Karate 
கலை / கலாச்சாரம்

கராத்தே கலை எங்கே, எப்போது, எப்படி, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

பிரபு சங்கர்

கராத்தே பயிற்சியின் மிக முக்கியமான பலன் – மன அடக்கம்தான். அதனால் தனக்கு கராத்தே பயிற்சி இருக்கிறது என்ற ஆணவம் எழாது, அது அனாவசிய வலுச் சண்டையையும் இழுக்காது. இப்படி உடலுக்கும், அதன் மூலமாக உள்ளத்துக்கும் பலம் சேர்ப்பதுதான் கராத்தே பயிற்சி என்றால் அது மிகையில்லை.

இந்த கராத்தே கலை எங்கே, எப்போது, எப்படி, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

ரியுக்யு என்பது ஒரு சின்னஞ்சிறு தீவு. இங்கே வசித்தவர்கள் கராத்தே முறையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். 1879ம் ஆண்டு இத்தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்ட போது, இக்கலையும் ஜப்பான் முழுவதும் பரவியது. குறிப்பாக தைஷோ மன்னர் முயற்சியால் அங்கே கராத்தே முறையாகக் கற்பிக்கப்பட்டது.   

1922ம் ஆண்டில் ஜப்பானிய கல்வி அமைச்சகம் சார்பில் கிச்சின் ஃபனகோஷி என்ற கராத்தே மாஸ்டர்  கராத்தே கலையைப் பற்றி விளக்கினார். 1924ம் ஆண்டில் கியோ பல்கலை கழகம், ஜப்பானில் முதன் முதலாக பல்கலைக் கழக கராத்தே பயிற்சி மையத்தை உருவாக்கியது. தொடர்ந்து 1932ம் ஆண்டிலிருந்து ஜப்பானிலுள்ள பிரதான பல்கலைக் கழகங்கள் கராத்தே பயிற்சிக் கூடங்களைத் தொடங்கின. 

ஜப்பானுக்குள்ளேயே இருந்த இந்தக் கலையை வெளி உலகத்திற்கும் தெரிய வைத்தவை திரைப்படங்கள்தான். 1960, 70களில், புரூஸ் லீ என்ற கதாநாயகனை வைத்துத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தன. சராசரிக்கும் குறைவான பருமனும், உயரமும்  கொண்ட ஒரு ஒல்லியான கதாநாயகன் தன்னுடைய கராத்தே ஆற்றலால் எத்தனை பெரிய எதிரியையும், அவனுடைய அடியாட்களையும் அடித்து வீழ்த்தி, வெற்றி வாகை சூடுகிறார் என்றால் அதற்கு அவர் கற்றிருந்த கராத்தே பயிற்சிதான் காரணம் என்பதை அந்தப் படங்கள் மக்களுக்குப் புரிய வைத்தன. 

இதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் கராத்தே மோகம் உண்டாகி அங்கெல்லாம் கராத்தே பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் உருவாயின.

இந்தியாவைப் பொறுத்தவரை பல பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது கராத்தே. இதற்கென்று ஜப்பானிய பாணியிலேயே தனி சீருடையும் வழங்கப்படுகிறது. 

கராத்தே பயிற்சி:

கராத்தே பயிற்சி என்பது கை, கால்களை முறையாகப் பயிற்றுவிப்பது. கால்களை நிலத்தில் உறுதியாக ஊன்றி கொள்ள, கைகளை மேலோ, கீழோ போர் வாள் போல வீசி இயங்குவது; எதிராளியின் அசைவுகளுக்கு ஏற்ப முன்னும், பின்னும், இரு பக்கவாட்டிலும், பின்புறமாக சாய்ந்தும், முன் பக்கமாக குனிந்தும் இயங்குவது, உயரே எம்பி குதிப்பது, தாவி கால்களால் உதைப்பது என்ற உத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது கண் இமைக்கும் நேரத்துக்குள் மேலே சொன்னவற்றில் எந்த வகையிலாவது தாக்குதல் அமைந்தால் வெற்றி நிச்சயம். மிகக் குறுகிய நேரத்தில் அதாவது அரை விநாடிக்கும் குறைந்த நேரத்தில் மூளையிலிருந்து உத்தரவு வர, அதே கணத்தில் கை, கால்கள் இயங்குவதுதான் இந்த வெற்றியின் முக்கியமான சூட்சுமம். அதாவது சிந்தனை, செயல் இரண்டுக்குமான நேர இடைவெளியே இல்லாமல் ஓர் உத்தியை நினைத்த மாத்திரத்தில் அப்படியே பிரயோகப்படுத்தும் சூட்சுமம். 

‘‘கராத்தேயை மையமாக வைத்து உருவான திரைப்படங்களோ, அது ஒரு தற்காப்புக் கலை என்பதையும் மீறி, அதைத் தெரிந்து வைத்திருந்தால், தெருச் சண்டையிலும்கூட வெற்றி பெற முடியும் என்ற பிரமையை உருவாக்கி விட்டன. ஆனால் வீண் வம்புக்குப் போகாத, சுத்தமான தற்காப்புக் கலைதான் கராத்தே என்பதுதான் உண்மை,‘‘ என்று குறிப்பிடுகிறார், ஜப்பானிலுள்ள ஷாடோகன் டோஜோ கராத்தேப் பயிற்சி மைய இயக்குநர்.

இதை ஏன் ஒரு சண்டை பயிற்சியாகக் கருத வேண்டும்? மல்யுத்தம் போன்று ஒரு விளையாட்டாகவும் கருதலாமே என்ற எண்ணத்தில் 2015 செப்டம்பர் 28 அன்று, 2020 கோடைகால ஒலிம்பிக்கில் கராத்தேயையும் சேர்ப்பதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு, 2016 ஜூன் 1ம் தேதி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு 2020 வருடப் போட்டிகளில் சேர்க்கப்பட கராத்தேயைப் பரிந்துரை செய்தது. அதன்படி இந்தக் கலையும் விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. 

‘தன் கையே தனக்கு உதவி‘ என்பார்கள். ஆனால் கராத்தேயைப் பொறுத்தவரை கை மட்டுமல்லாமல், காலும் அவற்றை மிகுந்த சமயோசித நோக்குடன் பயன்படுத்தும் மனமும், மூளையும் பேருதவி என்று சொல்லலாம். இந்த வகையில் ஒரு கராத்தே வீரர், தன் கைகளையும், கால்களையுமே ஆயுதங்களாகப் பிரயோகித்து தற்காத்துக் கொள்ளவோ, வெற்றி கொள்ளவோ முடிகிறது. 

இந்தத் தற்காப்புக் கலை பெண்களுக்கு மிகவும் அத்தியாவசிய பயிற்சி என்று உலகளாவிய வகையில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் பலவீனமானவர்கள் என்ற அனுமானத்திலேயே சாதாரண வழிப்பறி முதல் பாலியல் பலாத்காரம்வரையிலான குற்றங்கள் அவர்களுக்கு எதிராக நடைபெறுகின்றன. ஆனால் பூவும் புயலாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல பெண்கள் இந்த கராத்தே பயிற்சி மேற்கொண்டு, பல சந்தர்ப்பங்களில் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கிறார்கள்; தங்களுடைய உடைமைகள் பறிபோகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி, ஆறுதலையும், கராத்தே கலை மீதான உயர் மதிப்பையும் அளிக்கிறது.

மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

SCROLL FOR NEXT