Kaanporai Kattiyizhukkum Kanadukaathan Palace 
கலை / கலாச்சாரம்

காண்போரைக் கட்டியிழுக்கும் கானாடுகாத்தான் அரண்மனை!

கண்மணி தங்கராஜ்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை. இது தமிழரின் கட்டடக்கலை வரலாற்றின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. நூற்றாண்டு கடந்த பழைமையான இந்தக் கட்டடத்தின் பொலிவு இன்றளவும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அரண்மனை 1912ம் ஆண்டு ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரால் கட்டப்பட்டது. உலகப்புகழ் பெற்ற கானாடுகாத்தான் அரண்மனை குறித்த தகவல்கள் ஒரு சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அரண்மனையின் சிறப்பு: 1990 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள சிறிய பங்களாக்களின் அளவு குறைந்தது 40 அடி அகலமும், 120 அடி நீளமும், பெரிய பங்களாக்களின் அளவு 60 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்டு அமைந்துள்ளன. மேலும், இந்தக் கட்டடங்களின் கட்டுமானப்பணியின் பொழுது சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் போன்ற பொருட்களை செக்கில் அரைத்து அதோடு முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்ந்த ஒரு கலவையாகச் சேர்த்துக் கட்டப்பட்டவையாகும்.

இந்த அரண்மனையில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர்ரக மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைபாடுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. குறிப்பாக, அலங்கார விளக்குகள், தேக்குமர வேலைப்பாடுகள், கண்ணாடிகள், பளிங்குக் கற்கள் மற்றும் கம்பளங்கள் போன்றவை கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் கானாடுகாத்தான் அரண்மனையின் உறுதிக்கும் பொலிவுக்கும் ஒரு காரணமாக விளங்குகின்றன.

இந்த அரண்மனை ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் தினமும் இந்த அரண்மனையை பார்வையிட்டுச் செல்கின்றனர். மேலும், இது பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளும் வசதி கொண்ட ஒரு இடமாகவும் விளங்குகிறது.

அரண்மனையின் அமைப்பு: அரண்மனை நுழைவுவாயிலில் அமைந்துள்ள நிலைக்கதவு பர்மா தேக்கினால் ஆனது. தரையில் ‘டச்சு’ நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பளிங்குக் கற்கள் மற்றும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களைப் பதித்துள்ளனர். அரண்மனையின் உட்புற மேற்கூரையானது, நிலவு போன்ற வடிவத்தில் தேக்கு மரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் உள்ள சிற்பங்களும், ஓவியங்களும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் விதம் அமைந்துள்ளது. அதாவது யாழி, யானை போன்ற சிற்பங்களும் மேற்கூரைப் பகுதியில் அமைந்துள்ள ‘பச்சிலை ஓவியங்கள்’ நமது பாரம்பரியத்தையும், கலை நயத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இந்த அரண்மனையின் தரையில் பதிக்கப்பட்டிருக்கும், ‘ஜப்பான் பூ’ கற்கள் அரண்மனையின் தரைபகுதிக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. குறிப்பாக, மின்விசிறி இல்லாமலேயே சித்திரையில் கூட வெப்பமின்றி, குளுமையாக இருக்கும்படி இந்த அரண்மனை அமைக்கப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட தூண்களைக் கொண்ட அகண்ட தாழ்வாரம், முற்றத்தின் ஒரு மூலையில் பூஜை அறை மற்றும் மின்தூக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரண்மனையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நமது முன்னோர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது வியப்புக்குரியது.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT