World Environment Day 2024 
பசுமை / சுற்றுச்சூழல்

World Environment Day 2024: நமது கிரகத்தின் நல்வாழ்வு நம் கைகளில்! 

கிரி கணபதி

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருளாக, நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது இந்த நாள். இத்தகைய பிரச்சினைகள் நமது கிரகத்திலும் நம் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

Land Restoration: நில மறுசீரமைப்பு என்பது பாழடைந்த நிலத்திற்கு புத்துயிர் அளித்து மறுசீரமைப்பதாகும். இந்த செயல்பாடு மீண்டும் காடுகளை உருவாக்குவது, மண் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. 

நில மீட்பு ஏன் முக்கியமானது? 

ஆரோக்கியமான நிலம் என்பது நமது உயிர் வாழ்வுக்கும் நமது கிரகத்தின் நல்வாழ்வுக்கும் இன்றியமையாதது. இது நமக்கு உணவு, சுத்தமான நீர் மற்றும் எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது. இருப்பினும் காடழிப்பு, நீடித்த விவசாய முறைகள் மற்றும் நகரமயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளால் நிலத்தின் பல பகுதிகள் பாழடைந்து தரிசாக மாறிவிட்டன. இதை நாம் இப்போது மீட்டெடுக்கவில்லை எனில், எதிர்காலத்தில் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகம் ஏற்படலாம். 

Desertification: பாலைவனமாக்கல் என்பது நிலத்தை சீரழிப்பதுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இது வளமான நிலங்கள் பாலைவனங்களாக அல்லது வறண்ட பகுதிகளாக மாறும் செயல்முறையை குறிக்கிறது.‌ இத்தகைய மாற்றமானது காலநிலை மாற்றம் மற்றும் மனித செயல்பாடுகளின் கலவையால் ஏற்படுகிறது. உயரும் வெப்பநிலை, நீடித்த வறட்சி மற்றும் முறையற்ற நிலப் பயன்பாடு ஆகியவை பாலைவனமாதலுக்கு பங்களிக்கின்றன. இதன் விளைவாக நிலத்தின் ஊட்டச்சத்துக்கள் குறைந்து, தாவரங்கள் முளைக்காத நிலை ஏற்படுகிறது. பாலைவனமாக்கலால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, இடப்பெயர்வு, அதிக வறுமை போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. 

Drought Resilience: வரட்சியை எதிர்க்கும் திறன் என்பது மக்களும், சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து வறட்சியின் தாக்கங்களைக் குறைத்து மீண்டு வருவதற்கான திறனாகும். குறைந்த மழைப்பொழிவினால் ஏற்படும் வறட்சியானது, விவசாயம், நீர் வினியோகம் மற்றும் ஒட்டுமொத்த சமூக பொருளாதாரத்தையும் மோசமாக்கிவிடும். எனவே நீர் பாதுகாப்பு, முறையான நீர்ப்பாசன முறைகள் மற்றும் வறட்சியை தாங்கும் பயிர்களை செயல்படுத்துவது வரட்சி காலங்களை எதிர்கொள்வதற்கான நல்ல முயற்சிகளாக இருக்கும். வறட்சியை எதிர்கொண்டு அதற்கு பதிலாக மாற்று விஷயங்களை செயல்படுத்தும் திறனை மேம்படுத்துவதன் மூலம், வரட்சியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எதிர்மறை தாக்கங்களைக் குறைக்கலாம். 

மக்கள் எப்படி பங்களிக்க முடியும்? 

மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்ய மக்கள் எப்படி பங்களிக்க முடியும் என்றால்,

  • முதலில் நிலத்தை மீட்பதில் மரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. எனவே மக்கள் அதிகப்படியான மரங்களை நடவு செய்ய வேண்டும். மரங்கள் நிலத்தில் தண்ணீரை தக்க வைக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடங்களை வழங்கவும் உதவுகின்றன. 

  • உங்களிடம் தோட்டம் அல்லது நிலம் இருந்தால், ரசாயன உரங்கள் மற்றும் நிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.‌ 

  • நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் குறித்து கவனமாக இருங்கள். நீரை அதிகமாக வீணாக்காமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும். நீர்க் கசிவுகளை சரி செய்யுங்கள். தினசரி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும். தண்ணீரை சேமிப்பது வறட்சியைத் தடுக்க உதவும்.  

  • உள்நாட்டில் விளையும் பொருட்களை தேர்ந்தெடுத்து விவசாயிகளுக்கு ஆதரவளியுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வளமான நிலத்தை பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் விவசாய முறைகளை மேம்படுத்துவதற்கும் நீங்கள் பங்களிக்கிறீர்கள். 

  • மேலும், நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்கவும். சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்களைப் பகிரவும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இவற்றைப் பற்றி முழுமையாக சொல்லித் தரவும். 

இந்த உலக சுற்றுச்சூழல் தினமானது நமது கிரகத்தின் நல்வாழ்வு நம் கைகளில் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. உங்களால் முடிந்த சிறு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், சுற்றுச்சூழல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். 

அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின நல்வாழ்த்துக்கள்! 

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT