Landslide  
பசுமை / சுற்றுச்சூழல்

நிலச்சரிவைத் தடுக்க எந்த மரங்களை வளர்க்க வேண்டும்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

மலைப்பகுதிகளில் நிலச்சரிவைத் தடுக்க இயற்கையான வழிமுறைகளைக் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதன்படி நிலச்சரிவுகளைத் தடுக்கும் மரங்கள் எவை என இந்தப் பதிவில் பார்ப்போம்.

மலைப்பகுதிகளில் ஏற்படும் ஓர் இயற்கைப் பேரிடர் தான் நிலச்சரிவு. மண் அரிப்பு தான் இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலே போதும், நிலச்சரிவையும் தடுத்து விடலாம். பொதுவாக மழைக்காலங்களில் தான் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இயற்கைப் பேரிடரான நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.

நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், இந்த மலைப்பகுதிகளில் பாரம்பரியம் மிக்க சோலைக் காடுகள் உள்ளன. இவை மிகவும் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால், மண் அடுக்குகளில் திடமான பிடிப்புத் தன்மை ஏற்படும். இதனால் மண் அரிப்பும் ஏற்படாது. மண் அரிப்பு ஏற்படவில்லை என்றால், நிலச்சரிவுக்கும் வாய்ப்பிருக்காது. ஆகையால், நீண்ட ஆழத்திற்கு வேர் விடும் மரங்கள் இருந்தால் நிலச்சரிவைத் தடுக்க முடியும்.

தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் யூகலிப்டஸ் மற்றும் சவுக்கு போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் என்பதால், மண் வளம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், இம்மரங்கள் குறைந்த அளவு வேர்களையே கொண்டிருப்பதால், மிக எளிதில் மண் அரிப்பு ஏற்படும். கட்டுமான வேலை மற்றும் விறகு பயன்பாடு போன்ற சில காரணங்களுக்காக முன்பு இம்மரங்கள் வளர்க்கப்பட்டன. ஆனால், இம்மரங்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை விடவும் தீமைகள் தான் அதிகமாக உள்ளன.

அதிக ஆழம் மட்டுமின்றி, அதிக பரப்பளவிலும் வேர் விடும் மரங்கள் தான் மலைப்பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரங்கள். இதன் வேர்கள் மண்ணின் பிடிப்புத் தன்மைக்கு உதவுகின்றன. இம்மரங்கள் மட்டுமின்றி, பாரம்பரிய புற்களை வளர்ப்பதும் மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. இதனை சோதனை செய்யும் முறையில், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சோலை மரங்கள் மற்றும் பாரம்பரிய புற்கள் வளர்க்கப்பட்டன. இதன்மூலம் இந்த இடத்தின் உயிர் சூழல் மேம்பட்டது மட்டுமின்றி, வன விலங்குகளின் வருகையையும் அதிகரித்துள்ளது.

காடுகளை அழியாமல் பாதுகாப்பதில் யானைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளைப் பாதுகாப்பதன் மூலமும் நிலச்சரிவைத் தடுக்க முடியும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் மலைப் பிரதேசங்களில் அடிக்கடி இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அவ்வகையில் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை விழுங்கியதோடு மட்டுமல்லாமல், சில கிராமங்களையும் புதைத்து விட்டது‌. மனதை ரணமாக்கும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமலிருக்க தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு முதல் படியாக ஆழமாக வேரூன்றக் கூடிய சோலை மரங்களை மலைப்பகுதிகளில் வளர்ப்பது மிகவும் அவசியமாகும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT