இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போது ஐபிஎல் போட்டிக்காகவும் தயாராகி வருகிறார். ஆனாலும், தனது கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே தனது பண்ணையில் தொடர்ச்சியாக விவசாயப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள தனது ஈஜா பண்ணையில் பல நூறு ஏக்கரில் டிராகன் பழம், தர்பூசணி, முலாம்பழம், பட்டாணி, காய்கறி போன்றவற்றைப் பயிரிட்டுள்ளார். மேலும், பிரதானமாக அதிக பரப்பளவில் ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கிறார்.
மிகப்பெரிய கோடீஸ்வரரான தோனி தனது பண்ணையில் நேரடியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தினமும் காலையிலேயே தனது தோட்டத்திற்கு சென்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்தியாவில் ஸ்ட்ராபெரிக்கான சந்தை விரிவடைந்து இருக்கக்கூடிய நிலையில், தனது பண்ணையிலும் அதிக அளவில் ஸ்ட்ராபெரியை பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்.
ஸ்ட்ராபெரி சோடியம், கொழுப்பு, கொலஸ்ட்ரால் ஆகியவை இல்லாத பழமாகும். மேலும், குறைந்த கலோரி கொண்ட உணவு வகை என்பதால் இது இரத்த அழுத்தத்திற்கும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களான சோப்பு, ஷாம்பு தயாரிப்பில் ஸ்ட்ராபெரி ஆலைகளுக்கு தேவைப்படுவதால் இந்தியாவில் ஸ்ட்ராபெரிக்கான சந்தை அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு 2022ம் ஆண்டு இந்தியாவில் ஸ்ட்ராபெரிக்கான தேவை 252 சதவீதம் அதிகரித்தது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் ஸ்ட்ராபெரி பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பழம் ஒரு கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், தற்போது எம்.எஸ்.தோனியின் ஈஜா பண்ணையில் அதிகம் ஸ்ட்ராபெரி பயிரிடப்பட்டுள்ளது.