தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் நாம் அளவுக்கு அதிகமாகவே மாசுபடுத்தி வருகிறோம். இன்றைய சூழலில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனை முற்றிலுமாக குறைப்பது முடியாத காரியமாகி விட்டது. இருப்பினும் ஒருமுறைப் பயன்படுத்திய பொருள்களை, மறுமுறைப் பயன்படுத்த மறுசுழற்சி செய்யலாம். இதன்மூலம் பிளாஸ்டிக் பொருள்களின் வாழ்நாளை நீட்டித்து, உற்பத்தியைக் குறைக்க முடியும். பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமின்றி, மின்னணு உபகரணங்களையும் மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை உண்டாகும்.
மக்கள் மத்தியில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தினாலும், பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் நாம் உபயோகப்படுத்தும் பொருள்களில் எதையெல்லாம் மறுசுழற்சி செய்ய முடியுமோ அவையனைத்தையும் மறுசுழற்சிக்கு உட்படுத்துவது அவசியம்.
வீடுகளில் உருவாகும் குப்பைகளை அப்படியே சாலைகளில் கொட்டுவது தான் பொதுமக்கள் பலரும் செய்யும் முதல் தவறு. குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என இரண்டாக தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் கொட்டினாலே, மறுசழற்சிக்கான முதல் படியை நாம் எடுத்து வைத்துவிட்டோம் என்பதற்கு ஈடாகும். தூய்மையான சுற்றுப்புறத்திற்கு இதுவே அடிப்படையாகும்.
நம் வீடுகளில் பயன்படாத பொருள்கள் நிச்சயமாக இருக்கும். இந்தப் பொருள்களை மற்றவர்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது, அப்பொருள் வீணாவதை நம்மால் தடுக்க முடியும். மேலும் சில பொருள்களை மறு உபயோகம் செய்ய முடிந்தால் அவற்றையும் பயன்படுத்த வேண்டும். அடுத்த படியாக தேவையற்ற பிளாஸ்டிக், ஆடைகள், புத்தகங்கள் மற்றும் மின்னணு பொருள்களை மறு சுழற்சிக்கு உட்படுத்தலாம். இந்த நல்ல முயற்சிக்காக மக்களுக்கு உதவத் தொடங்கப்பட்டது தான் ஆர்ஆர்ஆர் மையம்.
ஆர்ஆர்ஆர் என்றாலே பலருக்கும் ராஜமௌலி இயக்கிய திரைப்படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த ஆர்ஆர்ஆர் ஒரு நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. இதனுடைய முழு அர்த்தம் யாதெனில், Reduce Reuse Recycle. உங்கள் வீட்டில் பயன்படாத பொருள்களை ஆர்ஆர்ஆர் மையத்தில் கொடுத்தால், அதனை மறுசுழற்சி அல்லது மறு பயன்பாட்டுக்கான நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொள்ளும். ஆர்ஆர்ஆர் மையம் தற்போது புதுச்சேரி நகராட்சி பகுதியில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் விரைவிலேயே நாடு முழுக்க விரிவடைந்தால், நமது நாட்டை நம்மால் தூய்மையாக வைத்திருக்க முடியும்.
மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ஆர்ஆர் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி துறையுடன் கைகோர்த்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து பயன்படாத பொருள்களை ஆர்ஆர்ஆர் மையத்தில் ஒப்படைக்கலாம். மேலும், இந்த மையத்தின் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் போடலாம். இதன் மூலம் மக்களிடையே கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவித்து, கழிவுப் பொருள்களை குறைக்க முடியும். மேலும் சமூக அக்கறையில் பொதுமக்களின் பங்கும் வெளிப்படும். நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள நம் ஒவ்வொரிடத்திலும் மாற்றம் உண்டாக வேண்டும்.
ஆர்ஆர்ஆர் மையம் அனைத்து இடங்களிலும் இல்லை. இருப்பினும் பொதுமக்கள் சமூக அக்கறையை முன்னிறுத்தி பழைய பொருள்களை முறையாக கையாள வேண்டியது அவசியமாகும்.