காற்று அடித்தாலே மரங்களிலிருந்து இலைகள் விழத்தான் செய்யும். நாம் ஒவ்வொரு நாளும் அதைச் சுத்தம் செய்து, அந்தச் சருகு எரிப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவோம். ஆனால், அதைச் செய்யாமல் அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும். வாருங்கள் பார்ப்போம்….
1. உரமாக்குதல்:
உங்கள் உரத்தின் தேவைகளுக்குப் பழைய இலைகள் சிறந்த ஆதாரமாகும். அவை நைட்ரஜன் மற்றும் கார்பனை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இதன் விளைவாக, அவை ஊட்டச்சத்து நிறைந்த உரமாய் இருப்பதால் உங்கள் தாவரங்களுக்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.
2. மண்ணை மேம்படுத்தலாம்:
உங்கள் தோட்ட மண்ணை மேம்படுத்த விரும்பினால், அதில் பழைய இலைகளைக் கலந்துவிடுங்கள். அவை மண்ணுடன் சேரும்போது கால்சியம் மற்றும் நைட்ரஜனை உற்பத்தி செய்கின்றன. மற்றும் மண்ணை வளப்படுத்தும் நன்மைகளைத் தரும் மண்புழுக்களை ஈர்க்கின்றன. காலப்போக்கில், இலைகள் உடைந்து, மண்ணைப் பஞ்சுபோன்றதாகவும், வளமானதாகவும் ஆக்குகின்றன.
3. கதகதப்பைத் தரும்:
குளிர்ந்த மாதங்களில், உங்கள் தாவரங்களுக்கு இயற்கையான ‘போர்வை’ ஆக பழைய இலைகளைப் பயன்படுத்தலாம். வெப்பத்தில் வளரும் மென்மையான தாவரங்களைச் சுற்றி அவற்றைக் குவிக்கவும். குளிர்காலம் முழுவதும் உங்கள் செடியைக் கதகதப்பாக வைத்திருக்க இலைகளால் நிரப்பப்பட்ட கம்பி போன்ற வடிவங்களை அதைச் சுற்றி உருவாக்கலாம்.
4. இலை தேநீர்:
பழைய இலைகளை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த திரவ உரத்தை உருவாக்கலாம். ஒரு டப்பாவில் இலைகளை நிரப்பி தண்ணீரைச் சேர்க்கவும். சில வாரங்களுக்கு ஊறவைக்கவேண்டும் . இதன் விளைவாக வரும் ‘இலை தேயிலையுடன்’ கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து, உங்கள் தாவரங்களின் மீது தெளித்து, அவற்றை செழிப்பாக வளர்க்க பயன்படுத்தலாம்.
5. பயோகேஸ் உற்பத்தி:
ஜெர்மனியில், இலையுதிர் காலத்தில் மரத்தின் இலைகளின் மூலமாக உயிர்வாயுவை (பயோகேஸ்) உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மின்சாரம் மற்றும் சமையல் தேவைக்கான ஆற்றலாக இதை மாற்றுகிறார்கள்.
6. இயற்கை நிறமிகள்:
இலையுதிர் கால இலைகளில் இருக்கும் இயற்கை நிறமிகளை ‘pigments’யை அழகுசாதனப் பொருட்கள், ஜவுளிகள் (Vegetable dye Sarees) மற்றும் உணவுத் தொழில்களில் பயன்படுத்தலாம் என்று பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிறமிகள் பாரம்பரிய பயன்பாடுகளுக்கு அப்பால் ஆக்கப்பூர்வமான சாத்தியங்களை வழங்குகிறது.
7. கலை மற்றும் கைவினைப்பொருட்கள்:
ஜப்பானில், கலை மற்றும் கைவினைப் பொருட்களில் பயன்படுத்த சில உதிர்ந்த இலைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றின் தனித்துவமான வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் கட்டமைப்புகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு செய்யும்போது, அந்தக் கைவினைப் பொருட்களின் அழகு பன்மடங்கு கூடுகிறது.
இப்படி இயற்கையால் உண்டாகும் கழிவுகளில்கூட பல்வேறு புதுப்புது தேவையான விஷயங்களை உலகம் முழுக்க உள்ள அனைவரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் நாமும் நம் இருப்பிடத்தில் குவியும் இலைச் சருகுகளை எடுத்து ஓர் ஓரமாக சேகரித்து வைத்து, மேலே குறிப்பிட்டதுபோல நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.