அறிவிலும் வீரத்திலும் குணநலன்களிலும் சிறந்து விளங்கியவர்களே அன்றைய காலகட்டத்தில் அரசனாக ஆட்சி புரிந்தார்கள். என்னதான் வம்சாவழியாக அரசர்கள் வந்தாலும் கூட அவர்களில் யார் மக்களுக்கான ஆட்சியை நடத்தினார்களோ அவர்களின் பெயரையே வரலாறுகள் இன்னும் தாங்கி நிற்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு பல்லவ அரசன் தான், மகேந்திரவர்மன்.
பல்லவர் காலத்தில் தோன்றிய தலைசிறந்த அரசன் மகேந்திரவர்மன். கி.பி 600 முதல் 630 வரையிலான காலகட்டங்களில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தவர் இந்த மகேந்திரவர்மன். இன்று நாம் வரலாற்று சின்னங்களாக பார்க்கக்கூடிய பல்வேறு கலை அம்சங்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் இந்த பல்லவ மன்னர்கள் தான். தமிழ்நாட்டின் பாரம்பரியம் என்று நாம் சொல்லக்கூடிய மிகப்பெரிய கோவில்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள் இந்தப் பல்லவர்கள் தான். அத்தகைய பல்லவ அரசர்களில் மிகவும் சிறந்து விளங்கியவர் மகேந்திரவர்மன். ஒவ்வொரு கலையிலும் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை இப்பதிவில் காணலாம்.
கட்டடக்கலைகள்:
மகேந்திரவர்மனின் காலத்துக்கு முன்பு கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் எங்கும் இருந்ததில்லை. அவை பெரும்பாலும் சுண்ணாம்பு, மரம், செங்கல் கொண்டு தான் கட்டப்பட்டிருந்தன. மகேந்திரவர்மன் காலத்தில் தான் முதன் முதலாக கருங்கல் பாறைகளை குடைந்து கோவில் மண்டபத்தையும் கோவில் கருவறையும் அமைத்தார்கள். இவ்வாறு அமைக்கப்பட்ட கோவில்கள் தான் குகை கோயில்கள். பெரும் பெரும் கருங்கற்களை சுவர்களாய் எழுப்பி கோவில் கட்டும் வழக்கமும் மகேந்திரவர்மன் காலத்தில் தான் ஏற்பட்டது. செங்கற்களால் கட்டப்படும் கோயில்கள் இருநாட்டு மன்னர்களுக்கு இடையே போர் ஏற்படும்போது எதிரிகளால் அழிபடக்கூடும் என்பதால் வரலாற்றை நிலை நிறுத்துவதற்காகவே கரும்பாறைகளைக் கொண்டு கோவில்களை கட்டினார். தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட குகை கோயில்கள் உள்ளன. முதன் முதலாக தமிழ்நாட்டில் குகை கோயில்களை அமைத்தவர் மகேந்திரவர்மனே.
மகேந்திரவர்மனின் உருவம் திருச்சி மலைக் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளது. திருச்சி, பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம், திண்டிவனம் அருகே உள்ள தளவானூர், காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள மாமுண்டூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் இங்கெல்லாம் மகேந்திரவர்மன் அமைத்த குகை கோயில்களை பார்க்கலாம்.
சிற்பக் கலைகள்:
கட்டடக் கலையில் புகழ்பெற்று விளங்கிய மகேந்திரவர்மன் சிற்பக் கலையிலும் மிக பல அரிய சாதனைகளை செய்திருக்கிறார். திருச்சி மலைப்பாறையில் கர்ப்ப கிரகத்தின் எதிரில் உள்ள பாறை சுவரில் கங்காதர மூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிற்பம் சுமார் ஏழு சதுர அடி உடையது. உலகத்தை அழித்து விடுவேன் என்று பெருவெள்ளமாக பாய்ந்து வந்த கங்கையை சிவபெருமான் ஒரு துளி அளவாக தமது சடமுடியில் ஏற்றுக் கொண்டதை இந்த சிற்பம் காட்டுகிறது. கங்கையின் வரலாற்றை சொல்லோவியமாக திருநாவுக்கரசர் பாடி இருப்பார். அவர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன், தான் அமைத்த குகை கோவிலில் அதனை கல் ஓவியமாக அமைத்து இருப்பார்.
மகேந்திரவர்மனது புகழ்பெற்ற மற்றொரு சிற்பம் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாறை சிற்பமான அர்ச்சுனன் தபசு. இந்த அழகான சிற்பம் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்டு இவரது மகன் நரசிம்மன் காலத்தில் முடிக்கப்பட்டது. அர்ஜுனன் தபசு சிற்பம் ஏறக்குறைய 96 அடி அகலமும் 43 அடி உயரமும் உள்ள செங்குத்தான பாறையில் செதுக்கப்பட்டிருக்கும். இந்த பழம்பெரும் பாறையில் நடுப்பகுதி பிளவுப்பட்டு நீர்வீழ்ச்சி போல அமைந்திருக்கும். கண்ணைக் கவரும் வகையில் இருக்கக்கூடிய இந்த சிற்பமானது சிற்பக் கலையில் மகேந்திரவர்மனுக்கு இருந்த மிகப்பெரிய ஈடுபாட்டை காட்டுகிறது.
செஞ்சிக்கு அருகில் உள்ள அரங்கநாதர் கோவிலில் கொற்றவையின் உருவம் புடைப்புச் சிற்பமாக இருக்கும். கொற்றவை வெற்றிக்கும் வீரத்திற்கும் அடையாளமாக பார்க்கப்படும் பெண் தெய்வமாகும். அதனை வலியுறுத்தியே இவர்கள் கொற்றவையின் வடிவத்தை புடைப்புச் சிற்பமாக செதுக்கினர். மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படக்கூடிய கொற்றவையின் உருவங்கள் அவர்களது வெற்றியை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம்.
ஓவியக்கலை:
மகேந்திரவர்மன் ஓவியக் கலையிலும் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தார். இவருக்கு சித்திரகாரப் புலி எனும் பெயர் இருந்ததாக காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தில் உள்ள தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இவர் ஓவியக் கலையிலும் நன்கு புலமை பெற்று இருந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் இவர் தக்ஷிண சித்திரம் எனும் ஓவிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மகாபலிபுரம் வராக பெருமாள் குகை கோவிலில் மகேந்திரவர்மனுடைய ஓவியச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அத்தகைய காலங்களில் ஓவியங்கள் கரும் பாறைகளிலே தீட்டப்பட்டன. இரண்டு அரம்பையரின் நடன காட்சியும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர் ஓவியக் கலையிலும் சிறந்து விளங்கினார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
மகேந்திரவர்மனது பெரும்பாலான ஓவியங்கள் சித்தன்னவாசல் குகை கோயிலில் காணப்படுகின்றன. அவர் காலத்தில் வரையப்பட்ட பெரும்பாலான ஓவியங்கள் கால நகர்வின் காரணமாக அழிந்து போய் நமக்கு கிடைத்தது மிகச் சொற்பமே.
இசை கலை:
மகேந்திரவர்மன் மற்ற கலைகளைப் பயின்றது போலவே இசைக்கலையையும் நன்கு பயின்று அக்கலையிலும் சிறந்து விளங்கினார் என்பதை இவருக்கு வழங்கிய சங்கீர்ணா ஜாதி எனும் சிறப்பு பெயரின் மூலம் அறிந்து கொள்ளலாம். சங்கீர்ண ஜாதி என்பதற்கு இசை கலையில் வல்லவன் என்பது பொருள். மேலும் சங்கீர்ண ஜாதி என்பது தாளத்தின் ஒரு வகை என்று கூட சொல்லலாம். குடுமியான்மலை கல்வெட்டுகள் தான் இசையைப் பற்றிய குறிப்புகளை தரும் கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டில் வீணையைப் பற்றிய இசை குறிப்புகளும், ஒன்பது நரம்பினையுடைய இசைக்கருவியை பற்றிய குறிப்புகளும் உள்ளன. இவையாவும் பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவையே.
நாடகக்கலை:
கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மகேந்திரவர்மன், நாடகக்கலையிலும் வல்லவராக விளங்கினார். இவர் எழுதிய மத்தவிலாசப் பிரஹசனம் எனும் நாடக நூல் மிகவும் புகழ்பெற்றது. இது ஒரு நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த நாடகம் நூல் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் வாழ்வில் கலைகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. மக்களது அன்றாட வாழ்வியலில் கலையானது கலந்தே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது வெற்றியையும் வீரத்தையும் கொண்டாடவும், தங்களது மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ளவும், துன்பங்களில் இளைப்பாறவும் மிகப்பெரிய ஆயுதமாக கலைகளையே பயன்படுத்தினர். கலைகள் என்பது நம் மன காயங்களுக்கு மருந்திடக்கூடிய மிகப்பெரும் வரமாகவும் மனிதர்களின் வாழ்க்கையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்லும் பொக்கிஷமாகவும் இருந்து வருகின்றன. இதை வலியுறுத்தியே மகேந்திரவர்மன் தான் ஒரு அரசனாக இருந்தும் கூட பலவிதமான கலைகளைக் கற்று அதில் மிகவும் வல்லமை பெற்று விளங்கினார். சமூகத்தினுடைய ஒட்டுமொத்த வடிவமாக மகேந்திரவர்மன் இருந்ததால் அவருடைய காலத்தில் தென்னிந்தியா ஒரு பொற்காலமாக இருந்தது.