Step Cutting Hairstyle - Long Collar Shirt - Bell Bottom Pants 
அழகு / ஃபேஷன்

2K கிட்ஸ்க்கு தெரியாத பேஷன் இது - பெல்பாட்டம் - ஸ்டெப் கட்டிங் - நீள காலர்! என்னடா பேசறீங்க?

ஆர்.வி.பதி

எழுபத்திஐந்து முதல் எண்பதாம் ஆண்டு வரை இளைஞர்களிடையே இரண்டு விஷயங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. ஒன்று பெல்பாட்டம் பேண்ட். மற்றொன்று ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைல். இவற்றைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

பெல்பாட்டம் பேண்ட் அக்காலத்தில் பலரால் விரும்பி தைக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டது.  பேண்ட்டின் கீழ்ப்பகுதி தொளதொளவென ஆடிக் கொண்டிருக்கும். அந்த கீழ்ப்பகுதி அதிகபட்சமாக 30 அங்குல நீளம் வைத்து தைக்கப்படும். தையல்காரர் நம்மிடம் எத்தனை இஞ்ச் வைக்க வேண்டும் என்று கேட்டுத் தைப்பார். சிலர் 26 அங்குலம் சிலர் 28 அங்குலம் சிலர் 30 அங்குலம் என விருப்பத்திற்கேற்றவாறு தைத்து உபயோகிப்பார்கள்.

அக்கால நடிகர்கள் பலர் பெல்பாட்டம் பேண்ட்டை உபயோகித்திருப்பதை 70 – 80 களில் வெளி வந்த திரைப்படங்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.   கீழ்ப்பகுதியில் பேண்ட்டின் பின் பகுதியில் அரை வட்ட அளவிற்கு ஜிப்பை வைத்துத் தைப்பார்கள்.  தரையில் தேய்ந்து தேய்ந்து பேட்ண்ட்டின் கீழ்ப்பகுதி கிழிந்து விடும்.  அப்படிக் கிழியாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு.

இந்த ஸ்டைல் 80 களுக்குப் பின்னர் மெல்ல மெல்ல மதிப்பிழந்து இதற்கு முன்னால் உபயோகத்தில் இருந்த டைட் பேண்ட் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியது.  இத்தகைய பேண்ட்டின் கீழ்பாகமானது பெல்பாட்டம் பேண்ட்டிற்கு நேர் எதிராக மிகவும் குறுகி அமைந்திருக்கும்.  இதன் பின்னர் ஜீன்ஸ் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது வரை மதிப்புடன் திகழ்கிறது.

அக்கால இளைஞர்களிடையே பிரபலமாகத் திகழ்ந்த மற்றொரு விஷயம் ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைல். மற்றும் நீளமான கிருதா. 

ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் என்பது முடியானது இரண்டு பக்கக் காதுகளை மூடியிருக்கும் அளவிற்கு நீளமாக வடிவமைக்கப்படும். அக்காலத்தில் திரைப்பட நடிகர்கள் பலர் ஸ்டெப் கட்டிங்கும் கிருதாவும் வைத்திருந்தார்கள். அக்கால இளைஞர்கள் நடிகர்களைப் பார்த்துத் தாங்களும் ஸ்டெப் கட்டிங் வைத்துக் கொள்ள விரும்பினார்கள். இதன் காரணமாக ஸ்டெப் கட்டிங் ஸ்டைல் வெகுவேகமாகப் பரவத்தொடங்கியது. 

முதன் முறையாக ஸ்டெப் கட்டிங் வைத்துக்கொள்ள விரும்பினால் முடிதிருத்துநர்கள் முடியை மிக நீளமாக வளர்க்கச் சொல்லிவிடுவார்கள்.  நன்கு நீளமாக வளர்ந்த பின்பு போனால் ஸ்டெப்கட்டிங் செய்து விடுவார்கள். இரண்டு மூன்று முறை தொடர்ந்து இந்த ஸ்டைலில் வெட்டி விடுவார்கள். பின்னர் சரியான ஸ்டெப்கட்டிங் ஸ்டைல் வந்துவிடும். பெரும்பாலும் சுருட்டை முடி உள்ளோருக்குத்தான் இந்த ஸ்டைல் அழகாக இருக்கும். எண்பத்தி ஒன்றுக்குப் பிறகு மெல்ல மெல்ல இந்த ஸ்டைல் மதிப்பிழக்கத் தொடங்கியது.

எண்பதுகளில் பிரபலமாக இருந்த மற்றொரு விஷயம் நீளமாக காலர் வைத்த சட்டைகளை அணிவது. 

திரைப்படங்களில் நீளமான காலர் வைத்த சட்டையை கதாநாயகர்கள் பயன்படுத்தினார்கள். நீளமான இரு முனைகளும் அரைவட்ட வடிவத்தில் அமைந்த அத்தகைய காலர்கள் அப்போதைய இளைஞர்களின் பேஷனாக இருந்தது.  பைக்கில் செல்லும் போது காலர்கள் காற்றில் படபடத்து மேலும் கீழும் பறக்கும்.   தூரத்தில் இருந்து இதைப் பார்க்கும்போது ஸ்டைலாக இருக்கும்.

சிறுவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை அரைக்கால் டிரவுசரும் அரைக்கை சட்டையும் அணிந்திருப்பார்கள்.  ஒன்பதாம் வகுப்பிற்குச் சென்றதும் முழு பேண்ட்  சட்டை அணிந்து செல்லுவார்கள். டி-ஷர்ட் என்பது 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் பிரபலமாகத் தொடங்கியது. தற்காலத்தில் பெரும்பாலோர் அணியும் பெர்முடா டிரவுரசர் இரண்டாயிரம் ஆண்டிற்குப் பின்னரே பரவலாக அறிமுகமானது.

காலத்திற்கேற்றபடி அவ்வப்போது உடைகளும் ஸ்டைல்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எத்தனை எத்தனை மாறுதல்கள். மனித மனம் மாற்றங்களை விரும்பிக் கொண்டே இருக்கிறது என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

பெல்பாட்டம் பேண்ட், ஸ்டெப் கட்டிங் ஸ்டைல், நீளமான காலர் .... மீண்டும் தலைதூக்குமா இன்றைய டீன்ஸ் பருவத்தினரிடையே? பிரபலமாகி கலக்குமா?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT