chapati making 
உணவு / சமையல்

சப்பாத்தி சப்பாத்திதான். செய்முறை சீக்ரெட்ஸ்!

கல்கி டெஸ்க்

உடல் உரமேற கோதுமைப் பண்டங்கள் சாப்பிடுவது நல்லது. சப்பாத்தியில் பல வகைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் சப்பாத்தி செய்வதில் பல நுணுக்கங்கள் உண்டு. அவற்றை ஸ்டெப் பை ஸ்டெப் பார்ப்போமா?

சப்பாத்தி மாவு பிசைய:

பொதுவாக சப்பாத்தி நன்றாகவும், மிருதுவாகவும் வரவேண்டும் எனில் அதை நன்றாகப் பிசைவதில் தான் இருக்கிறது. கோதுமை மாவில் தேவைக்கேற்ற உப்பையும் சீரகத்தையும் பொடித்துக் கலந்து, அதில் எண்ணெய் சேர்த்து நன்றாக விரல்களால் கலந்துகொள்ள வேண்டும். அதில் இளஞ்சூடு நீரைக் கலந்து நன்றாக எல்லா விரல்களாலும் "மசாஜ்" செய்து பிசைய வேண்டும்.

பிசையும் (மசாஜ் செய்யும்) நேரம் மட்டும் 10 - 15 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் அதை காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து மூடி, குறைந்தது அரை மணி நேரமாவது ஊறிய பின் எடுத்து சப்பாத்தி செய்ய மிக மிக மிருதுவான சப்பாத்திகள் கிடைப்பது உறுதி. ஜீரகம் விரும்பாதவர்கள் போட வேண்டாம்.

சப்பாத்தி இடும் முறை :

ஒரு உருண்டை மாவை கையில் நன்றாக உருட்டி அழுத்தி, கோதுமை மாவில் தோய்த்து, பின் சப்பாத்திக் கட்டையால் லேசாக, அழுத்தம் கொடுக்காமல் தேய்க்கத் தேய்க்க மாவு உருண்டை அப்பள சைஸில் வரும்போதே தானாகவே வட்டமாக நகர ஆரம்பிக்கும். அடிக்கடி கோதுமை மாவில் தோய்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் கட்டையில் ஒட்டாமல் வட்டமாக நகரும். இதனால் நடுவிலும் ஓரங்களிலும் ஒரே அளவு 'திக்'னெஸ் கிடைக்கும். நடுவில் குழிவாகவோ அல்லது மாவு மடங்கியோ இடப்பட்டால் ஃபுல்கா (அ) சப்பாத்தி நல்ல உப்பலாக வராது. இடும் போது ஓட்டை விழுந்தால் நிச்சியமாக உப்பாது சப்பாத்தி இடுவது ஒரு கலை என்றே சொல்லலாம்! இது எல்லோருக்கும் செய்ய, செய்ய பயிற்சியில் வந்துவிடும். நல்ல மெல்லிய சப்பாத்தி கிடைக்கும்.

சப்பாத்தி சுடும் முறை:

தவா நல்ல சூடானதும் இட்ட சப்பாத்தி மாவைப் போடவும். தணல் 'சிம்'மில்லேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போது தவாவை தொட்டிருக்கும் பகுதி நெ. 1 என்றும், மேல் பாகம் நெ.2 என்றும் கொள்வோம். 1-ம் பக்கம் லேசாக பச்சை தன்மை போய் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்களாக சுட்ட தருணம் திருப்பிப் போடவும். 2ம் பக்கம் கருகாமல், 1ம் பக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக ரோஸ்ட் ஆக வேண்டும்.

இந்நிலையில் 1-ம் பக்கத்தில் எண்ணெய் விட்டுத் தணலைப் பெரிதாக்கி திருப்பிப் போட தவாவின் சூட்டில் நன்றாக பூரி போல் முழுவதும் உப்பலாக வரும். உடனே 2ம் பக்கத்தைத் திருப்பிப் போட்டு அந்த எண்ணெய் பசையிலேயே நன்றாக சுட்டெடுக்கலாம். இது சாதாரண எண்ணெய் உபயோகித்துச் செய்யும் சப்பாத்தி.

எப்பொழுதும் சப்பாத்தி செய்யும்போது தோசை திருப்பியையோ அல்லது ஜார்ணியையோ செங்குத்தாக வைத்து சப்பாத்தியை அழுத்துவதாக நினைத்து அதில் ஓட்டை விழ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால் சப்பாத்தி பூரிபோல் உப்பலாக வராது.

தோசை திருப்பியையோ, (அ) ஜார்ணியையோ ப்ளாட்டாக வைத்து லேசாக அழுத்தம் கொடுத்தால் போதுமானது. இட்ட மாவை தவாவில் போடும்போதே எண்ணெய் ஊற்றக்கூடாது. அவ்வாறு செய்தால் அரைகுறையாக வெந்து நேரமானபின் கெட்டி ஆகிவிடும்.

சப்பாத்தி செய்முறை 'சீக்ரெட்ஸ்' புரிந்ததா மக்களே!?!

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT