உலகம் முழுவதும் விவசாயம் மிகப்பெரிய அளவில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உலக இயக்கம் ஆரம்பித்து பல லட்சம் கோடி ஆண்டுகளில் 12 ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே மனிதன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றான். அதேநேரம் முன்பு உலகில் கண்டறியப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரம் தாவர வகைகளில் 6000 முதல் 7000 வகை தாவரங்கள் மனிதன் உண்ண ஏற்றதாக இருந்தது.
ஆனால், தற்போது 200 தாவரங்களை மட்டுமே மனிதன் உணவுக்காகப் பயன்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. இது மட்டுமல்லாமல், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற மூன்று வகை பயிர்களை மட்டும் 60 சதவீத மக்கள் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு விவசாயம் வீழ்ந்து வருகிறது என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மனிதன் விவசாயம் மேற்கொள்ளத் தொடங்கிய பிறகு பல சூழல்களில் விவசாயம் பல்வேறு வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கண்டிருக்கிறது. ஆனால், 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிறகு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் விஷத்தன்மை அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரே வகையான பயிரை பயிரிடுவதால் மண்ணின் தரம், சூழல், மனித உடல் பாதிக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு மனிதனுக்கும் மண்ணுக்கும் பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் வருங்கால உணவு முறையானது கேள்விக்குறியாகவும், துரித உணவாகவும், பல்வேறு ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு அறுவடை செய்யப்படும் உணவுகளாகவும் மாறிவிடும். அதேபோல், புதுப்புது நோய்கள் உருவானவண்ணம் இருக்கும். மேலும், வருங்காலத் தலைமுறையினருக்கு உணவு உற்பத்தி குறித்து கற்பிப்பதோ, உணவு மேலாண்மை குறித்து சொல்லித் தருவதோ இல்லை என்றால் வருங்காலத்தில் உணவு கிடைப்பது மிகப்பெரிய பிரச்னையாக மாறும்.
இந்த சூழலை மாற்ற கைவிடப்பட்ட தாவர வகைகளை மீட்டெடுக்க வேண்டும். மேலும், உணவு உற்பத்தி முறை குறித்து ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இன்றியமையாத தேவையாகும். குறிப்பாக, சிறுதானியங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமிக்கும் பல்வேறு பயன்களைத் தந்து வருகிறது. சிறுதானியம் குறைந்த தண்ணீரில், வறட்சி பகுதியில் கூட வளரக்கூடியது. இது மட்டுமல்லாமல், வளிமண்டலத்தின் காற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
சிறுதானிய உணவு பயன்பாட்டை மீண்டும் மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இவ்வாறு இந்தியாவில் கைவிடப்பட்ட சாமை, திணை, வரகு, குதிரைவாலி, மேகாலயா மாநில தாவர வகைகள் ஆகியவற்றையும். சீனாவில் கைவிடப்பட்ட பக்வீட் கோதுமை வகைகளையும், பிரேசிலில் கைவிடப்பட்ட நட் தாவரம், ஆஸ்திரேலியாவின் ஓசேனியா, பொலிவியாவின் தினோவா, நேபாள் நாட்டின் அமராந்த், எத்தியோப்பியாவின் டெப், ஆப்பிரிக்காவின் கசப்பு தக்காளி போன்ற பல்வேறு கைவிடப்பட்ட தாவரங்களை மீட்டெடுக்க வேண்டும். இதன் மூலம் உணவு சங்கிலி வலுப்பெறும்.