நீங்கள் உங்கள் அழகைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும், சரியான பலன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். இயற்கை தந்த பூக்களை வைத்து உங்கள் முகத்தை மிகவும் பொலிவுடனும், பளப்பளப்புடனும் வைத்துக் கொள்ளலாம்.
ரோஜாப்பூ:
ரோஜா இதழ்களைப் பால் சேர்த்து அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையாக இருப்பதோடு பளபளப்பாகவும் மாறும்.
பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலையை சேர்த்து அரைத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.
மல்லிகைப்பூ:
மல்லிகைப்பூவுடன், இலவங்கத்தைச் சேர்த்து அரைத்து, அதில் சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர்விட்டு முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமம் ஒரே சீரான நிறத்துக்கு மாறுபடும்.
தாமரைப்பூ:
தாமரை இதழ்களை சிறிது பால்விட்டு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், இது சருமத்துக்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும்.
வெயில் காலத்தில் வாரம் 1 முறையாவது இதைச் செய்தால், சருமத்தை ஒரே சீரான நிறத்துடனும், மென்மையுடனும் வைத்துக் கொள்ளலாம்.
மகிழம்பூ:
மகிழம் பூவை சிறிதளவு ஊறவைத்து அரைத்து, தினமும் குளிக்கும்போது இதை பயன்படுத்திக் குளித்தால், வியர்வை நாற்றத்தைப் போக்கலாம்.
மேலும், இது வெயிலினால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சாமந்திப்பூ:
சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்து எடுத்து, ஒரு வாணலியில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
இந்தத் சாமந்திப்பூவின் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகப்படுத்தலாம்.
சாமந்திப்பூ கலந்த டீ டிகாஷனை குளிரவைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களின் கருமை நீங்கும். கண்களில் வீக்கம் இருந்தால் கூட வீக்கம் குறையும்.
இந்த டிகாஷனை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் கூட வெயிலினால் கருத்துப்போன சருமமும் நிறம் மாறும்.
மரிக்கொழுந்து:
மரிக்கொழுந்து பூவின் சாறுடன், சந்தனத்தூள் சேர்த்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும நிறம் கூடும்.
செம்பருத்தி:
செம்பருத்திப் பூவுடன், பாதாம் பருப்பு சேர்த்து ஊறவைத்து, அரைத்து வெயில்படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால், கோடையினால் உண்டாகிற சரும வறட்சி நீங்கி, தோல் மென்மையாக மாறும்.