Hair Protection  
அழகு / ஃபேஷன்

செரிமானம் தூண்டும் வெற்றிலை கூந்தலையும் பராமரிக்குமாமே! எப்படி?

ரா.வ.பாலகிருஷ்ணன்

உங்கள் தலைமுடியை அழகாகப் பராமரித்துக் கொள்ள இயற்கையின் படைப்பில் உருவான வெற்றிலை உதவுகிறது. தலைமுடிப் பாதுகாப்பில் வெற்றிலையின் பங்கு என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

இயற்கையாக கிடைக்கும் அனைத்துப் பொருள்களிலுமே பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளது. அதுபோலவே வெற்றிலையிலும் நமக்கு நன்மை தரும் பண்புகள் இருப்பதோடு, தலைமுடியைப் பாதுகாக்கும் பண்புகளும் அதிகமாக இருக்கிறது‌.

உணவருந்தி முடித்த பிறகு, அன்றைய காலத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மென்று திண்பதை வயதானவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதும் இப்படிச் செய்வதால் செரிமானம் தூண்டப்படும் என்பதும் நாம் அறிந்ததே.

இன்றைய இளம் தலைமுறையினர் வெற்றிலையை சாப்பிடுவதே இல்லை. வயதானவர்கள் வெற்றிலைப் பாக்கு போடுவது கூட குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். நாகரிகம் வளர்ந்து விட்டதாக எண்ணி பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம்.

தலைமுடியின் வளர்ச்சியில் வெற்றிலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்தால், இனி யாருமே இதனை உதாசீனம் செய்யமாட்டார்கள். வெறும் வயிற்றில் தினம் ஒரு வெற்றிலை சாப்பிட்டு வந்தால் தலைமுடி ஆரோக்கியம் சீராக மேம்படும்.

தலைமுடியைப் பலப்படுத்த:

கூந்தலின் நீளம் அதிகமாக இருக்க வேண்டும் என அனைத்துப் பெண்களுக்கும் ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. இருப்பினும், அதற்கான முயற்சியை இயற்கையான முறையில் எடுத்தால் நல்முடிவு நிச்சயமாக கிட்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் வெற்றிலை. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் தலைமுடியை பலப்படுத்தவும், பராமரிக்கவும் உதவுகிறது.

முடி வளர்ச்சி:

உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்ட வெற்றிலை உதவுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் வேர்களுக்கு செல்வதை உறுதி செய்யும். மேலும், மயிர்க்கால்களுக்கு நன்முறையில் ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

முடி உதிர்வைத் தடுக்கும்:

வெற்றிலையில் இயற்கையிலேயே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளன. இவை உச்சந்தலையில் தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுத்து, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கிறது. இதன் மூலம் முடி உதிர்வது குறையும். ன்றன

முடியின் பளபளப்பு:

ஆன்டிஆக்சிடன்ட்கள் வெற்றிலையில் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், சுற்றுப்புறச் சூழல்களில் உண்டாகும் மாசுகளில் இருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதனால், முடியின் பளபளப்புத் தன்மை கூடும்.

இயற்கையான கண்டிஷனர்:

இன்று செயற்கையாக பலவித ஷாம்புகள் விற்கப்பட்டு வரும் நிலையில், வெற்றிலையை இயற்கையான கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம்.

வெற்றிலை ஹேர் மாஸ்க்:

தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 5 முதல் 10 வெற்றிலைகளை எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு கெட்டியான கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு, இந்தக் கலவையுடன் தேன் மற்றும் நெய் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி விட்டால் வெற்றிலை ஹேர் மாஸ்க் தயாராகி விடும். இந்த மாஸ்க்கை தலைமுடியில் வேர்க்கால்கள் படும் வரைத் தடவி, 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கும்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT