உலகம் முழுவதும் நமக்குத் தெரியாத பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனி ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையைக் கொண்டுள்ளன. பழங்களில் அரிதான பழம் என்றாலே அது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக நாம் அனைவருக்குமே தெரிந்த ஆப்பிள் பழத்தில் ஒரு அரிய வகை ஆப்பிள் இருக்கிறது என்றால் எப்படி உணர்வீர்கள்? உடனடியாக அதைப் பற்றி தெரிந்துகொண்டு அதை வாங்கிச் சாப்பிட வேண்டும் என நினைப்பீர்கள் அல்லவா?
அத்தகைய மிகவும் வித்தியாசமான ஆப்பில்தான் கருப்பு வைர ஆப்பிள். ஒட்டுமொத்த அனைத்து ஆப்பிள் வகைகளில் இது ஒரு தனித்துவமான ரகம் என்றே சொல்லலாம். பார்ப்பதற்கு அடர் ஊதா நிறத்தில் வைரம் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்பிள், உட்புறத்தில் சராசரி ஆப்பிள் போலவே வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இந்த ஆப்பிளில் இயற்கையாகவே அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது. திபெத்தில் உள்ள நயிங்ச்சி மலைப்பகுதியில் விளையும் இந்த வித்தியாசமான ஆப்பிளின் விலை ரூபாய் 500. ஒரு கிலோ 500 அல்ல, ஒரு ஆப்பிளின் விலை ரூபாய் 500.
திபெத் மலைப்பகுதியில் உள்ள தட்பவெட்ப நிலை உலகெங்கிலும் உள்ள மற்ற இடங்களை விட கடினமாக இருப்பதால், இந்த கருப்பு வைர ஆப்பிள் திபெத்தில் மட்டுமே விளைகிறது. இதன் காரணமாகவே இந்த ஆப்பிளின் விலையும் அதிகமாக உள்ளது.
சீன நாட்டின் மிகப்பெரிய கடைகளில் மட்டும் விற்கப்படும் இந்த ஆப்பிள், ஒரு நபருக்கு இத்தனை ஆப்பிள்கள்தான் விற்க வேண்டும் என்ற வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.