Poisonous Snakes 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

ராதா ரமேஷ்

'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்று பழமொழி உண்டு. பாம்புக்கு பயப்படாதவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். சுற்றுச்சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வரும் பாம்புகள் சில நேரத்தில் மனிதர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படவும் செய்கின்றன. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,38,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர். ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வளர்ச்சி உள்ள நாடுகளின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அதிகமாக இத்தகைய விஷப்பாம்பு தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் உயிரிழப்புகள் ஒரு புறம் இருந்தாலும் இறப்புகளை தாண்டி 4,00,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நெக்ரோசிஸ் எனப்படும் திசு இறப்பு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பு கடித்த இடத்தை சுற்றி உள்ள திசுக்கள் இறந்து கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இந்தியாவில் பதிவாகும் பாம்பு கடி பாதிப்புகளில் 90% பாதிப்புகளுக்கு குறிப்பிட்ட 4  வகை பாம்புகள் மட்டுமே காரணமாக இருக்கின்றன. அதிக விஷத்தன்மை உடைய இந்த 4 வகை பாம்புகளால் தான் அதிக அளவில் மரணங்களும், மரணத்திலிருந்து தப்பிய பின்னும் அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

Poisonous Snakes

1. நல்ல பாம்பு:

நல்ல பாம்பு என்று அழைக்கப்படும்  நாகப்பாம்புகள் அதிக அளவிலான மரணத்திற்கு காரணமாக இருக்கின்றன. வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளை கொண்டிருக்கும் இந்த வகை பாம்புகள் காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்கள் என அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படுகின்றன. சில நேரங்களில் மக்கள் அடர்த்தி குறைந்த நகர்ப்புறங்களிலும் கூட இந்த வகை பாம்புகள் காணப்படுகின்றன.

2. கண்ணாடி விரியன்:

தலை முக்கோண வடிவத்திலும் தலை மற்றும் உடலில்  V படிவத்திலான வெள்ளை நிறக் கோடுகளும் கொண்டவை இந்த வகை பாம்புகள். இதை பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. அதிக வீரிய தன்மை வாய்ந்த இதன் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிர் இழக்க செய்யும் அபாயம் கொண்டது.

3. சுருட்டை விரியன்:

நீளத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த வகை பாம்புகளின் தாக்குதல்  திறன் மிகவும் அபாயகரமானது. இதன் நஞ்சு மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. காய்ந்த சருகுகள் மற்றும் மரங்களின் அடியில் சுருண்டு கிடக்கும் இந்த வகை பாம்புகளை அடையாளம் கண்டு கொள்வதே மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

4. கட்டுவிரியன்:

இந்த வகை பாம்புகள் அதிகமாக இரவு நேரத்தில் தான் வெளியே தென்படும் தன்மை  உடையவை. கருமை நிறத்துடன் உடலில் வெள்ளை நிற பட்டைகளை கொண்டிருக்கும் இந்த வகை பாம்புகளும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த வகை  பாம்புகள் தான் அதிக அளவில் கடிக்கின்றன. பாம்புகள் கடிக்கும் போது உடலினில் செலுத்தப்படும் விஷத்தன்மையை முறிக்க ஹெப்பரின் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெப்பரின் மருந்து வகைகள் நஞ்சு பரவும் வேகத்தை குறைத்து உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிப்பதோடு, நெக்ரோசிஸ் எனப்படும் திசு இறப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது. 

பாம்புகள் சுற்றுச்சூழலிலும், பல்லுயிர் பெருக்கத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கேற்பாளராக விளங்கும் இத்தகைய பாம்புகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. விவசாய பயிர்களை அதிகமாக தாக்கக்கூடிய எலிகள் போன்ற கொறித்துணிகளை கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. சிறு சிறு பறவைகளால் கூட எலிகளின் வளைகளுக்குள் சென்று எலிகளின் எண்ணிக்கையை அழித்து கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பாம்புகள் அத்தகைய வேலையை மிகவும் சிரமமின்றி செய்து விடுகின்றன. எனவே சுற்றுச்சூழலில் முக்கிய பங்கேற்பாளராக விளங்கும் பாம்புகளால் நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன. முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும்  நம்மை தற்காத்துக் கொள்வதே பாம்புகளின் தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழியாகும்.

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

SCROLL FOR NEXT