வானம் எங்கும் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் Northern lights எனப்படும் அரிய வானியல் நிகழ்வு, Seattle மாகாணத்தில் நேற்று தோன்றியுள்ளது. சூரியப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த அரிய நிகழ்வு மீண்டும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. சரி வாருங்கள் இப்பதிவில் Northern lights பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
Northern Lights அல்லது Aurora Borealis என அழைக்கப்படும், இரவு நேரத்தில் வானில் வண்ணங்கள் அலையலையாக ஓடும் மாயாஜாலக் காட்சி, பல நூறு ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வரும் ஒரு இயற்கை வானியல் நிகழ்வாகும். இந்த இயற்கை நிகழ்வு துருவப் பகுதிகளிலேயே அதிகம் நிகழ்கிறது. அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களினால் இந்த விளைவு ஏற்படுகிறது.
Northern Lights எவ்வாறு நிகழ்கின்றன?
இந்த அரிய நிகழ்வு சூரியத் துகள்களால் ஏற்படுகின்றன. முதலில் சூரியனிலிருந்து வெளிவரும் சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் மோதுகின்றன. அப்போது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்களுடன் இவை வினைபுரிந்து பல்வேறு வண்ணங்களில் ஒளியை வெளியிடுகின்றன. இதுதான் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது வானில் ஒரு மாயாஜால காட்சி நடப்பது போல தோன்றுகிறது.
எங்கெல்லாம் பார்க்கலாம்?
பூமியின் Magnetic Pole-களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், குறிப்பாக வட துருவம் மற்றும் தென் துருவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த அரிய நிகழ்வை நாம் காண முடியும். வடக்கு அரைக்கோளத்தில், நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, கனடா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளிலும், தெற்கு அரைக்கோளத்தில் அண்டார்டிகா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் தெற்கு பகுதிகளிலும் காணலாம். குறைந்த ஒளி மாசுபாடு கொண்ட குளிர்கால மாதங்களில் தெளிவான இரவு நேரங்களில் இந்த நிகழ்வை துல்லியமாகப் பார்க்க முடியும்.
Northern Lights-ன் சுற்றுச்சூழல் தாக்கம்: இந்த அழகிய வானியல் நிகழ்வு பூமியில் எந்த நேரடி விளைவுகளையும் ஏற்படுத்தாது. உண்மையிலேயே இவை இயற்கையின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும். இருப்பினும், இந்த நிகழ்வின்போது ஏற்படும் சூரிய செயல்பாடுகள் மற்றும் காந்தப் புயல்கள், சுற்றுச்சூழலில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
காந்த புயல்களின் பாதிப்பு: தீவிர சூரிய செயல்பாடு, பூமியில் புவி காந்தப் புயல்களை ஏற்படுத்தும். இதனால் பூமியிலிருந்து செயற்கைக்கோளுடன் தொடர்பு கொள்வது பாதிக்கப்படலாம். இருப்பினும் இன்றைய நவீன தொழில்நுட்பம் இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னேறிள்ளது. இதனால் மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.
வளிமண்டல பாதிப்பு: Northern Lights ஏற்படும் நேரத்தில் சூரியனிலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்வதால், சில வேதியியல் மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம். இந்த மாற்றம் ரேடியோ அலை, ஜிபிஎஸ் அமைப்பு போன்றவற்றை பாதிக்கலாம். விஞ்ஞானிகள் இந்த விளைவின் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ள தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரிய வானியல் நிகழ்வை நேரில் பார்ப்பதென்பது உண்மையிலேயே ஒரு ஆகச்சிறந்த அனுபவமாகும். இந்தியாவில் இதை நாம் பார்க்க முடியாது. இருப்பினும் இதுகுறித்த காணொளிகளும் புகைப்படங்களும் நமக்கு ஒரு திருப்திகரமான உணர்வைக் கொடுக்கின்றன.