நேபாளத்தின் லிம்புவன் பகுதி, கிழக்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் டார்ஜிலிங், காளிம்பொங் மாவட்டம் மற்றும் சிக்கிம் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட லிம்பு (யக்துங்) சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் ஒரு நடனம் தன் நாச் (Dhan Nach) எனப்படுகிறது. இந்த நடனம் பழம் எனப்படும் நாட்டுப்புறப் பாடலுடன் இணைந்த ஒரு நடனமாகும்.
தன் நாச் எனும் நேபாள மொழிச் சொல்லுக்கு தமிழில் நெல் நடனம் என்று பொருள் கொள்ளலாம். இந்த நாட்டுப்புற நடனத்தைப் பெரும்பான்மையாக, ‘யலாங்’ என்றேச் சொல்கின்றனர். இந்நடனம் லய லிம்பு சமூகங்களில் அவர்களின் மொழிகளுக்கு ஏற்பப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. உதாரணமாக, சத்தரே லிம்பு மொழியில், இது சாலக்மா என்றும், பந்தாரே லிம்பு மொழியில், இது யாலக்மா என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும், நடனத்தின் பெயர் நெல் நடனம் என்றுதான் பொருள் தருகிறது.
இந்த நெல் நடனம் தோன்றியதற்கும் ஒரு கதை இருக்கிறது.
உள்ளூர் புராணத்தின் படி, ஒரு கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தனர். பிறகு, மக்கரேபு என்று லிம்பு மொழியில் அறியப்படும் ஒரு பறவை, 'கையா' வகை நெல்லின் சில விதைகளைக் கொண்டு வந்து, கிராமவாசியிடம் கொடுத்துப் பயிரிடச் சொன்னது. அந்தக் கிராமவாசியும், அந்த விதைகளை விதைத்து, விவசாயம் செய்து பலனளிக்கும் அறுவடையைப் பெற்றார்.
ஆனால் பறவைகள் அறுவடையின் பெரும்பகுதியை உண்ண ஆரம்பித்தன. கிராமவாசிகள் பறவையை விரட்ட முயன்றனர், ஆனால் பறவைகள் விதைகளைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என்பதால் அறுவடை செய்யத் தங்களுக்கும் உரிமை உள்ளது என்றன. பறவையின் உரிமையை மறுக்க முடியாத கிராம மக்கள், பறவைகளும் நெல் அறுவடை செய்ய ஒப்புக் கொண்டனர்.
அரிசியை அடித்தவுடன் பறவைகள் நேரடியாக உண்ணும். அதனால், மக்கள் தங்களுக்குத் தேவையான நெல், அரிசி இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் பறவைகளைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக, "ஹா.. ஹா... ஹா…" என்று ஒரு சத்தத்தை எழுப்பினர். பின்னாளில் அதுவே, இசையுடன் கூடிய பாடலாக மாறியது. பழமை மிகுந்த இப்பாடலைப் பாடும் போது, நெல் அறுவடையின் மீது மக்கள் கைப்பிடித்து ஆடுவார்கள். அது நெல்லிலிருந்து உமியைப் பிரிக்கும். அதன் பிறகு, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மங்சீர் மாதத்தில், 'தன் நாச்' எனும் நெல் நடனத்தை ஆடத் தொடங்கினர்.
அதன் பிறகு அச்சமூகத்தினரிடையே இந்த நடனம் முக்கிய இடம் பிடித்து விட்டது. அச்சமூகத்தினரின் திருமணம், உதௌலி போன்ற திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்ற பல வேளைகளில் இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது இணைகளாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து ஆடப்படுகிறது. ஆண்களும், பெண்களும், எந்த இரத்த உறவும் இல்லாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு நேர்கோட்டில் அல்லது வட்டமாக நின்று இந்த நடனத்தை ஆடுகிறார்கள். இந்த நடனம், வரலாற்று ரீதியாக, ஏழு பகல் மற்றும் ஏழு இரவுகள் நிகழ்த்தப்பட்டது என அறியப்படுகிறது.
அண்மையில், இந்த நடனத்தில் இச்சமூக இளைஞர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். அதனால், இந்த நடனம் அழியும் நிலையிலுள்ளது. அதனால் கவலையடைந்த நேபாளம் மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு கலாச்சார அமைப்புகள் இந்த நடன வடிவத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை இச்சமூக மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நடன வடிவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கேடா என்ற குறும்படம் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.