உலகின் மர்மமான கோயில்கள் வரிசையில் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலும் ஒன்று. ‘இந்தியாவின் அங்கோர்வாட்’ என்று அழைக்கப்படுகிறது உனக்கோடி ஆலயம். திரிபுராவின் தலைநகரான அகர்த்தலாவில் இருந்து 178 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உனக்கோடி ஆலயம். இக்கோயிலில் உள்ள சிலைகளும், பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் அதிசயித்துபோகும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உனக்கோடி என்பதற்கான பொருள், கோடியில் ஒன்று குறைவு என்பதேயாகும். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது. இக்கோயில் உனக்கோடி மாவட்டத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது.
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயில் போலவே இக்கோயிலும் இருப்பதால் இதை, ‘இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அங்கோர்வாட் கோயில்’ என்று அழைப்பதுண்டு. இக்கோயிலில் உள்ள சிலைகள் ரகுநந்தன் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 99,99,999 சிலைகள் உள்ளன.
இந்தக் கோயிலில் இரண்டு வகையான சிற்பங்கள் உள்ளன. ஒன்று கற்களால் ஆன சிலைகள், இன்னொன்று பாறையில் செதுக்கப்பட்ட சிலைகளாகும். இங்கே இருக்கும் சிவன் சிலையும், விநாயகர் சிலையும் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு பெரிதாகவும், அழகாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள 30அடி உயர சிவனின் சிலை, ‘உனக்கோடீஸ்வரர் கால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், சிவனின் சிலைக்கு இரு பக்கத்திலும் பெண் சிலைகள் உள்ளன. அதில் ஒன்று துர்கை சிங்கத்துடன் காட்சி தருவதாகும். இக்கோயிலில் மூன்று பெரிய நந்தி சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு சமயம் சிவபெருமானும் அவருடன் 99,99,999 தேவர்களும், தேவிகளும் காசிக்கு சென்று கொண்டிருந்தனர். மாலை வேளையானதால் இவ்விடத்திலேயே தங்கிவிட்டு, மறு நாள் காலை காசிக்கு போகலாம் என்று தேவர்கள் கூற, சிவபெருமானோ, ‘சூரிய உதயத்திற்குள் எழ வேண்டும்’ என்ற நிபந்தனை விதித்தார். ஆனால், சூரிய உதயம் ஆன பிறகும் தேவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிவபெருமான் அவர்களை கல்லாகும்படி சபித்துவிட்டு அவர் மட்டும் காசிக்கு சென்று விட்டாராம். அதனால்தான் இவ்விடம் இப்பெயரைப் பெற்றது என்று கூறுகின்றனர்.
எனினும், அவ்வூரில் இருக்கும் மக்கள் வேறு கதையும் சொல்கின்றனர். கல்லு குர்ஜார் என்னும் சிற்பியே இச்சிலைகளை வடித்தார் என்று நம்புகின்றனர். இவர் பார்வதி தேவியின் தீவிர பக்தர் ஆவார். ஒரு சமயம் சிவனும், பார்வதியும் கயிலாய மலைக்கு சென்று கொண்டிருக்கையில், கல்லுவும் அவர்களுடன் கயிலாயம் வர வேண்டும் என்று வேண்டுகிறார். இதனால் பார்வதி தேவி அவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்க, ஈசன் ஒரு நிபந்தனையின் பேரில் அவரை உடன் வர அனுமதிக்கிறார். அதாவது விடிவதற்குள் கல்லு குர்ஜார் 1 கோடி சிற்பங்களை வடித்துவிட்டால் நம்முடம் கயிலாயம் வரலாம் என்பதே அந்த நிபந்தனை. இதைக் கேட்ட சிற்பி உடனே சிற்பங்களை செதுக்கத் தொடங்குகிறார். ஆனால், விடிவதற்குள் அவரால், 99,99,999 சிற்பங்களையே செதுக்க முடிந்தது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அசோகாஷ்டமி அன்று இத்தலத்தில் மேளா கொண்டாடப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய தொல்லியல் ஆய்வு மையம் இக்கோயிலை பாதுகாத்து வருகிறது. இக்கோயிலை புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்ற அரசாங்கம் 12 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. டிசம்பர் 2022ல் இக்கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பது.
அதிசயம் மிகுந்த இக்கோயில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. ‘மறைந்திருக்கும் மாணிக்கம்’ போல இவ்விடத்தின் பெருமைகளை இப்போதுதான் சுற்றுலா பயணிகள் உணர்ந்து இங்கே வருகை தர ஆரம்பித்துள்ளனர்