கடலைப்பருப்பு சுழியம்
தேவையான பொருட்கள்:
குழையாமல் வேகவைத்த கடலைப்பருப்பு _100 கிராம்
வெல்லம் _100 கிராம்
தேங்காய் துருவல் _1/2 கப்
முந்திரி தூள் _1 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் _1/2 ஸ்பூன்
எண்ணெய் _1/4 லிட்டர்
மேல் மாவுக்கு:
மைதா மாவு _100 கிராம்
அரிசி மாவு _2 ஸ்பூன்
உப்பு _1 சிட்டிகை
சமையல் சோடா _1 சிட்டிகை
மஞ்சள் தூள் _1/2 ஸ்பூன்
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வெல்லக்கரைசல் மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிதூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
மேல் மாவுக்கான பொருட்களை நீர்விட்டு பஜ்ஜி மாவுபோல் கரைக்கவும். பின்னர் எண்ணெயை சூடாக்கி பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
தேங்காய் சுழியம்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் _1 கப்
வெல்லம் _3/4 கப்
நெய் _1 ஸ்பூன்
அரிசி மாவு _1 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் _1/4 ஸ்பூன்
எண்ணெய் _பொரிக்க தேவையான அளவு
மேல் மாவுக்கு: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி நைசாக அரைத்த மாவு _ 100 கிராம்
உளுந்து மாவு _1 ஸ்பூன்
உப்பு _1 சிட்டிகை
செய்முறை: வெல்லத்தில் சிறிது நீர் விட்டு கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து நீர் விட்டு பஜ்ஜிமாவு போல் கரைத்து கொள்ளவும். பூரண உருண்டையை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
பன்னீர் ரோஸ் ஜாமூன்
தேவையான பொருட்கள்:
திக்கான பால் 1/2 லிட்டர்
சர்க்கரை _100 கிராம்
ஏலக்காய் தூள் _1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு _1 ஸ்பூன்
பச்சை, ஆரஞ்சு,ரோஸ் நிறங்கள் சில துளிகள்
செய்முறை: பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சைசாறு பிழிந்து திரிய செய்து வடிகட்டி நீரில் மீண்டும் இரண்டு முறை அலசி எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை 10 நிமிடம் கட்டி தொங்க விடவும். ஒரு கடாயில் 100 மி.லி தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். 5 நிமிடம் கொதித்ததும் பொடித்த ஏலக்காய், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
இதற்கிடையில் பன்னீர் தயாரானதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும் உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு சர்க்கரை பாகில் எடுத்து போட்டு 2 நிமிடம் கொதிக்கவைத்து எடுத்து பரிமாறவும்.