பிளாஸ்டிக் என்பது நவீன வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. நாம் அதை எல்லா இடங்களிலும் தற்போது காண்கிறோம். உணவுப் பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பைகளில் இருந்து தொழிற்சாலைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை, பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஒருவேளை இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் இல்லாமல் உணவுப் பொருட்களை பாதுகாப்பது கடினமாக இருந்திருக்கும். கண்ணாடி, உலோகம் மற்றும் மரம் போன்ற பாரம்பரிய பொருட்களையே இதற்காக அதிகம் நாம் பயன்படுத்தி இருப்போம். இது பொருட்களை பாதுகாப்பதற்கான செலவுகளை அதிகரிப்பது மட்டுமின்றி உணவு வீணாவதையும் அதிகரித்திருக்கலாம்.
பிளாஸ்டிக் பைப்புகள், குழாய்கள் மற்றும் பிற கட்டுமான பொருட்கள் இல்லாமல் வீடுகளையு,ம் கட்டிடங்களையும் எப்படி கட்டியிருப்போம்? மரம், கல் மற்றும் செங்கல் போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தி இருப்போம். இது கட்டுமான செலவுகளை அதிகரித்து, கட்டுமான நேரத்தையும் நீட்டித்திருக்கும்.
பிளாஸ்டிக் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு பொருட்கள் இல்லாமல் குழந்தைகள் எப்படி விளையாடுவார்கள்? மரம், துணி மற்றும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களையே குழந்தைகள் பயன்படுத்தியிருப்பார்கள். இதனால் குழந்தைகளின் பொழுதுபோக்கு பெரிதாவில் பாதிக்கப்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் மருத்துவ பொருட்கள் மற்றும் சாதனங்கள் இல்லாமல், மருத்துவமனைகளில் நோய்க்கான சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்திருக்கும். பிளாஸ்டிக் இல்லாமல் உலோகம், கட்டைகள் கண்ணாடி போன்ற பொருட்களையே பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இது மருத்துவ செலவுகளை அதிகரித்து, மக்கள் சிகிச்சை பெரும் விருப்பங்களை குறைத்திருக்கும்.
பிளாஸ்டிக்கே கண்டுபிடிக்கவில்லை என்றால் சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்திருக்கும். பிளாஸ்டிக் மாசுபாடு குறைவது என்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பானது. மேலும் இதனால் மண் மற்றும் நீரின் தரம் மேம்பட்டிருக்கும். எனவே பிளாஸ்டிக் இல்லாத உலகம் சவால்களும் நன்மைகளும் நிறைந்ததாகவே இருந்திருக்கும். நமது வாழ்க்கைமுறை மற்றும் தொழில்நுட்பங்களில் பெரிய மாற்றங்களை நாம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சுற்றுச்சூழல் நன்மைகள் காரணமாக நமது ஆரோக்கியத்தை நிலையானதாக பராமரித்திருக்கலாம்.
பிளாஸ்டிக் நம் வாழ்வில் பல அம்சங்களை நம்ப முடியாத வகையில் மாற்றி இருந்தாலும் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை புறக்கணிக்க முடியாது. பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்பது, மாற்றுப் பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க நம்மைத் தூண்டியிருக்கும். இதன் மூலமாக மனிதகுலம் வேறு விதமாக முன்னேறி முன்னேறி இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.