கடந்த கோடைக் காலத்தில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டு நம்மை வாட்டி எடுத்தது. கோடைகாலத்தில் வெப்பம் வாட்டுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பலர் சொல்வதுபோல இதற்கு பருவநிலை மாற்றமும் காரணம் எனப்படுகிறது. ஆனால், இது உண்மைதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
காலநிலை மாற்றத்துக்கான குழுவான IPCCன் அறிக்கைப்படி, இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்களின் 23 சதவீத வெளியேற்றம், விவசாயம், வனவியல் மற்றும் பிற நிலப் பயன்பாட்டால் ஏற்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இப்படி வெளியேறும் வாயுக்களில் விவசாயத்தின் பங்களிப்பு 14 சதவீதமாகவும், தமிழகத்தில் 17 சதவீதமாகவும் உள்ளது.
விவசாயத்துக்கும் காலநிலை மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என நாம் புரிந்துகொள்ள முற்படும்போது, 2020 - 21ம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்புகளின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த விவசாய நிலங்களில் 60 சதவிகிதம் நெல் பயிரிடவும், 10 சதவிகிதம் கரும்புக்காகவும் 7 சதவிகிதம் பருத்தி மற்றும் 10 சதவிகிதம் எண்ணெய் மற்றும் பருப்பு வித்துக்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பாக ,நெல் சாகுபடி, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துக்கு முக்கியக் காரணமாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நெல் வயல்களில் உருவாகும் பாக்டீரியாக்கள், மீத்தேனை உற்பத்தி செய்கிறது. மீத்தேன் பசுமை இல்ல வாயு என்பதால், இது கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகும். இந்த வாயு காலநிலை மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதேபோல, பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் காரணமாகவும் உலகம் வெப்பமாகிறது. அதாவது, நெல் வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்களில் 40 சதவீதத்தை பயிர்கள் உறிஞ்சுவதில்லை. இவை அனைத்தும் நைட்ரஸ் ஆக்சைடாக மாறி, புவி வெப்பமடையக் காரணமாக அமைகிறது. இது போதாதென்று அறுவடைக்குப் பிறகு மீதமுள்ள வைக்கோலை எரித்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறோம்.
இப்படித்தான் காலநிலை மாற்றத்துக்கு விவசாயமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த காலநிலை மாற்றத்தால் வறட்சி, நோய்த் தாக்கம் போன்றவற்றால் விவசாயத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.