Do you know about Chitrai Vishukani and Kai Neettam extension? 
கலை / கலாச்சாரம்

சித்திரையில் விஷுக்கனி காணுதலும் கைநீட்டமும் பற்றி தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

மிழ் வருடப் புத்தாண்டு தினமான சித்திரை பண்டிகை நாளைய தினம் அனைவர் வீடுகளிலும் கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பூஜை அறைகளில் வயதான பெண்கள் அல்லது குடும்பத் தலைவிகள் மாக்கோலமிட்டு கனி காணல் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்வார்கள். அதன்படி புத்தாண்டு தினத்தில் அதிகாலை கனிகாணல் நிகழ்ச்சி நடைபெறும். அதாவது ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்பு ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், காய்கறிகள், புதிய பட்டுத் துணி, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாசனை மலர்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைப்பார்கள்.

இவற்றோடு, இராமாயணம் உள்ளிட்ட தெய்வீக புத்தகங்களும் வைக்கப்பட்டிருக்கும். வெண்கல உருளிகளில் காசுகள் அல்லது ரூபாய் நோட்டுகள், பல்வேறு பாத்திரங்களில் அரிசி, உப்பு, சர்க்கரை மற்றும் தானியங்களையும் நிரப்பி வைத்திருப்பார்கள். நிலைக்கண்ணாடிக்கு தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டு இருக்கும். மேலும், ஸ்ரீகிருஷ்ணரின் சிலை அல்லது வண்ண ஓவியம் மற்றும் மயிலிறகு ஆகியவற்றையும் பூஜை அறையில் வைத்து விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.

அன்று அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கை அறையில் இருந்து எழும் வயதான பெண்கள் அல்லது குடும்பத் தலைவிகள் கண்களை திறக்காமல் நேராக பூஜை அறைக்கு வந்து அங்கு முந்தைய நாள் இரவு படைத்து வைத்திருக்கும் கனிகளின் முன்பு கண் விழிப்பதுதான் கனிகாணல் என்பதாகும். இதைத்தான் விஷுக்கனி காணல் என்பார்கள். கனி கண்டதும் குடும்பத் தலைவிகள் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கண்களைக் கட்டி அழைத்து வந்து கனி காணச் செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் மங்கலம் பொங்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை.

சித்திரை விஷு பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கைநீட்டம் வழங்குவதும் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கமாகும். ‘சித்திரை வந்தால் பொருள் கோடி தந்தாள்’ என்று கூறும் வகையில் கை நீட்டத்தை பொறுத்தவரையில் அவரவர் வசதிக்கேற்ப காசு பணம் மற்றும் பொருட்களை கை நீட்டமாக வழங்குவார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள், சிறுவர், சிறுமிகள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.

அப்போது பெரியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பேரன் பேத்திகளுக்கும், உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் போன்றவருக்கு வசதிக்கேற்ப தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காய்கறிகள் கொன்றை பூ மலர்கள் அரிசி உள்ளிட்டவற்றை கைநீட்டமாக வழங்குவார்கள். ஒருவருக்கொருவர் காசு பணங்களை பரிமாறிக் கொள்ளும் பழக்கமாகவும் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதே இதன் சிறப்பாகும்.

விஷு தமிழ் புத்தாண்டு கேரளாவில் உள்ள எல்லா கோயில்களிலும் கை நீட்டம் நடைபெறுவதைப் பார்க்க முடியும். ஆனாலும், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்களில் நடைபெறும் கைநீட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள் கேரள மக்கள்.

நாமும் நம் தமிழர் பண்டிகையான தமிழ் புத்தாண்டு குரோதியாண்டினை வரவேற்கும் விதமாக விஷுக்கனி கண்டு கை நீட்டம் கொடுத்து கோயில்களுக்குச் சென்று தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT