Do you know the history of India's largest national library?
Do you know the history of India's largest national library? https://kolkatatourism.travel
கலை / கலாச்சாரம்

இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் உருவான வரலாறு தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

1836ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி துவக்கப்பட்ட இந்த இந்திய நூலகத்திற்கு என்று சில விசேஷ சிறப்புகள் உள்ளன. அவை இந்திய நாட்டின் முக்கியமான ஆவணங்களின் நகல்களை பாதுகாக்கும் பொறுப்பை பெற்ற ஒரே இந்திய நூலகம் இது. வருடத்தில் 362 நாட்கள் திறந்திருக்கும். மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே மூடி இருக்கும் நூலகம்.

நூலகத்தின் பிரதான ஹாலில் வாசகர்கள் படிப்பதற்கு சிறப்பு அனுமதி சீட்டு வாங்க வேண்டும். புத்தக விநியோகச் சட்டத்தின் கீழ், நாட்டில் வெளியிடப்படும் ஒவ்வொரு வெளியீட்டின் ஒரு பிரதியைப் பெற இந்த தேசிய நூலகத்திற்கு உரிமை உண்டு. சிறப்பு அம்சங்கள் பொருந்திய முக்கியமான ஆவணங்களை தேவையான நேரத்தில் கொடுத்து உதவும் நூலகம். அயல்நாட்டு மொழிகளின் வளர்ச்சியில் உதவி புரியும் நூலகம். அயல்நாட்டு மொழிகளின் இலக்கியங்களை தருவித்து தரும் பொறுப்பு இந்த நூலகத்தையே சாரும். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தமானதுதான். இந்திய தேசிய நூலகம்.

இந்தியாவின் தேசிய நூலகம் கொல்கத்தா மாநிலம், அலிப்பூரில் உள்ள பெல்வெடேர் என்ற இடத்தில் 1893ல் கட்டப்பட்டது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய தேசிய நூலகத்தின் பரப்பளவு 30 ஏக்கர் நிலப்பரப்பு ஆகும். இந்தியாவில் காணப்படுகின்ற சேகரிப்பு நூலகங்களில் தேசிய நூலகமும் ஒன்று.

பொதுமக்களின் நலனுக்காக தேசிய நூலகம் 1953ல் பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 1990ம் ஆண்டு வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது 22 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்திய தேசிய நூலகத்தில் சுமார் 2.2 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் நேஷனல் நூலகம் கல்கத்தாவில் 1836ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி எஸ்பிளான்டோ பகுதியில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. அப்போது அதன் பெயர், ‘கல்கத்தா பொது நூலகம்.’ இதனை அரசின் எந்தவொரு உதவியுமின்றி தனியாக நடத்தியவர் ஜே.ஹெச்.ஸ்டாக்ளியர். இவர் இங்கிலிஷ் மெயில் பத்திரிகை ஆசிரியர். இவர்தான் பொதுமக்கள் பயன்பெற ஒரு நூலகம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தவர். இதனை ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அன்றே ஏகப்பட்ட சந்தா வசூலானது. 6500 புத்தகங்கள் நன்கொடையாக வந்தன.

டாக்டர் எப்.பி.ஸ்ட்ராங் தன்னுடைய நிலத்தை நூலகம் அமைக்கக் கொடுத்தார். ஸ்டாக்ளியர் நூலக செயலாளராகவும், ஸ்டேசி என்பவர் முதல் நூலகராகவும் பணியாற்றினார்கள். கல்கத்தா நூலகம் ஆரம்பத்தில் அச்சிடப்பட்ட விஷயங்களைப் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இம்பீரியல் நூலகத்துடன் கொல்கத்தா நூலகம் இணைத்து ஒருமித்த நூலகமாக1891ம் ஆண்டு மாற்றப்பட்டதே இன்றைய தேசிய நூலகம் ஆகும்.

ஆரம்பத்தில் தனியாருடைய நூலகமாகவே இயங்கி வந்தது. பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். பின்னர் கர்ஷன் பிரபு காலத்திலேயே இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் அனைத்துத் தரப்பு மக்களும் நூலகம் சென்று படிக்கும் படியாக 1902ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் துவக்கப்படும் எந்த நூலகமானலும் அதை யாரும் சென்று படிக்கலாம், நூல்களை எடுக்கலாம் என்ற நிலை மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசு இம்பீரியல் நூலகத்தின் பெயரை மாற்றி, ‘தேசிய நூலகம்’ என்று பெயரிட்டது. பிப்ரவரி 1, 1953 அன்று கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தால் திறந்து வைக்கப்பட்டது. கொல்கத்தா தேசிய நூலகத்தின் முதல் நூலகராக பி.எஸ்.கேசவன் நியமிக்கப்பட்டார்.

இந்த நூலகத்தில் இந்தியாவில் பேசப்படும் மற்றும் புழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் செய்தித்தாள்கள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட பல நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளும், வரைபடங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

இந்த நூலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இவை தவிர இந்தியாவின் பொது விடுமுறை நாட்களான காந்தி ஜயந்தி மற்றும் சுதந்திர தினம் போன்ற தினங்களில் மூடப்பட்டும் இருக்கும். இந்திய தேசிய நூலகமானது இந்திய நாட்டின் அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

இங்கு வங்காளம், இந்தி, தமிழ், ரஷ்ய, அரபிய, பிரெஞ்சு போன்ற மொழிகளிலான சேகரிப்புக்கள் மற்றும் நூல்கள், பத்திரிகைகள் போன்ற பல வெளியீடுகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது தொன்மை வாய்ந்த மொழியாகக் கருதப்படும் தமிழ் மொழியின் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிச்சுவடிகளும் இந்திய தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, நாட்டின் அரசு ஆவணங்கள் உட்பட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற முக்கியமான நாட்டு ஆவணங்கள் தேசிய நூலகத்தில் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது, கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கணம், அறிவியல், விஞ்ஞானம், நவீனம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறை சார்ந்த நூல்களும் இங்கு உள்ளன.

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

SCROLL FOR NEXT