Mandala Painting - Symbols and Meanings 
கலை / கலாச்சாரம்

மண்டலா ஓவியம் - சின்னங்களும் அர்த்தங்களும்!

பாரதி

‘மண்டலா’ என்றால் என்ன?

மண்டலா என்றால் புத்த மதத்தில், ‘வட்டம்’ அல்லது ‘தட்டு’ என்று அர்த்தம். இந்த பிரபஞ்சம் ஒரு வட்ட வடிவத்தில் அடங்கிவிடும். பிரபஞ்சத்தை எப்படி சுற்றி வந்தாலும் வாழ்வின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் நடுப்பகுதியை அடைவான் என்பது புத்த மத கலாசாரத்தின் நம்பிக்கை.

மண்டலா ஓவியம் பயன்படுத்தும் இடங்கள்:

இந்த ஓவியத்தை தெய்வீக மற்றும் தியானம் செய்யும் இடங்களில் பயன்படுத்தலாம். புத்த மடங்கள், இந்து கோயில்கள், கிறித்துவ ஆலயங்களின் சுவற்றில் அதிகம் காணலாம். இது அமைதியான மனநிலையைத் தரும் என்பதால் உங்கள் அறையின் சுவற்றிலும் இந்த ஓவியங்களைப் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். நீங்கள் கலைப் பிரியர் என்பதையும், வித்தியாசமான ரசனை உள்ளவர் என்பதையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தன்மைக் கொண்டது.

மண்டலா ஓவியங்களை, கற்பிக்கும் மண்டலா, குணப்படுத்தும் மண்டலா, மணல் மண்டலா என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

கற்பிக்கும் மண்டலா

கற்பிக்கும் மண்டலா: இந்த வகையான ஓவியம் வரைபவர்கள், உலகில் நாம் எதையெல்லாம் பார்க்கிறோம்? அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? என்பதை மனதில் நினைத்து வரைவார்கள்.

குணப்படுத்தும் மண்டலா

குணப்படுத்தும் மண்டலா: இந்த வகையான மண்டலா ஓவியங்களைப் பார்த்தாலே மன நிம்மதி ஏற்படும். ஒரு புள்ளியை, தொடர்ந்து வெகு நேரம் பார்த்தால் எப்படி மன அமைதி ஏற்பட்டு தூக்கம் வருமோ அதுபோல்தான் இதுவும். உண்மையை சொல்லப்போனால், மண்டலா ஓவியத்திலிருந்துதான் இந்த முறை தோன்றியது.

மணல் மண்டலா

மணல் மண்டலா: இந்த ஓவியங்கள் சீராக இல்லாமல் சிக்கலான வடிவத்தில் இருக்கும். இது மனித வாழ்க்கையின் குழப்பமான நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது.

மண்டலா ஓவியத்தின் சின்னங்களும் அர்த்தங்களும்: மண்டலா ஓவியத்திற்கு சில சின்னங்கள்தான் அடிப்படையாகும். அந்த சின்னங்களை வைத்தே எவ்வளவு பெரிய ஓவியமானாலும் வரைய முடியும்.

1. வட்டம்: வட்ட சின்னத்தில் வரையப்படும் மண்டலா ஓவியம் பிரபஞ்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இந்த வடிவத்தில் 8 ஸ்போக் சேர்த்தால், விடுதலை மற்றும் மறுபிறவியைக் குறிக்கும் என நம்பப்படுகிறது.

2. மணிகள்: இந்த வடிவம் தெளிவை அடையும் வழி மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

3. முக்கோணம்: மேல்நோக்கிச் செல்லும் நேர் முக்கோணம் செயல் மற்றும் ஆற்றலை குறிக்கும். அதேபோல், தலைகீழ் முக்கோணம் படைப்பாற்றல் மற்றும் அறிவைக் குறிக்கிறது.

4. தாமரை: தாமரை மலரின் வடிவம் புத்த மதத்தில் சமநிலையை குறிக்கிறது. எப்படி தாமரை நீருக்கு அடியிலிருந்து வெளியில் வந்து ஒளியைப் பார்க்குமோ அதேபோல் நாமும் அறியாமையிலிருந்து வெளியே வந்து அறிவின் மூலம் ஒளியை எட்ட வேண்டும் என்பது பொருள்.

சூரியன்: இந்த சூரியனுக்கான வடிவம் என்பது, வாழ்க்கை மற்றும் ஆற்றல் தொடர்பான அர்த்தங்களைக் குறிக்கும்.

பொதுவாக, ஓவியம் என்பது அழகினை வெளிப்படுத்தும் கலை என்று கூறலாம். அதேசமயம், ஒரு ஓவியம் தனக்குள் எண்ணற்ற அர்த்தங்களை உள்ளடக்கி வைத்திருக்கும். ஒரு ஓவியம் பேச வேண்டும் என்றால் ஒவ்வொரு வடிவத்திற்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். இந்த வடிவங்களின் அர்த்தங்களைத் தெரிந்துக்கொண்டு உங்கள் மனநிலையையும் புரிந்துகொண்டு மண்டலா ஓவியங்களை வரைந்தால் உங்களின் ஓவியம் நிச்சயம் ஒரு பேசும் ஓவியம்தான்.

இந்த மண்டலா ஓவியத்தை உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ உங்கள் சுய படைப்பாற்றலுடன் நீங்களே வரைந்து கொடுத்தால், அதற்கான மதிப்புக்கும் மரியாதைக்கும் ஈடு இணை இவ்வுலகில் இல்லை என்றே கூற வேண்டும்.

எந்த ஓவியம் பார்ப்பவரின் உணர்வைத் தூண்டுகிறதோ, அதுவே கலைக்குத் தரும் பாராட்டும் கூட! இல்லையா?

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT