தலையில் பொடுகு இருந்தால் அரிப்பு வரும். அதிகமாக அரிக்கும் பொழுது தன்னை அறியாமலே கை தலைக்குச் சென்று விடும். அதை சொறிந்து சொறிந்து புண்ணாகி போவது உண்டு. அவற்றை தடுப்பதற்கான எளிய குறிப்புகளை பின்பற்றினால் பொடுகு நீங்கி புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடரலாம். அதற்கான சில குறிப்புகள் இதோ:
வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பொடுகு தொல்லைகள் நீங்கும்.
தலையில் தயிர் தடவி ஊற வைத்துவிட்டு பின் குளிக்க பொடுகு நீங்கும்.
ஊறவைத்த வெந்தயத்துடன் சிறிது வெந்தய இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தால் தலை முடி கருமையாக நீண்டு வளரும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
இரவில் செம்பருத்தி பூவை தலையில் வைத்து வந்தால் பொடுகு தொல்லை இருக்காது.
ஆடாதொடை இலையை அரைத்து ஆமணக்கு எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து குளித்தாலும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
மருதாணி, கருவேப்பிலை மற்றும் வேப்பிலை இவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து பொடியினை வெள்ளைத் துணியில் கட்டி எண்ணெயில் போட்டும் அந்த எண்ணையை உபயோகித்து வரலாம். பொடுகு வராமல் தடுக்கும்.
பொடுதலை இலையை அரைத்து தலை முழுகினால் பொடுகு வராது.
பொடுதலைச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் பொடுகு வராது.
மேலும், அரோமா எண்ணெய்களை பயன்படுத்தி பொடுகை ஒழிக்கலாம். அரோமா எண்ணெய் என்பது இயற்கை தாவரங்களிலிருந்து ஆவி மூலம் பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த அரோமா எண்ணெய் அழகு சாதன விற்பனை கடைகளில் சிறிய பாட்டில்களில் கிடைக்கும். சாதாரணமாக உபயோகப் படுத்தும் 100 கிராம் எண்ணெயுடன் ஒரு சொட்டு அல்லது இரண்டு சொட்டு அரோமா எண்ணெய் கலந்து உபயோகிக்க வேண்டும். இவற்றைக் கொண்டு மசாஜ் செய்வதே அரோமா மசாஜ் எனப்படும். அவற்றில் பொடுகுக்கு மட்டும் உபயோகப்படுத்தும் அரோமா எண்ணெய்களைப் பற்றி பார்ப்போம்.
காஸ்டஸ் ஆயில்:
இந்த அரோமா ஆயில் பொடுகை கட்டுப்படுத்தி முடி நன்றாக வளர உதவுகிறது. மேலே குறிப்பிட்டதுபோல் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெயுடன் கலந்து உபயோகித்து வர வேண்டும்.
பொடுகு நீக்கும் அரோமா எண்ணெய்கள்:
ஸ்பைக் நாட் எண்ணெய் (Spick nade oil) 10சொட்டு, டீ டிரிஆயில் (Tea tree oil) 10சொட்டு, லெமன் கிராஸ் ஆயில் பத்து சொட்டு, லெமன் ஆயில் 10சொட்டு, சிடார்வுட் எண்ணெய் 10 சொட்டு, சாதாரண நல்லெண்ணெய் 10 சொட்டு இவற்றையெல்லாம் பயன்படுத்தி வாரம் இருமுறை மசாஜ் செய்து வந்தால் பொடுகு முழுவதுமாக நீங்கிவிடும். இதற்கு உடனே தலை குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரு நாட்கள் விட்டும் குளிக்கலாம்.
எந்த விதமான மசாஜும் அரை மணி நேரம் செய்தால் போதும். இது போன்ற எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி பொடுகிலிருந்து நிவாரணம் பெறுவோமாக!