இந்தியாவின் சிறப்புமிக்க வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியமானது பலநூறு ஆண்டுகளாகவே பல்வேறு விதமான பணத்தின் பரிணாமத்தைக் கண்டுள்ளது. இதில் கவுரி குண்டுகள் முதல், நவீன கால டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே அடங்கும். அத்தகைய பணத்தின் உண்மையான உருமாற்றத்தை நாம் அறியாமல் போனால் எப்படி? எனவே இந்த பதிவில் இந்தியாவில் பணமானது எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதை ஆராய்வோம்.
கவுரி குண்டுகள் (Cowrie Shells) மற்றும் பண்டமாற்று முறை: பண்டைய கால இந்தியாவில் பண்டமாற்று முறை மற்றும் கவுரி குண்டுகளின் பயன்பாடு வர்த்தகத்திற்கான வழிமுறையாக இருந்தது. இந்தியப் பெருங்கடல் கரையோரத்தில் ஏராளமாகக் காணப்படும் கவுரி குண்டுகள், அதன் நீடித்த தன்மை காரணமாக நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய காலத்தில் பரிவர்த்தனைகளுக்கு பரவலாக கவுரி குண்டுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை இந்தியாவில் வர்த்தகத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன. அதேபோல பண்டமாற்று முறை எனப்படும் ஒரு பொருளைக் கொடுத்து, ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் வழிமுறையும் அதிகமாக இருந்தது.
உலோக நாணயங்கள்: பேரரசுகள் மற்றும் வர்த்தகக் கூட்டங்களின் எழுச்சியால், உலோக நாணயங்கள் இந்தியாவில் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக குப்தா பேரரசு (கிபி 4 முதல் 6ம் நூற்றாண்டு வரை) ‘தினாரஸ்’ எனப்படும் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியது.
பின்னாளில் இந்த நாணயமே நிலையான நாணயமாக மாறி, ‘ரூபாகாஸ்’ எனப்படும் வெள்ளி நாணயங்களும் அச்சிடப்பட்டன. இந்த நாணயங்களின் பயன்பாடு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து பேரரசுகளுக்கு மத்தியிலும், அதற்கு அப்பாலும் வர்த்தக உறவுகளை வளர்த்தது.
சுல்தான்கள் மற்றும் முகலாய நாணயங்கள்: உலோக நாணயங்களின் வருகைக்குப் பிறகு, டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களைப் போன்ற பல்வேறு வம்சங்கள், அவர்களுக்கு சொந்தமான நாணயங்களை வெளியிட்டனர். இவை தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்பட்டது.
இதில் சில நாணயங்கள் சிக்கலான வடிவமைப்பு மற்றும் மன்னர்களின் கையெழுத்து ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இவை ஒவ்வொரு ராஜ்ஜியத்தின் அதிகாரச் சின்னங்களாக செயல்பட்டன. குறிப்பாக, முகலாயப் பேரரசின் தரமான நாணய முறை நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பண அமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது.
காகித பணத்தின் அறிமுகம்: 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையால், இந்தியாவின் பணப் பயன்பாடு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்தது. ஆங்கிலேயர்கள் 1770-ல் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான் மற்றும் 1809-ல் பெங்கால் வங்கி போன்றவற்றில் காகிதப் பணத்தை அறிமுகம் செய்தனர்.
தொடக்கத்தில் தனியார் வங்கிகளாலும் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்ட காகிதப் பணமானது, காலனித்துவ காலத்தில் பரிவர்த்தனைகளை எளிதாக்கி வர்த்தகத்தை மேம்படுத்தியது.
ரூபாயின் எழுச்சி: 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டில் தொடர்ச்சியான பண சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. 1957-ல் Decimal Currency System ஏற்றுக்கொள்ளப்பட்டு, Anna மற்றும் Paisa போன்றவை நவீன ரூபாயாக மாறின.
பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கும், ஒழுங்கு படுத்துவதற்கும் மைய அதிகாரமாக மாறியது. பின்னர் இந்திய ரூபாயின் தனித்துவமான ₹ சின்னமானது நாட்டின் அதிகாரப்பூர்வ பணக் குறியீடாக மாறியது.
டிஜிட்டல் மற்றும் பணமில்லா பொருளாதாரம்:
கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியா விரைவான மாற்றத்தைக் கண்டுள்ளது. 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன் பே போன்ற மொபைல் கட்டண தளங்களை பரவலாக ஏற்றுக் கொண்டதால், இந்த மாற்றம் துரிதமாக நடந்துள்ளது எனலாம்.
நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம் தொடங்கப்பட்ட UPI ஆனது, பணப் பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கடக்கான இந்தியர்கள் டிஜிட்டல் பேமெண்ட்களை எளிதில் அணுகக்கூடிய வசதியாகவும் மாறியுள்ளது.
இந்திய பணத்தின் எதிர்காலம்: இந்தியா டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மின்பணம் எனப்படும் கிரிப்டோகரன்சிகளின் வருகையால், எதிர்காலத்தில் கையில் பணம் இல்லாமல் வர்த்தகம் செய்யும் சூழல் ஏற்படுமோ எந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கிரிப்டோகரன்சிகளில் சில பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை முறையாக வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் இந்திய பணம் எப்படி இருக்கும் என்பது புதிராகவே உள்ளது.
இந்தியாவில் பணத்தின் பரிணாம வளர்ச்சியானது நாட்டின் கலாச்சார பாரம்பரியம், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கிறது. கவுரி குண்டுகள் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வரை ஒவ்வொரு கட்டமும் நாட்டின் பண வரலாற்றில் அழியாத முத்திரைகளாகும். இதன் அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள, நாம் இன்னும் சில பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.