கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லை? உடலை குளிர்ச்சிப் படுத்த ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? அப்படியானால் இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ரெசிபி ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஐஸ்கிரீம் ரெசிபியை எளிதாக செய்துவிடலாம் என்பதால், அதிக கஷ்டப்படத் தேவையில்லை. சரி வாருங்கள் சூப்பர் சுவையில் தேங்காய் பால் ஐஸ்கிரீம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
2 கப் தேங்காய் பால்
½ கப் சர்க்கரை
1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
சிறிதளவு நட்ஸ்
பிரஷ் கிரீம் 1 கப்
செய்முறை:
தேங்காய் பால் ஐஸ்கிரீம் செய்வதற்கு, முதலில் தரமான தேங்காயை தேர்வு செய்து, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பாலை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைத்தால், தேங்காய் பாலில் இருந்து அதன் கிரீம் தனியாக வந்துவிடும். அந்த க்ரீமை மட்டும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி, தேங்காய் பாலில் மீதமுள்ள தண்ணீரை கீழே ஊற்றி விடவும்.
அடுத்ததாக தேங்காய் பால் கிரீமில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்னர் அந்த கலவையில் பிரஷ் கிரீம் சேர்த்து, ஸ்பூன் அல்லது கரண்டி வைத்து நன்றாகக் கிளறிக் கொண்டே இருங்கள். இப்படியே சுமார் 20 நிமிடங்கள் செய்து கொண்டிருந்தால், காற்று கிரீமுடன் கலந்து அப்படியே பஞ்சு போல உருவாகிவிடும்.
பின்னர் உங்கள் விருப்பம் போல நட்ஸ் மற்றும் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்து, ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் குளிர்வித்தால், சூப்பரான சுவையில் தேங்காய் பால் ஐஸ்கிரீம் தயார். இதை அப்படியே எடுத்து சாப்பிடலாம். சுவை நீங்கள் நினைப்பதை விட அட்டகாசமாக இருக்கும்.
தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சூப்பரான ஆரோக்கிய ஐஸ் கிரீமை எளிதாக வீட்டிலேயே நீங்கள் தயாரித்து கொடுக்க முடியும். இந்த ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கோடைகாலத்தை இந்த குளுகுளு குழ் உடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.