நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோயில் 
கலை / கலாச்சாரம்

நீருக்குள் மூழ்கியிருக்கும் அதிசய சிவன் கோயில்!

பொ.பாலாஜிகணேஷ்

ழைமையான பல சின்னங்களையும், சிறப்புகளையும் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோயில் ஒன்றும் இருப்பது பலருக்கும் தெரியாது. இங்கிருக்கும் குடைவரைக் கோயில்களும், பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைத்துவரும் இயற்கை வண்ண சுவரோவியங்களும், அற்புதமான சிற்பங்களும், கோட்டைகளும், பழைமை வாய்ந்த கோயில்களும், அகழ்வாராய்சியில் கிடைத்த தொன்மைச் சான்றுகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை. இங்கே, மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை மற்றும் பொன் மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் உள்ளன.

மலை மீது இருக்கும் சுனை

இவற்றுள், இந்தப் பகுதிக்கு மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது மேலமலை. இங்கேதான் இருக்கிறது சிறப்பு மிக்க விஜயாலய சோழீஸ்வரம் கோயில். மேலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது விஜயாலய சோழீஸ்வரம். இங்கே செல்லும் வழியில் தலையருவி சிங்கம் சுனை ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 15 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த சுனைக்கு உள்ளே உள்ள ஜுரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோயிலில் குடைந்தே வடிக்கப்பட்ட அழகிய லிங்கம் ஒன்று இருக்கிறது.

இந்த லிங்கம் இந்தக் கோயிலைப் போலவே, பாறையிலேயே குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. வழுவழுப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கத்தை சதுர வடிவிலான குடைவரைக் கோயிலுக்குள் சென்று வழிபடலாம். சுமார் 6 அடி கொண்ட அந்த கோயிலை பார்ப்பதற்கு அழகாகவும், வியப்பாகவும் இருக்கும்.

நார்த்தாமலை சிவன் கோயில்

இந்த அரிய குடைவரைக் கோயிலுக்குச் செல்ல அந்த சுனையின் பள்ளத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். அருகிலேயே கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் 1857ம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணியால் இந்த சுனை நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சுனை பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிறைந்தே காணப்படும். எனவே, அங்கு இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கோயில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் குடவரைக் கோயில் ஆகியவற்றையும் கண்டு தரிசிக்கலாம். மேலும், பல்வேறு சிறப்புமிக்க சிற்பங்களையும் இங்கு கண்டு ரசிக்கலாம். இந்தப் பகுதியில் இருக்கும் இடங்களைப் பார்த்து ரசித்து வியக்க ஒரு நாள் போதாது.

நிலவில் எரிமலைகளைக் கண்டுபிடித்த சீனா… எதிர்காலக் கனவு பலிக்குமா? 

தினமும் ஒரு கைப்பிடி வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

சமுத்திரத்தில் வாழும் அதிசய பாலூட்டி விலங்கு கடல் பசு!

சமூக மாற்றத்தில் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு!

இது மட்டும் தெரிந்தால், உங்க கார் இருக்கைகளைப் பார்த்தாலே பயப்படுவீங்க! 

SCROLL FOR NEXT