‘எறும்புகளின் மரண சுழல்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிறிதாகத் தொடங்கும் ஒரு விஷயம் எப்படி பெரிய பிரச்சினையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். எறும்புகள் எங்காவது இடம் பெயர்ந்து செல்லும்போது அவற்றின் பாதை மாறி திடீரென ஒரு சூழலில் சிக்கிக்கொள்ளும். இது எறும்புகளின் மரண சுழல் என்று அழைக்கப்படுகிறது.
எறும்புகள் கூட்டமாக நீண்ட தூரம் பயணிக்கும்போது அவற்றின் உடலில் இருந்து வெளியேறும் ‘பெரோமோன்’ என்ற ரசாயனத்தடத்தைப் பின்பற்றுகின்றன. இது மற்ற எறும்புகளை ஒரே பாதையில் வர வைக்கிறது. சில சமயங்களில் இந்த ரசாயனத்தடம் மாறும்போது, எறும்புகள் திசைமாறி வேறு பகுதிகளை நோக்கி செல்லும். எறும்புகள் மிகவும் வித்தியாசமான உயிரினங்கள். அவை தங்கள் சுற்றுப்புறத்தைப் பார்க்கும் விதம் மனிதர்களை விட மிகவும் வித்தியாசமானது. அவை பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை நம்பியே இருக்கின்றன. இதன் காரணமாக மரண சூழலில் சிக்கிக்கொள்ளும் எறும்புகள், நீண்ட காலம் ஒரே இடத்தில் சுற்றி வந்து இறுதியில் மடிந்து போகும்.
எறும்புகள் இத்தகைய சூழலில் சிக்கிக் கொண்டால் அவை உணவு மற்றும் நீரைத் தேடி செல்ல முடியாது. இதனால் பசியால் அல்லது தாகத்தால் இறந்துவிடும். இதுபோன்ற சூழல்களில் மொத்த எறும்புக் கூட்டமும் சிக்கிக் கொள்வதால், அதிகப்படியான எறும்புகள் இறந்து போகும் வாய்ப்புகள் அதிகம். அல்லது மரண சுழலில் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் எறும்புகளை மற்ற உயிரினங்கள் தாக்கி அழித்துவிடலாம்.
இந்த சூழலில் மாட்டி எறும்புகள் இறந்த பிறகு அவற்றின் உடலில் இருந்து வெளியாகும் பெரோமோன் வாசனை மற்ற எறும்புகளை சுழலுக்குள் இழுத்துவிடும். இதனால், இந்த சூழல் மேலும் பெரிதாகி பல எறும்புகள் இறந்துபோகும் வாய்ப்புள்ளது. எறும்புகளின் இந்த மரண சூழலில் இருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
எறும்புகள் கூட்டமாக வாழும் குணம் கொண்ட உயிரினங்கள். ஆனால் இந்த குணமே சில சமயங்களில் அவற்றிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என்பதை உணர்த்துகிறது. மேலும், எறும்புகள் தங்கள் கூட்டத்தின் நலனுக்காகவே அனைத்தையும் செய்கின்றன. ஆனால், சில நேரங்களில் அவை எடுக்கும் தவறான முடிவுகள் எறும்புகளை மொத்தமாக அழித்து விடுகின்றன.
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் அதன் விளைவுகளை நாம் சிந்திக்க வேண்டும். எறும்புகள் தங்களின் வாசனைத் தடத்தை பின்பற்றும்போது அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் காரணமாகவே அவை மரண சூழலில் சிக்கிக்கொண்டு மடிந்து போகின்றன.