தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட எத்தனையோ தமிழ் அறிஞர் பெருமக்கள் நம் தேசத்தில் இருக்கிறார்கள். ஆனால், இத்தாலியில் பிறந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த ஒருவர் உண்டென்றால் அது வியப்பைத் தருகிறதுதானே? ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தமிழ் மீது கொண்ட தீராக் காதல்: கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710ல் தமிழகம் வந்து சேர்ந்தார். மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதற்காக தமிழ் கற்றாலும், தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். தமிழ் மீது கொண்ட காதலால் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தன் சொந்தப்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றிய தொண்டுகள்: தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர ஏதுவாக, உலகப்பொதுமறையான திருக்குறளை லத்தீன் மொழியிலும், தமிழ்தேன் சொட்டும் பக்தி இலக்கியமான தேவாரம், திருப்புகழையும், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றையும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
உரைநடைத் தமிழில் நூல்கள்: தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் முதலில் கவிதை வடிவில் இருந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்து அறிந்துகொள்ள ஏதுவாக அவற்றை உரைநடையாக மாற்றினார். உரைநடையில், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களை எழுதினார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை இயேசு காவியமான தேம்பாவணிக்கு உண்டு. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம், விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம்.
தமிழ் அகராதியின் தந்தை: வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழிகளைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதி, போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். இதனால் இவர், ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
‘கொடுந்தமிழ் இலக்கணம்’ என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால், ‘சுவடி தேடும் சாமியார்’ எனவும் அழைக்கப்பட்டார்.