அருநெல்லிக்காய் ஊறுகாய்!
நெல்லிக்காய்களை கழுவிவிட்டு கொட்டைகளை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு பிரட்டி தேவையான உப்பு காரப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதங்கியதும் வறுத்த வெந்தயப்பொடியையும் போட்டு கிளறவும்.
அருநெல்லிக்காய் தொக்கு!
அருநெல்லிக்காய்களை நன்றாக கழுவி விதை நீக்கி சிறு துண்டுகளாக்ககியபிறகு மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொண்டு நெல்லிக்காய் பொடியை போட்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கி தொக்கு சற்று பதமானதும் இறக்கி சிறிது வறுத்த வெந்தயப் பொடியையும் போட்டு கிளறவும். நெல்லிக்காய் தொக்கு சூப்பராக இருக்கும்.
தித்திப்பு அருநெல்லி!
நெல்லிக்காய் கொஞ்சம் பெரியதாக எடுக்க வேண்டும். நன்றாக கழுவ வேண்டும். நெல்லிக்காய் அளவிற்கு தக்கவாறு சர்க்கரயை எடுத்து கொள்ள வேண்டும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி அழுக்கு நீக்க வேண்டும். பாகு கம்பி பதம் வந்ததும் நெல்லிக்காய் களைப் போட வேண்டும். பாகு தீர்த்துக் கொள்ளும்.மேலும் சற்று நேரம் கொதித்து கம்பிப்பதம் வந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி, சிறிது பச்சைக் கலர் சேர்த்து கலந்து ஆறியதும் எடுத்து வைக்கவும்.
வீட்டுக் குறிப்புகள்!
1) மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் நறுக்கி வெய்யிலில் காயவைத்து வற்றல் போல் உலர்த்தி கொள்ள வேண்டும். பிறகு எப்போது ஊறுகாய் வேண்டுமானாலும் அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.
2) தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி அப்படியே இருக்கும்.
3) வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் பாகு முற்றாது.
4) தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கித் தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
5) தயிர் கொண்டு கை கழுவ மண்ணெண்ணெய் வாசம் போய் விடும்.
6) வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
7) சமையலறையில் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்து கொள்ள ஏதுவாக இருக்கும்.