காய்கறிகளை சமைப்பது என்பது அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரித்து ஆரோக்கியமான உணவை உருவாக்கும் ஒரு அற்புத வழியாகும். இருப்பினும் காய்கறிகளை சமைக்கும்போது செய்யும் சில தவறுகள், அதன் ஊட்டச்சத்துக்களில் சில பாதகங்களை விளைவிக்கலாம். நீங்கள் சமைக்கும் காய்கறி உணவுகள் சுவையானதாகவும், சத்துள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. அதிகமாக வேகவைத்தல்: காய்கறிகளை சமைக்கும்போது பலர் செய்யும் பொதுவான தவறுகளில் அவற்றை அதிகமாக வேகவைத்து சமைப்பது அடங்கும். காய்கறிகளில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. அவை அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது எளிதில் அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. காய்கறிகளை அதிகமாக சமைப்பதால் சத்துக்கள் இழந்து, அதன் சுவை மாறுபடலாம். காய்கறிகளை மிதமாக சமைப்பது மூலமாக அவற்றின் சுவை, நிறம், மிருதுவான தன்மை மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை தக்க வைக்கலாம்.
2. அதிக நேரம் கொதிக்க வைத்தல்: காய்கறிகளை அதிக நேரம் தண்ணீரில் கொதிக்க வைப்பதால், அதில் இருக்கும் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி போன்ற நீரில் கரையக்கூடிய விட்டமின்களின் தன்மை மாறுபடலாம். எனவே காய்கறிகளை அதிகமாக கொதிக்க வைக்கும்போது அவற்றின் நிறம் வெளுத்து, ஊட்டச்சத்துக்கள் நீரில் கரைந்து சத்து குறைவானதாக மாறிவிடும். நீங்கள் காய்கறிகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சமைக்கப் போகிறீர்கள் என்றால் அதன் சமையல் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
3. அதிக வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம்: அதிக வெப்பத்தால் காய்கறிகள் வெளியே மட்டும் வெந்து உள்ளே வேகாமல் அப்படியே இருக்கும். இது காய்கறிக்கு சீரற்ற அமைப்பையும், சுவையையும் கொடுக்கும். இதைத் தவிர்க்க காய்கறிகளை சமைக்கும் போது மிதமான வெப்பத்தைப் பயன்படுத்தி சமைக்கவும். மிதமான சூட்டில் வதக்குவது அல்லது கிளறுவது போன்றவற்றால், வெளியே மட்டும் வேகாமல் எல்லா இடங்களிலும் சமமாக வேக அனுமதிக்க முடியும்.
4. மசாலா பொருட்களை புறக்கணிப்பது: நீங்கள் காய்கறிகளை சரியான படி சமைப்பதற்கு அதில் தேவையான அளவு மசாலா சேர்க்க வேண்டியது அவசியம். மசாலா சேர்ப்பதை புறக்கணித்தால், காய்கறி விரும்பத்தகாத உணவாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. உப்பு, பூண்டு, மசாலா பொருட்கள் புளிப்பு சுவை போன்றவை காய்கறியின் சுவையை மேம்படுத்தும். இதன் மூலமாக காய்கறிகள் மிகவும் திருப்திகரமான உணவாக மாறும்.
5. காய்கறிகளை சீரற்ற முறையில் வெட்டுதல்: காய்கறிகளை சமைக்க வெட்டும்போது ஒரே மாதிரியான அளவுகளில் வெட்டுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சீரற்ற அளவில் வெட்டினால் அவை முறையாக வேகாமல் போகலாம். சில துண்டுகள் விரைவாக வெந்துவிடும், இதுவே பெரிய அளவில் வெட்டப்பட்ட துண்டுகள் சீக்கிரம் வேகாமல், ஒரு சீரற்ற உணவாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. எனவே சரியான பதத்தில் காய்கறிகளை சமைக்க அவற்றை சீராக வெட்டுவது அவசியம். இது எல்லா காய்கறி துண்டுகளும் ஒரே விகிதத்தில் சமைக்கப்பட உதவுகிறது.