பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் இந்த பழக்கம் இருந்தது. பச்சைக்குத்துவது நோய்களிலிருந்து பாதுகாக்கும் அக்குப்பஞ்சர் முறையாக கருதப்பட்டது. இப்போதும் குறவர்கள் என்னும் இனம் பச்சைக்குத்தும் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த பச்சைக் குத்துதலைத்தான் ஆங்கிலத்தில் ‘டாட்டூ’ என்று அழைக்கிறார்கள்.
நம் உடலில் டாட்டூ போட்டுக்கொள்வதற்கான காரணம், நம் எண்ணத்தை வெளிப்படுவதற்காகவே ஆகும். டாட்டூவை போட்டு கொள்வதால், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். நாம் யார் என்பதை அடுத்தவர்களுக்கு குறிப்பால் வெளிப்படுத்தவும் சிலர் டேட்டூ போட்டுக்கொள்கிறார்கள்.
அப்படி டாட்டூ போடும்=போது ஆர்வத்துடன் போட்டு விட்டு அதைப்பற்றி நாளடைவில் மறந்து கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இதனால் நாம் ஆசையாக போட்டுக்கொண்ட டாட்டூ மங்கி அதன் அழகையும், பொலிவையும் இழந்துவிடுகிறது. எனவே டாட்டூபோட்ட பிறகு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு டாட்டூ போட்ட இடத்தை தண்ணீரில் படாமல் சில நாட்கள் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அப்படியில்லையேல் Infection, கிருமித்தொற்று போன்றவை வந்துவிடும். அதனால் டாட்டூ போட்ட இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இருமுறை சோப்பு போட்டு கழுவுவது சிறந்தது. பின்பு டவலை வைத்து பொறுமையாக அழுத்தி தண்ணீரை துடைத்து எடுக்க வேண்டும்.
டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு டோட்டூ போட்ட இடம் சிவந்து வீங்கி காணப்படும். அது தானாகவே சில நாட்களில் சரியாகிவிடும். அதுமட்டுமில்லாமல் அரிப்பு ஏற்படும்போது சொறிந்து விடாமல் லோஷன் அல்லது Moisturizer போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். சிலர் தேங்காய் எண்ணெய்யை கூட இதன் மீது தடவுவார்கள்.
நேராக சூரிய ஒளியில் டாட்டூ படும்படி காட்டாமல் பார்த்து கொள்வது நல்லது. அடிக்கடி சூரிய ஒளி படுவதால் டாட்டூவின் நிறம் மங்கிப்போய் விடும். டாட்டூ போட்ட இடத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும். இறுக்கமாக ஆடை அணியும்போது அது உடலுடன் ஒட்டிக்கொண்டு இருப்பதால், டாட்டூ போட்ட இடம் ஆறுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.
டாட்டூ நாளடைவில் அதன் நிறத்தையும், பொலிவையும் இழக்கும்போது மறுபடியும் டாட்டூ ஷாப்பிற்கு சென்று நிறமேற்றிக்கொள்ளலாம். அப்படி செய்யும்போது பார்ப்பதற்கு டாட்டூ புதிது போன்றே காட்சியளிக்கும்.
சிலருக்கு டேட்டூ போட்டுக்கொள்வது ஒத்துக்கொள்ளாது. அப்படியிருக்கையில் சருமத்தில் அலர்ஜி வருவதுபோல உணர்ந்தால், சரும மருத்துவரை உடனே கலந்து ஆலோசிப்பது சிறந்தது. நாம் போட்டுக்கொண்ட டாட்டூவை நாளடைவில் நீக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கும் இப்போதெல்லாம் வசதிகள் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.