ஆற்றின் நடுவே குறுக்குத்துறை முருகன் கோயில் 
கலை / கலாச்சாரம்

1000 வெள்ளத்தைக் கடந்து கம்பீரமாய் நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!

ம.வசந்தி

றுமுகக் கடவுள் முருகப்பெருமான் பெரும்பாலும் மலைகளிலும் குன்றுகளிலும்தான் வீற்றிருப்பார். ஆனால், ஆற்றின் வெள்ளத்திற்கிடையே 1000 வெள்ளத்தைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் குறுக்குத்துறை முருகப்பெருமான் கோயிலைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில் ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்ததும் மீண்டும் பொலிவோடு காட்சிதரும்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல் பாறைகள் தெய்வத் திருவுருவங்களை வடிப்பதற்கு ஏற்றதாக இருந்துள்ளது. இங்குள்ள பாறையில் இருந்துதான், திருச்செந்தூர் கோயிலின் மூலவர் திருவுருவம் வடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அப்படி திருச்செந்தூர் முருகப்பெருமானை உருவாக்கிய சிற்பி, மற்றொரு முருகன் விக்ரகம் செய்ய நினைத்து, இங்கிருந்த கல் பாறை ஒன்றில் வள்ளி, தெய்வானை உடன் கூடிய முருகனின் திருவுருவை செதுக்கினார்.

தாமிரபரணி ஆற்றுக்கு நீராட வந்தவர்கள் பலரும் இந்த முருகனை வழிபட்டனர். பின்னர், சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பாறையை ஒட்டி சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டது. இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையானது என நம்பப்பட்டது. இந்நிலையில், தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் துறையைச் சார்ந்தவர்கள் கல்வெட்டுகளை ஆராய்ந்ததில், இந்தக் கோயில் 950 ஆண்டுகள் பழைமையானது எனச் சொல்கிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

இங்குள்ள முற்றுப்பெறாத ஆறு வரி தகவல்கள் அடங்கிய  தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில்  கல்வெட்டு 950 ஆண்டுகள் பழைமையானது எனத் தொல்லியல் உதவிப் பேராசிரியர்கள் உறுதி செய்தனர்.

இது போன்று கோயிலின் உள்ளே உள்ள மண்டபத் தூண்கள் மற்றும் சுவர்ப் பகுதியில் 950 ஆண்டுகள் பழைமையான பல வகையான கட்டடக்கலை அங்கங்கள் மற்றும் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இந்தக் கோயிலின் கோபுரமும் கருங்கல்லால்தான் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கருங்கல் கோபுரத்திற்கு மேல் தற்போது தங்க நிற வர்ணம் பூசப்பட்டுள்ளதால் இதன் தொன்மையை கண்டறிய பலராலும் முடியவில்லை.

இங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மண்டபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆற்றுத் தண்ணீரை பிரித்து மடை மூலம் கொண்டு செல்வதை விளக்குகிறது. இதுவும் 950 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு என உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இக்கோயிலின் கருவறையும் மூலவர் சிலையும் பாறையைக் குடைந்தே வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் மண்டபமும் கோபுரமும் 950 ஆண்டுகள் பழைமையானது என்று கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக அமைக்கப்பட்ட இந்தக் கருவறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனக் கணிக்க முடிகிறது. ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தைத் தாக்குப்பிடித்து நிற்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், சுமார் 1000 வெள்ளப் பெருக்கை இந்தக் கோயில் தாக்குப்பிடித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்தக் கோயிலின் கட்டடக்கலையே ஆகும். வெள்ளம் உள்ளே வரும்போதும், வெள்ளம் வடியும்போதும் எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்ற வகையில் மிகவும் நுட்பமாக இக்கோயிலைக் கட்டியுள்ளனர். இத்தகைய பெருமையைப் பெற்ற இந்தக் கோயிலின் கட்டடக்கலை நுட்பத்தை உலகறியச்  செய்ய தொல்லியல் பேராசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

கமல் வைத்து ஒரு மொக்கை படத்தை இயக்கினேன்… ஆனால்… – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்!

டேஸ்டியான வாழைத்தண்டு பால் கறி மற்றும் முட்டை ஊறுகாய் செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT