வலசை போதல் (Animal migration) என்பது பல வகையான பறவைகள், விலங்குகள் பருவ காலங்களை ஒட்டி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரிய அளவிலான இடம்பெயர்தலைக் குறிக்கிறது.
மிருகங்களும் பறவைகளும் வலசை போவதின் முக்கியத்துவம்:
சுற்றுச்சூழல் அமைப்புகளில் சமநிலை: சுற்றுச்சூழல் அமைப்புகளில் விலங்குகள் இடம்பெயர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது விதைகள் விநியோகம், மகரந்த சேர்க்கை மற்றும் இரையினங்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உதவுகிறது. இயற்கை வளங்கள் அதிகமான உள்ள பகுதிகளுக்கு விலங்குகள் நகர்வதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் குளிர்ந்த இடங்களைத் தேடியும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான இடங்களைத் தேடியும் விலங்குகளும் பறவைகளும் வலசை போகின்றன.
உணவு: பருவநிலை மாறும்போது ஒரு பகுதியில் உணவு கிடைப்பது குறையும். எனவே, பறவைகள் குளிர் காலத்தில் உணவு பற்றாக்குறை உள்ள குளிர் பகுதிகளிலிருந்து உணவு அதிகமாக இருக்கும் வெப்பமான பகுதிகளுக்கு பறந்து செல்கின்றன. யானைகள் சில சமயம் இலக்கை நிர்ணயிக்காமல் உணவைத் தேடி அலைகின்றன. அமெரிக்காவில் வறண்ட காலங்களில் புதிய புல்லைத் தேடி மில்லியன் கணக்கான காட்டெருமைகள் சமவெளிகளுக்கு வலசை போகின்றன.
இனப்பெருக்கம்: சில விலங்குகள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்யும். உதாரணமாக, கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக அவை பிறந்த கடற்கரைகளுக்குத் திரும்புகின்றன. கடலில் வாழக்கூடிய மீன்கள், திமிங்கலம் ஆகியவையும் வலசை போகின்றன. சால்மன் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலில் இருந்து நன்னீரை நோக்கி 1500 மைல்கள் வரை பயணிக்கின்றன. வட அமெரிக்காவில் உள்ள மான்கள் 5000 கிலோமீட்டருக்கும் மேலாகப் பயணிக்கின்றன. எட்டு வாரங்களில் பிரேசில் ஆமைகள் 2000 கிலோ மீட்டர்கள் பயணிக்கின்றன.
தட்பவெப்ப நிலை: தீவிர வானிலையிலிருந்து தப்பிக்க விலங்குகள் அடிக்கடி இடம் பெயர்கின்றன. திமிங்கலங்கள் குளிர் துருவப் பகுதிகளில் இருந்து வெப்பமான வெப்பமண்டல நீருக்குப் பயணிக்கின்றன. சில விலங்குகள் வெவ்வேறு அட்ச ரேகைகளுக்கு இடையில் நகரும். மோனார்க் பட்டாம்பூச்சிகள் கனடாவில் இருந்து மெக்சிகோவிற்கு பறக்கின்றன. மலை ஆடுகள் குளிர் காலத்தில் தாழ்வான பகுதிகளுக்கும் கோடையில் உயரமான பகுதிகளுக்கும் நகர்கின்றன.
உயிர் வாழ்தல்: விலங்குகள் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து காத்துக் கொள்ளவும், நோய் காரணமாக அல்லது வளமான இடங்களைத் தேடி வலசை போகின்றன.
வலசை போகும் முறைகள்: விலங்குகள் வலசை போவதற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. சில பறவைகள் பகலில் சூரியனின் நிலையை பயன்படுத்துகின்றன. இரவில் நட்சத்திரங்கள் அவற்றை வழிநடத்துகின்றன. கடல் ஆமைகள் மற்றும் சில பறவைகள் பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து அவற்றின் உதவியால் தாம் செல்லும் வழியைக் கண்டடைகின்றன. சில விலங்குகள் வலசை போவதற்கு பழக்கமான அடையாளங்கள் அல்லது வாசனையை நம்பி இருக்கின்றன.
இடம்பெயர்தலில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள்:
உயிர் ஆபத்துகள்: வலசை போகும்போது விலங்குகளும் பறவைகளும் வேட்டையாடுபவர்களால் துன்புறுத்தப்படுகின்றன. சில சமயம் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன.
சோர்வு: நீண்ட நேரம் பயணம் செய்வது விலங்குகளை சோர்வடையச் செய்யும். வழியில் போதுமான உணவு கிடைக்காமல் போகலாம் அல்லது சரியான ஓய்வும் கிடைக்காது.
காலநிலை மாற்றம்: கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் இடம் பெயர்வு முறைகளை சீர்குலைத்து விலங்குகளுக்கு உணவு அல்லது பொருத்தமான இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்குகின்றன.