மியான்மர் மக்களிடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த தனகா கலாச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? காலம் காலமாக இன்னும் அங்குள்ள பெண்களும், குழந்தைகளும் இந்தக் கலாச்சாரத்தை மறக்காமல் பின்பற்றி வருகிறார்கள். அந்தவகையில், இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.
நாம் முகத்தில் சாதாரண பவுடர் போட்டால் கூட, அதனை வெளியே தெரியாத அளவிற்கு பயன்படுத்துவோம். ஆனால், இந்த பர்மா மக்கள் கன்னங்களில், மூக்கின் மேல் என சிலப் பகுதிகளில் பேஸ்ட் போன்ற ஒன்றை வழக்கமாகவே வெளியில் தெரியும்படி பயன்படுத்துவார்கள். ஆம்! அதுதான் தனகா கலாச்சாரம். விசித்திரமாக உள்ளதா? பெண்களும் குழந்தைகளும் பயன்படுத்தும் இந்தப் பேஸ்ட் அவர்களின் சருமத்தைப் பராமரித்து அழகாக வைத்துக்கொள்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் Beikthano என்ற ராணி தன் சருமத்தைப் பரமாரிக்கக் கண்டுப்பிடித்த ஒரு பேஸ்ட் தான் தனகா பேஸ்ட். தனகா மரத்திலிருந்து அந்த ராணியால் தயாரிக்கப்பட்ட இந்த தனகா பேஸ்ட் அன்றிலிருந்து சருமத்தைப் பராமரிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.
இவ்வளவு நூற்றாண்டுகளாக அவர்கள் அந்தப் பேஸ்ட்டை பயன்படுத்துகிறார்கள் என்றால், அது மிகவும் எளிதாகத் தயாரிக்கக்கூடியது என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. இந்த தனகா மரம் வளர குறைந்தபட்சம் 35 வருடங்களாவது ஆகும். அதன்பிறகு அந்த மரத்தின் வேரிலிருந்தோ பட்டையிலிருந்தோதான் இந்த தனகா பேஸ்ட் செய்யப்படும்.
இந்த தனகா பேஸ்ட் முகம், கைகள் மற்றும் சில சமயங்களில் கால்களிலும் பயன்படுத்தப்படும். மேலும் இது, சூரிய ஒளியிலிருந்து சருமத்தைக் காத்து, குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதேபோல், முகத்தில் உள்ள கருமை, பருக்களால் ஏற்படும் தழும்புகள் ஆகியவற்றை நீக்கி மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவுவதோடு, காயங்கள், அரிப்புகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது. சில மதச் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் தனகா, புனிதத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் பர்மாவில் புது வருடம் தொடங்கும் சமயத்தில் நான்கு நாள் Thingyan என்ற திருவிழா நடைபெறும். நீர் திருவிழா என்றழைக்கப்படும் அந்தத் திருவிழாவில், ஒருவருக்கொருவர் நீரினால் அடித்து விளையாடுவார்கள். அந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக பெண்கள் ஒன்றுக்கூடி இந்த தனகா பேஸ்ட்டை தயாரித்து முகத்தில் பூசி மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
பர்மா பெண்களின் அடையாளமாகவும், அவர்களுடைய அழகின் அடையாளமாகவும் இந்த தனகா பேஸ்ட் விளங்குகிறது. இப்போது தனகா பவுடர்களும் தயாரிக்கப்படுகின்றன. இதுவே பர்மா பெண்களின் தனித்துவமாகவும் கருதப்படுகிறது. பல வகையான மாடர்ன் அழகுப் பொருட்களைப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில், தனகா பேஸ்ட் மற்றும் பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி அழகின் அடையாளமாக விளங்கும் பர்மா பெண்கள் மற்றும் பர்மா, தனித்துவமான கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ளது என்றே கூற வேண்டும்.