The Hidden Truths Of Mount Everest. 
பசுமை / சுற்றுச்சூழல்

எவரெஸ்ட் சிகரத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்… இது தெரிந்தால்? 

கிரி கணபதி

இதுவரை எவரெஸ்ட் சிகரம் பற்றி நீங்கள் எவ்வளவோ சிறப்பான விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக அந்த சிகரத்தின் மீது ஏறி சாதனை புரிந்தவர்களின் கதைகள் மட்டுமே வெளி வருகின்றன. ஆனால் எவரெஸ்ட் சிகரம் பற்றி சொல்லப்படாத உண்மை ஒன்று உள்ளது. 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது மனித சாதனையின் உச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதன் பிரமிக்க வைக்கும் அழகுக்கு அடியில், அது பலரது உயிரை வேட்டையாடியது மறைக்கப்பட்டுள்ளது. இங்கு மலையேற்றம் தொடங்கிய காலம் முதலே, சாதனையாளர்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர்களின் கல்லறையாக மாறியுள்ளது எவரெஸ்ட். எவரெஸ்ட் சிகரத்தின் பெருமைகளை நாம் பேசும் அதே வேளையில், அதன் இருண்ட பக்கத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

நீங்கள் நினைப்பது போல எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அது ஒரு ஆபத்தான முயற்சி. கடுமையான குளிர், சுறாவளிக் காற்று மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவை, மலையேறுபவர்கள் உயிர் வாழ்வதை சவாலாக மாற்றுகின்றன. ஒருவேளை உங்கள் உடல் அதற்கு ஒத்துவரவில்லை எனில், நிரந்தர சிலையாக எவரெஸ்ட் சிகரத்திலேயே இருக்க வேண்டியதுதான். 

எவரெஸ்ட் ஒரு கல்லறை: எவரெஸ்ட் சிகரத்தில் நூற்றுக்கணக்கான இறந்த உடல்கள் இருப்பது முற்றிலும் உண்மை. மலை ஏறுபவர்கள் இவற்றைக் கடந்துதான் பயணிக்க வேண்டும். இதுவரை அங்கு 200க்கும் அதிகமான சடலங்கள் மலை முழுவதும் சிதறிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பனிக்கு அடியில் எவ்வளவோ சடலங்கள் மறைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

கிரீன் பூட்ஸ்

அங்குள்ள சடலங்களில் இந்த ‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் மனிதரும் அடங்குவார். அவர் 1996 இல் மலையேற்றத்தின்போது இறந்த இந்தியர் ஆவார். அவரது பெயர் Tsewang Paljor. இவரது சடலம் இன்றளவும் மலையேற்றத்தின்போது அனைவரும் காணக்கூடிய வகையில், அப்படியே உறைந்த நிலையில் உள்ளது. இவரும் இவரது குழுவினரும் மலை உச்சியை அடைவதற்கு கொஞ்சம் முன்னதாக பனிப்புயலால் தாக்கப்பட்டனர். அப்போது ஆபத்தை உணர்ந்த சிலர் கீழே இறங்கினர். ஆனால் Tsewang மற்றும் சிலர் தொடர்ந்து முன்னேற முடிவெடுத்தது, அவர்களது உயிரையே காவு வாங்கியது. இதில் மொத்தம் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். 

பிணங்களை மீட்கலாமே? எவரெஸ்டில் இருந்து உடல்களை மீட்பது ஆபத்தான மற்றும் சிக்கலான பணியாகும். அதிக உயரம் மற்றும் மோசமான நிலப்பரப்பு காரணமாக, ஒரு சடலத்தை வெளியே எடுக்க பல உயிர்களை பணயம் வைக்க வேண்டி வரும். எனவே அங்கிருந்து உடல்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது பெரும்பாலும் சாத்தியமற்றது. இதனாலேயே மலையேற்றத்தின்போது இறந்தவர்கள் மலையிலேயே நினைவுச் சின்னங்களாக இருந்து விடுகின்றனர். 

மலையற்றத்தின்போது எவரெஸ்ட் சரிவுகளில் இறந்த உடல்களைக் கடந்து செல்வதென்பது ஒரு பயங்கரமான அனுபவமாகும். கடினமான சூழலில் இறந்த சடலங்களைப் பார்ப்பதென்பது பயம் மற்றும் ஆபத்து உணர்வைக் கொடுப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். இத்தகைய காட்சிகளைக் கண்டு மலை உச்சியை அடைந்து மீண்டும் திரும்பியவர்களின் மனநிலையில், நீண்டகால தாக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆனால் இன்றளவும், இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற பலர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வளவு பிணங்களைக் கடந்து உங்களால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியுமா? அதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா? என்பதைக் கமெண்ட் செய்யவும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT