Rao Bahadur, Dewan Bahadur, Roy Sahib 
கலை / கலாச்சாரம்

'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' , 'ராய் சாகிப்'- பட்டங்கள் எதற்காக வழங்கப்பட்டன?

தேனி மு.சுப்பிரமணி

படிக்காத மேதை படத்தில் நடிகர் எஸ்.வி.ரங்காராவ், ராவ் பகதூர் சந்திரசேகர் எனும் பணக்காரராக நடித்திருப்பார். சந்திரசேகர் எனும் அவரது பெயருக்கு முன்னால் இடம் பெற்றிருக்கும் ராவ் பகதூர் என்றிருக்கிறதே...? அது என்ன என்று நீங்கள் யோசித்தது உண்டா? உங்களுக்குத் தெரியுமா? வாங்க, ராவ் பகதூர் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். 

ராவ் பகதூர் (Rao Bahadur) என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அதாவது , பிரித்தானிய இந்தியாவில், நாட்டிற்குச் சிறந்த சேவை புரிந்த தனி நபர்களுக்குப் பிரிட்டானிய அரசால் வழங்கப்பட்ட ஓர் உயர்ந்த பட்டமாகும். இது வங்காளத்தில் ராய் பகதூர் எனும் பெயரில் வழங்கப்பட்டது.

'ராவ்' என்ற சொல் 'இளவரசர்' என்றும் 'பகதூர்' என்பது 'மாண்பிற்குரியவர்' என்றும் பொருள் கொள்ளலாம். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும் பதக்கமொன்றுடன் இப்பட்டம் வழங்கப்பட்டது. தற்காலத்தில் இந்திய அரசால் அளிக்கப்படும் பத்மஸ்ரீ எனும் குடியியல் விருதுகளுக்கு இணையானது என்று கொள்ளலாம். இசுலாமியர் மற்றும் பார்சி மக்களுக்கு ராவ் பகதூர் என்ற பெயரிலில்லாமல், கான் பகதூர் என்ற பெயரில் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து, மதுரை கே.எம்.எஸ் இலக்குமணய்யர், தூத்துக்குடி வில்லவராயர் கடலரசர், கோயம்புத்தூர் சவரிநாதன் பிள்ளை, சேலம் எஸ். பி. ராசமாணிக்கப் பண்டாரம், திருச்சிராப்பள்ளி மருத்துவர் டி.ஏ. மதுரம், கேரளா சாவூர் ஜான் பால், சென்னை மாகாண மேயர் எல். ஸ்ரீராமுலு நாயுடு, விருதுநகர் எம்.எஸ்.பி செந்தில் குமார நாடார், பரமேசுவரன் பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, சர் அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம், சா. கிருஷ்ணசாமி அய்யங்கார், எச். பி. அரி கௌடர் போன்றவர்கள் ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்களில் சிலர். 

பிரித்தானிய இந்தியாவில் முதல்நிலைப் பட்டமாக வழங்கப் பெற்ற ராவ் பகதூர் எனும் பட்டத்திற்கு அடுத்த இரண்டாம் நிலையிலான உயர் பட்டமாக, நாட்டிற்குச் சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு, ‘திவான் பகதூர்’ (Diwan Bahadur) எனும் பட்டம் வழங்கப் பெற்றது. திவான் பட்டம் பெற்றவர்களென்று வடகரை மற்றும் தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தாரர் வெ. இராமபத்ர நாயுடு, திருநெல்வேலி மாவட்டம், சிங்கம்பட்டி ஜமீன்தாரர் முருகதாஸ் தீர்த்தபதி, கரூர் சர் டி.விஜயராகவாச்சார்யா, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைக் குறிப்பிடலாம். 

திவான் பகதூர் எனும் பெயரில் 1943 ஆம் ஆண்டு ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. கே. பெருமாள், காளி என். ரத்தினம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் கே. கே. பெருமாள் என்பவர் ‘திவான்பகதூர் ரங்கநாத முதலியார்’ என்ற பெயரில் படிப்பற்ற பணக்காரராக நடித்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ராவ் பகதூர், திவான் பகதூர் எனும் இரண்டு உயர் பட்டங்களைத் தவிர்த்து, பிரித்தானிய இந்தியாவில் மூன்றாம் நிலை உயர்ந்த விருதாக, ‘ராய் சாகிப்’ (Rai Sahib) எனும் பட்டம் வழங்கப் பெற்றது. பிரித்தானிய அரசால், ஒருவர் தனிப்பட்ட முறையில் அவர்களது ஆட்சிக்கு முன்னோடியாகத் தொண்டாற்றியதைப் பாராட்டி இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. இது போர்வீரனைப் பாராட்டி வழங்கப்படும் ஓர் அடிப்படை விருதாக இருந்தது.   

இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட இந்தியர்கள் பலர், பிரித்தானிய இந்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட ராவ் பகதூர், திவான் பகதூர், ராய் சாகிப் போன்ற பட்டங்களைத் துறப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தப் பட்டங்கள் வழங்கப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டன.

தவறு செய்வது தவறில்லை ஆனால்..!

News 5 - (22.10.2024) தமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள்!

இவர்களுடன் வாதிட்டு நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

மழைக்கால விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

புகழைத் தேடும் புலம்பல்கள்!

SCROLL FOR NEXT