Falcon 
பசுமை / சுற்றுச்சூழல்

குறைகிறது வல்லூறுகளின் எண்ணிக்கை! பாதிப்புகள் மிக அதிகம்... எச்சரிக்கை!

மதுவந்தி

வல்லூறுகள் - எங்கேயோ, எப்போதோ கேட்டதுபோல் உள்ளதா? ஒரு காலத்தில் இந்தியாவில் நிறைய இருந்த இவை இப்பொழுது சில நூறுகளுக்குக் குறைந்து விட்டது. இன்று இவற்றின் நிலை அழிந்து வரும் இனங்களின் கீழ் வந்துள்ளது. ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணம்? இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, என்னென்ன ஏற்பட உள்ளது பார்க்கலாம் இங்கே...

இந்தியாவின் மேற்கு மற்றும் கங்கை நதிக் கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகம் காணப்பட்டன இந்த வல்லூறுகள். இவை கூரிய மற்றும் வளைந்த அலகு, கூர்மையான பார்வை, வழுக்கைத் தலை, கூன் விழுந்த தோற்ற அமைப்பைக் கொண்டவை. கங்கையில் மிதக்கும் பிணங்களையும் மற்ற உயிரினங்களின் பிணங்களையும் கொத்தித் தின்னும் பிணம் திண்ணி வகை உயிரினங்களை சேர்ந்தவை இவை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடங்கியது இவற்றின் அழிவு. காரணம் அவை தின்னும் பிணங்களில் உள்ள அதிகப்படியான விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் ஆகும்!

வல்லூறுகள் நம் சமுதாயத்திற்கு எப்படி உதவுகின்றன என்று பார்க்கலாமா?

நம்மில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும் வல்லூறுகள் இறந்த உயிரினங்களின் பிணங்களை மட்டுமே கொத்தித் தின்று உயிர் வாழ்கின்றவை என்று.  இப்படி அவை தின்பதால் இறந்த உயிரினங்களின் உடல் பகுதிகள் அழுகுவதற்கு உதவுகின்றன. அதே போல் நோய் பரவுதலையும் தடுக்கின்றன. சுற்றுச்சூழல் மாசை அகற்றி தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

வல்லூறுகளின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன?

ஏற்கனவே சொன்னது போல வல்லூறின் முக்கிய இறை பிணங்கள். ஆனால் தொண்ணூறுகளில் தொடங்கிய எதிலும் ரசாயன சேர்ப்பு அவற்றின் இறப்புக்கு ஒரு முக்கிய காரணம். அதனை அடுத்து வயல்வெளிகளில் தென்படும் எலி, பெருச்சாளி போன்ற உயிரினங்களைக் கொல்ல அல்லது வராமல் தடுக்க மக்கள் பயன்படுத்தும் எலி பாஷாணம் போன்றவற்றால் இறந்து போகும் உயிரினங்களை உண்ணும் பொழுது, அதிலுள்ள ரசாயனம் மற்றும் விஷம் வல்லூறுகளின் சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்து நாளடைவில் அவற்றின் உடல் செயல்திறனைப் குறையச் செய்கிறது. இது படிப்படியாக அவற்றின் இறப்புக்குக் காரணமாகிவிடுகிறது.

இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் என்ன என்ன? 

இரண்டு முக்கிய சவால்களை இது ஏற்படுத்தி உள்ளது.

ஒன்று இறந்துபோன கால்நடைகள், தெரு நாய்கள், எலி, பெருச்சாளி போன்ற எண்ணற்ற உயிரினங்களை மக்கள் தெருக்களிலும், நீர் நிலைகளிலும் போடும்பொழுது, நாடும், வீடும் மாசுபடுகின்றது. பார்ப்பதற்கும் நன்றாக இருப்பதில்லை. இதனைச் சரி செய்ய அரசாங்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிடம் ரசாயன உற்பத்தி செய்யப் பரிந்துரைக்கும். அப்படி உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகம். அப்படியே செய்யப்படும் ரசாயன கழிவுகள் மீண்டும் நீர்நிலைகளின் கலக்கும் அபாயம் ஜாஸ்தி. 

இரண்டாவது சவால், இப்படி தெருக்களில் எறியப்படும் விலங்குகளின் மூலம் பரவும் கிருமிகளும், அதனால் ஏற்படும் நோய்களும் அதிகம். ரேபிஸ் போன்ற கொடிய நோய்களின் தாக்கமும் அதிகம். ஒரு ஆராய்ச்சியின் படி, வல்லூறுகளின் அழிவு 50,000 மனித உயிர்களின் இறப்பிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அதே போல் இதனால் பரவிய நோய்களைக் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஏற்பட்ட செலவு அரசாங்கத்திற்கு மிக அதிகம்.

இப்படி மனிதன் செய்த தவறுகளுக்கான பாதிப்புகள் மிக அதிகம். அரசாங்கமும், பொது மக்களாகிய நாமும் எஞ்சி இருக்கும் வல்லூறுகள் அழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT