Andril bird 
பசுமை / சுற்றுச்சூழல்

காதலின் இலக்கணத்துக்கு உதாரணமாய்... வாழ்ந்தால் இப்படி வாழோனும் காதலர்களே!

ராதா ரமேஷ்

மனிதனின் மிக மெல்லிய உணர்வுகளில் காதலும் ஒன்று. இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் எனும் காந்தம் இன்னும் கரைந்து விடாமல் காற்றோடு கலந்திருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். பொதுவாகவே காதலுக்கு எடுத்துக்காட்டாக பறவைகளை சொல்லும் போது  புறாக்கள், லவ் பேர்ட்ஸ் இவற்றை மட்டுமே சொல்வோம். ஆனால் அதையும் தாண்டி காதலுக்கு, காதலின் இலக்கணத்துக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாய் போற்றக்கூடிய பறவை என்றால் அது அன்றில் பறவையை தான் சொல்ல வேண்டும்.

நம்முடைய சங்க கால தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற இந்த அன்றில் பறவை காதலுக்கு ஒரு மிகச்சிறந்த இலக்கணமாய் திகழ்ந்தது. இதற்கு அத்தகைய வியக்க தகுந்த குண நலன்கள் உள்ளன.

இன்று காதல் திருமணத்தால் இணைந்த பல மனங்கள் இறுதிவரை அந்த காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்லை. ஆனால் தன்னுடைய காதலை இறுதி வரை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இத்தகைய அன்றில் பறவைகளே சாட்சி. அதனால்தான் நம் சங்க கால கவிஞர்கள் இதனை பல்வேறு விதமாக போற்றிப் பாடியுள்ளனர்.

அன்றில் பறவை தனது துணையுடன் ஒரு முறை இணை சேர்ந்து விட்டால் அதன்பின் வாழ்நாளில் எந்த பறவையுடனும் இணை சேராது. ஏதேனும் சந்தர்ப்பவசத்தால் தனது துணையை இழந்து விட்டால் உடனே அந்தப் பறவையும் கூடவே இறந்து விடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்றில் பறவையானது  தமிழ் இலக்கியங்களில்  நளவெண்பா, குறுந்தொகை போன்ற நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

அன்றில் பறவைக்கு உரிய சிறப்பு என்னவென்றால் இந்த  பறவையானது சூழலுக்கு தகுந்தாற்போல் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இரை தேடும் போது தன்னுடைய துணையை தொலைத்து விட்டால் துணையைத் தேடுவதற்காக ஒரு வித ஓசையை எழுப்பும். இத்தகைய ஓசையை அகவல் என்று அழைப்பர். தன்னுடைய இணையுடன் சேரும்போது ஒரு விதமான ஓசையை எழுப்பும். இத்தகைய ஓசையை உளறல் என்பர். பெண் பறவை கருவுற்று இருக்கும்போது ஒருவித ஓசையை எழுப்பும். இத்தகைய ஓசையை நரலல் என்று அழைப்பர். இப்படி தன்னுடைய ஒவ்வொரு சூழலையும் வேறுபடுத்தி காட்டுவதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பும் குணநலன்களை உடையது அன்றில் பறவை.

அன்றில் பறவையானது ஒரு வகை நீர்ப்பறவை ஆகும். கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் இந்த வகை பறவையானது அதிகமாக காணப்படும். சின்ன சின்ன மீன்கள், தவளை, புழுக்களை உணவாக உட்கொள்ளும். இது மரக்கிளைகளில் கூடு கட்டி இருக்கும் கொக்குகளோடு சேர்ந்தே முட்டையிடும்.

தமிழ்நாட்டில் கோடியக்கரை பகுதிகளில் அதிகமான அன்றில் பறவைகள் வாழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த அன்றில் பறவைக்கு பனங்கிளி, அரிவாள் மூக்கன் என்று வேறு பல பெயர்களும் உண்டு. 

தான் எழுப்பும் குரல்களுக்கு ஏற்ப பல்வேறு விதமான சைகைகள் இருப்பது போலவே உடல் அமைப்பிலும் பல வேறுபாடுகளை கொண்டிருப்பவை  இப்பறவைகள். பருவம் வந்த அன்றில் பறவைகள் செந்நிற உடலும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கும். பருவம் வராத அன்றில் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவைகள் பெரும்பாலும் கூட்டமாகவே வாழும். பறக்கும் போதும் வரிசையாகவே பறக்கும் இயல்பினை உடையவை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்றில் பறவைகளை காதலின் சின்னமாக போற்றி புகழாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். சங்க காலம் தொடங்கி இன்றைய நவீன கவிஞர்கள் வரை இந்த அன்றில் பறவையை தன்னுடைய பாடலில் சேர்த்து காதலினை மேன்மைப்படுத்தியுள்ளனர்.

திரிசூலம் படத்தில் கவிஞர் கண்ணதாசனும், சிறையில் பூத்த சின்ன மலர் படத்தில் கவிஞர் வாலியும், ஜீன்ஸ் படத்தில் கவிஞர் வைரமுத்துவும், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கவிஞர் தாமரையும், தாம் தூம் படத்தில் கவிஞர் நா. முத்துக்குமாரும் அன்றில் பறவையை காதலின் சின்னமாக வர்ணித்து தம்முடைய எழுத்துக்களால் போற்றி புகழ்ந்துள்ளனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்றில் பறவைகளின் எண்ணிக்கை இன்றைய காலகட்டங்களில் வெகுவாக குறைந்து வருகிறது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப  இயற்கையோடு சேர்த்து இத்தகைய பறவைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT