தமிழ்நாட்டில் ஏராளமான கோட்டைகள் காணப்படுகின்றன. இவை தரையில் கட்டப்பட்டவை, தண்ணீரால் சூழப்பட்டவை, மலைமீது கட்டப்பட்டவை மற்றும் காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை என நான்கு வகைகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. வேலூர் கோட்டை, செங்கற்பட்டு கோட்டை, செஞ்சிக் கோட்டை, ரஞ்சன்குடிக் கோட்டை, உதயகிரி கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, திருமயம் கோட்டை, சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, ஆலம்பரைக் கோட்டை, வட்டக்கோட்டை முதலான பல கோட்டைகள் புகழ்பெற்று விளங்கின. தற்போதும் இவை வரலாற்றின் சாட்சிகளாக விளங்குகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வந்தவாசியில் ஒரு கோட்டை அமைந்துள்ளது. வந்தவாசிக் கோட்டையைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
வந்தவாசி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீபக்த ஆஞ்சனேயர் ஆலயத்தின் பின்புறத்தில் இந்தக் கோட்டை சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்தில் நீள்சதுர வடிவில் இந்து கலை பாணியில் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கோட்டையைச் சுற்றி பெரிய அகழி ஒன்று இருந்த அடையாளம் காணப்படுகிறது. கோட்டையினுள் குதிரை லாயம் ஒன்றும் இருந்துள்ளது. வந்தவாசி கோட்டையினுள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளதாகவும் இந்த சுரங்கப்பாதை மூலம் சேத்துப்பட்டு வழியாக செஞ்சி மலைக் கோட்டையை அடைய முடியும் என்றும் கூறப்படுகிறது.
வந்தவாசியில் 22 ஜனவரி 1760 அன்று பிரெஞ்சுப் படையினருக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் இடையே நடைபெற்ற போர் இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த ஒரு போராகக் கருதப்படுகிறது. இந்தியாவில் வாணிபத்தை மட்டுமே தங்களுடைய குறிக்கோளாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் முழுமையான ஆட்சியாளர்களாக மாற இந்தப் போரே காரணமாக அமைந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புதுச்சேரியில் பிரெஞ்சு கவர்னராக டியூப்ளெக்ஸ் கி.பி.1742ம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரெஞ்சு ஆதிக்கத்தை இந்தியாவில் வலிமையாக அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பிரெஞ்சு இந்திய வாணிபத்தை பெருமளவில் ஊக்குவித்து வந்தார். பிரெஞ்சு பேரரசை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்ற எண்ணமும் கனவும் இவருக்கு இருந்தது. ஆனால், இவருடைய கனவை வந்தவாசியில் நடைபெற்ற போரானது கலைத்தது.
பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வசமிருந்த வந்தவாசிக் கோட்டையைக் கைப்பற்ற கி.பி.1752ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும் கி.பி.1757ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் பிரிட்டிஷ் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 22 ஜனவரி 1760 அன்று தளபதி பிரிட்டிஷ் படை சர்.அயர்கூட் தலைமையில் மீண்டும் வந்தவாசியைத் தாக்கியது. இதில் தளபதி கவுண்ட் டி லாலி என்பவர் பிரெஞ்சு படையினருக்குத் தலைமை ஏற்றார். பிரெஞ்சுப் படையினருக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இந்தப் போரில் ஆங்கிலேயப் படை சார்பில் 1700 போர் வீரர்களும் பிரெஞ்சு படை சார்பில் இரண்டாயிரம் போர் வீரர்களும் போரிட்டனர். இந்த போரில் பிரிட்டிஷ் படை வெற்றி பெற்றது. வந்தவாசியில் நடைபெற்ற இப்போரானது, ‘மூன்றாம் கர்நாடகப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக பதினெட்டாம் நூற்றாண்டில் பல போர்களைக் கண்டதன் காரணமாக இக்கோட்டை சிதைந்தது.
இந்தப் போரின் மூலமாக வந்தவாசிக் கோட்டையானது ஆங்கிலேயர் வசம் சென்றது. பிரெஞ்சு படையினர் தோல்வி அடைந்ததன் காரணமாக இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இவ்வாறாக பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கோட்டையாக வந்தவாசிக் கோட்டை கருதப்படுகிறது.
வந்தவாசி திருவண்ணாமலையிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலும், செங்கற்பட்டிலிருந்து சுமார் அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.