை அல்லது மற்போர் என்ற மல்யுத்தம் நடைபெறும் களத்தை ‘கோதா‘ என்று அழைத்தார்கள். இதையொட்டியே அப்படி ஒரு அறைகூவல்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொண்ணூறுகள் வரை, ‘ரோஷமான குத்துச் சண்டை. பத்து ஜோடிகள் மோதுகின்றன,‘ என்ற அறிவிப்போடு சண்டை நடைபெறும் நாள், நேரம், இடம் எல்லாமும் தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் மல்யுத்தத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்ததில்லை. ‘பொதுவாகவே, குத்துச் சண்டையில் ரத்தம் பீறிடுவதையும், முகம், கை, வயிறு, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்படுவதையும் ஒருவகை குரூர சந்தோஷத்துடன் ரசிக்கும் மக்கள், உள்காயமாக (போலிஸ் தாக்குதல் போல) போட்டியாளர்களுக்கு ஏற்படும் ரணங்கள் கண்களுக்குத் தெரியாததால் மல்யுத்தத்தைப் பார்வையாளர்கள் ரசிப்பதில்லை,‘ என்கிறார்கள் விளையாட்டு சார்ந்த மனவள ஆய்வாளர்கள்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் ஃப்ரீஸ்டைல் என்ற பாணி இடம் பெறுகிறது. இதில் ஈடுபடும் வீரர்கள் தங்கள் கால்களை எதிரியின் கால்களை மடக்கி வீழ்த்தவும், தற்காப்பாக தன் உடலை எதிரி பற்றிவிடாதபடி மடித்து உயர்த்தி நிறுத்தவும்தான் பயன்படுத்த வேண்டும்; எதிரியை உதைக்கக் கூடாது. தாமதமின்றி, துரிதமாகச் செயல்படும் அசைவுகளுக்கும் இந்த விளையாட்டில் மதிப்பெண்கள் உண்டு.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT