அழகு / ஃபேஷன்

மழைக்கால மேக்கப் – அழகு குறிப்புகள்!

பத்மினி பட்டாபிராமன்

அழகுக் நிபுணர்: வசுந்தரா

தோ.. மழைக்காலம் வந்துவிட்டது! தொடர்ந்து பனிக்காலம் என்று இயற்கை அதன் பாதையைத் தொடங்கிவிட்டது. எந்தப் பருவத்திலும் நம் உடலையும் சருமத்தையும் பொலிவுடன் நலமாக வைத்திருந்தால் நமக்கே ஒரு தன்னம்பிக்கைதானே…

அழகுக் நிபுணர்: வசுந்தரா

மாறும் பருவநிலைக்கும், நவீன அழகுக் கலை மாறுதல்களுக்கும் ஏற்ப, பல வருடங்களாக தொடர்ந்து, நமக்கு வழிமுறைகள் சொல்லி வருகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

சிம்பிளாக அலங்கரித்துக்கொண்டாலும், பளிச்சென்ற தோற்றத்தோடு நாம் இருக்க வேண்டுமல்லவா? இந்த மழைக்காலத்தில் போடும்போது கவனிக்க வேண்டியவை என்ன? எப்படி மேக்கப் போட்டால் பொருத்தமாக இருக்கும்? அதற்கு நாம் என்னென்ன செய்யணும்? வசுந்தரா தரும் குறிப்புக்கள் பார்க்கலாமா?

முகத்திற்கு...

இந்த மான்சூன் பருவத்தில் மேக்கப் போடும்முன், முதலில் நம் முகத்துக்கு ஒரு பெப் கொடுக்க வேண்டும்.

பெப்பிங்:

மேக்கப் அதிக நேரம் நீடித்து  நிற்க வேண்டுமல்லவா? அதற்கான முன்னேற்பாடு. இதைத்தான் ‘ப்பெப்பிங்’ என்று சொல்கிறோம்

ஒரு மெல்லிய காட்டன் துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, முகம் கழுத்து எல்லாம் மென்மையாக துடைக்க வேண்டும். அது உலர்ந்த பிறகு, அல்லது சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு மேக்கப் போட ஆரம்பிக்க வேண்டும். இதனால் சருமத் துவாரங்கள் அடைப்பின்றி, முகம் மேக்கப்புக்குத் தயாராகும்.

ஃபவுண்டேஷன்:

மழைக் காலத்திற்கு வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்கள் உபயோகப்படுத்துவது நல்லது.

பவுடர் ஃபவுண்டேஷன் போடுவதாக இருந்தால்கூட, அது வாட்டர் ப்ரூஃப் ஆக இருந்தால், மழை, வெயில் எதுவானாலும் மேக்கப் கலையாமல் இருக்கும். கரையும் வாய்ப்பு இருப்பதால் லிக்விட் ஃபவுண்டேஷனை மழைக்காலத்தில்  தவிர்த்து விடலாம்.

பவுடர் அல்லது கேக் ஃபவுண்டேஷன்தான் (Cake Foundation) மழைக் காலத்துக்கு ஏற்றது. 

அதேபோல், ப்ரைமர் (Primer) கூட ஜெல் அல்லது பவுடர் பேஸ் (powder base) ப்ரைமர் உபயோகிக்க வேண்டும். முதலில் ப்ரைமர் போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து கேக் ஃபவுண்டேஷன் போட்டுக்கொண்டால் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

இது வரை முயற்சி செய்யாதவர்கள் இதையெல்லாம் நினைவில் கொண்டு மேக்-அப் செய்து பாருங்கள்.

நாம் உபயோகிப்பது நல்ல தரமான சாதனங்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இதில் ஹைச்.டி (H.D - High Definiton) என்னும் மிகத் தரமான ஃபவுண்டேஷனும் கிடைக்கிறது.

இதை உபயோகப்படுத்தும்போது முகம் தனித்துவமான பொலிவுடன் இருக்கும்.

மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், லிக்விட் ஃபவுண்டேஷன் போட்டால் திட்டுத் திட்டாக ஆகிவிடும்.

காம்பேக்:

ஃபவுண்டேஷன்  போட்ட  பிறகு வழக்கமான லூசாக (டால்கம் பவுடர்  போல) பவுடர் போடுவதென்றால் போடலாம். ஆனால் அது சீக்கிரமாக பொலிவிழந்து விடும். எனவே, பவுடர் போட்டாலும் அதன் மேல் ஒரு கோட் காம்பேக் போட்டால் உங்கள் மேக்கப் வெகுநேரம் தாங்கும். உங்கள் சரும நிறத்திற்கேற்ப காம்பேக் தேர்ந்தடுத்து வாங்குங்கள்.

இதன் மூலம் முகம் பிரகாசமாக இருக்கும்.

அடுத்ததாக ப்ளஷர் (Blusher)

கன்ன எலும்புகள் பகுதியில் மெல்லிய நிற ப்ளஷர் ஒற்றும்போது முகத்துக்கு ஒரு நல்ல பளபளப்பு  கிடைக்கும்.

கண்ணுக்கான மேக்கப் பொருட்களில் இப்போது நீரில் கரையாத வாட்டர் புரூஃப் சாதனங்கள் வந்துள்ளன.

கண்களுக்கான மேக்கப்:

ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா, காஜல் இவை தவிர  ஐ ப்ரைமர் (Eye Primer) கூட எல்லாமே வாட்டர் ப்ரூஃப்  சாதனங்கள் உபயோகித்தால் நல்லது.

ஐ ப்ரைமர் போட்டு அதன்மேல் ஐ ஷேடோ (Eye Shadow) போடும்போது அதுவே வாட்டர் ப்ரூஃப் ஆகிவிடும்.

ஃபெல்ட் டிப் (Felt Tip) மூலம் ஐ லைனர் போடும்போது மிகவும் எளிதாக இருக்கும்.

இமைகள் மேல் வாட்டர் ப்ரூஃப் இல்லாத மஸ்காரா போட்டால் கரைந்து பரவிவிடும். எனவே வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா கேட்டு வாங்குங்கள்...

காஜல் உபயோகிப்பவர்கள் என்றால் ஸ்மட்ஜ் ப்ரூஃப் (Smudge proof) வாங்கிக் கொள்ளவும்.

புருவங்களுக்கு  ஜெல் (Eye brow Jel)  உபயோகியுங்கள்.  அழகாக செட் ஆகி இருக்கும்.

தண்ணீரில் கலையாது.

உதடுகளுக்கு:

மழைக்காலத்தில் க்ரீமியாகவோ, க்ளாசியாகவோ (Creamy or Glossy )  இருக்கும் லிப்ஸ்டிக்கைத் தவிர்த்து விட்டு,  மேட் ஃபினிஷ் (Mat Finish) உள்ள லிப்ஸ்டிக்கை பயன் படுத்தினால், நீர் பட்டால் கூட கலையாமல் இருக்கும். இது பல வண்ணங்களிலும் கிடைக்கும். அதிலேயே க்ளிம்மர் (Glimmer) வாங்கிக் கொண்டால் நல்லது.

லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து பின் எடுத்து பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மேக்கப் போட்ட பிறகு, அது கலையாமல் இருக்க மேக்கப் செட்டிங் ஸ்ப்ரே (Make up Setting Spray) அவசியம்.  இது ஒரு மிஸ்ட் போல் இருக்கும். முகத்திலிருந்து சற்றுத் தள்ளி வைத்து ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில் நிறைய லேயர் மேக்கப் போடத் தேவையில்லை. மினிமம் போட்டாலே போதும்.

மேக்கப் நீக்குவது எப்படி?:

மேக்கப் போட்டு வெளியே  சென்று வந்துவிட்டோம். இப்போது போட்ட மேக்கப்பை  நீக்க வேண்டுவதும் அவசியமல்லவா?

ஒரு மென்மையான துணி எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து  முகத்தைத் துடைத்தாலே போதும். மேக்கப் நீங்கிவிடும்.

முக மேக்கப் மற்றும் லிப்ஸ்டிக் சற்று அழுத்தமாக இருந்து எளிதில் போகாமல் இருந்தால் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்துவிட்டு, பின்னர் மெல்லிய துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து  துடைக்கலாம்.

அப்புறம் முகத்தை வெதுவெதுப்பான நீரில் லேசாக கழுவிவிட்டு, கடைசியாக, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

மேக்கப் போட எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் அதை நீக்குவதிலும் வேண்டும்.

அப்படியே விட்டு விட்டு தூங்கிவிட்டோம் என்றால், கண்களைச் சுற்றி கருவளையம், சரும சுருக்கங்கள், தொய்வுகள்  உண்டாகி விடும்.

மழைக் காலத்தில் மேக்கப் போடும்போது இம்மாதிரியான குறிப்புகளை கவனத்தில்கொள்ளுங்கள்.

எளிதாக மேக்கப் போட்டு, அழகாக தோற்றமளியுங்கள்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT