2009 ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு உட்பட பல தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளை பெற்ற, ‘சுலாப் நலவாழ்வு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கம்’ மூலம், பகேஷ்வர் பதிக் என்னும் சமூக செயற்பாட்டாளரால் 1992 ஆம் ஆண்டில் டெல்லியில், ‘சுலப் சர்வதேச கழிப்பறைகள் அருங்காட்சியகம்’ (Sulabh International Museum of Toilets) எனும் வினோத அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கப்பட்டிருக்கிறது. உலக நலவாழ்வு வரலாறு மற்றும் கழிப்பறைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு, டைம்ஸ் இதழ், உலகின் வினோதமான அருங்காட்சியகங்களின் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தை அளித்திருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் 50 நாடுகளைச் சேர்ந்த, கி.மு 3000 முதல் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நலவாழ்வு கலைப்பொருட்களைப் கால வரிசையின்படி பண்டைய, இடைக்கால, நவீனகால எனும் மூன்று பிரிவுகளில் தொடர்ச்சியாகப் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டவைகளைக் கொண்டு மனித வரலாறு, சமுதாயப் பழக்க வழக்கங்கள், தற்போதுள்ள சுகாதார நிலைமை மற்றும் கழிவறை தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் மரம், இரும்பு, பீங்கான் உள்ளிட்ட வெவ்வேறு பொருட்களால் ஆன கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்ட கழிப்பிடங்கள், அலங்காரமான விக்டோரியா கழிப்பறை இருக்கை போன்றவை இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கவிதைகளைப் காட்சிப் பலகைகளில் எழுதி வைத்துள்ளனர்.
உலகின் பழம்பெரும் நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிக காலத்தில் கட்டமைக்கப்பட்ட வடிகால் மற்றும் சுகாதார அமைப்பு இங்கு விளக்கப்பட்டுள்ளது. கி.மு. 2500 இல் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் எவ்வாறு வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டது, கிணறு, குளியல் தொட்டி உள்ளிட்டவைகள் எப்படிக் கட்டப்பட்டன என்பன தொடரான அரிய ஒளிப்படங்கள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல விதமான கழிப்பிடங்களில் பிரெஞ்சு மன்னர் பதினாறாம் லூயி பயன்படுத்திய வித்தியாசமான கழிப்பிடத்தின் மாதிரியும் இடம் பெற்றிருக்கிறது. சில மணித் துளிகளைக் கூட வீணடிக்க விரும்பாத பிரெஞ்சு மன்னர் பதினாறாம் லூயி, தன்னுடைய அரியணையிலேயே கழிப்பிடத்தையும் பொறுத்தினார். இதேப் போன்று, அமெரிக்கக் கடற்படை வடிவமைத்த நீர்முழ்கிக் கப்பலில் பயன்படுத்த ஏதுவாக, ஒரு விசையை அழுத்தினால் கழிவுகள் எரிந்து சாம்பல் ஆகிவிடும் வசதியுடைய ‘இன்கினோலெட்’ என்னும் மின்சாரக் கழிப்பிடமும் இடம் பெற்றிருக்கிறது.
கழிப்பறைகள் தொடர்பான 4,500 ஆண்டுகால உலக வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த அருங்காட்சியகத்தை ஆண்டுதோறும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு நுழைவு கட்டணம், வழிகாட்டிக் கட்டணம் என்று எவ்விதக் கட்டணமும் கிடையாது. எனவே, டெல்லி செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்தை அருவருப்பாக நினைக்காமல், அரியது எனும் எண்ணங்களோடு பார்வையிட்டுத் திரும்பலாம்.