healthy snacks... Image credit - youtube.com
உணவு / சமையல்

ஆடி வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு புட்டு சமைக்கலாமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்கு புட்டு செய்து நிவேதனம் செய்வது வழக்கம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மாசம் "புட்டுக்கு மண் சுமந்த" சிவபெருமானுக்கு இந்த புட்டு செய்து நிவேதனம் செய்வார்கள். 

பச்சரிசி ஒரு கப் 

வெல்லம் ஒரு கப் 

ஏலக்காய் பொடித்தது ஒரு ஸ்பூன்

முந்திரிப் பருப்பு 20

தேங்காய் 1 மூடி

நெய் 1/4 கப்

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

பச்சரிசியை ஒரு கப் அளவு எடுத்து வெறும் வாணலில் போட்டு நன்கு வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் நைசாக பொடித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சூடு வந்ததும் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரி பருப்பை முதலில் வறுத்தெடுத்துக் கொண்டு பிறகு பொடியாக நறுக்கிய தேங்காய் பல்லையும் நெய்யில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். 

நைசாக பொடித்த அரிசி மாவில் கொதிக்க வைத்து ஆறிய மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசையவும். தண்ணீர் அதிகமானால் புட்டு உதிர் உதிராக வராது. எனவே அளவாக நீர் தெளித்து பிசையவும். கையால் பிடித்தால் மாவு பிடிபடவும் உதிர்த்து விட்டால் உதிரவும் வேண்டும். அந்த அளவுக்கு நீர் விட்டு பிசையவும். இதுதான் சரியான பக்குவம்.

இப்பொழுது சல்லடையில் மாவை போட்டு சலிக்கவும். கட்டிகள் எதுவும் இல்லாமல் உதிரி உதிராக வரும். இதனை ஒரு காட்டன் துணியில் கொட்டி சிறு மூட்டை போல் கட்டி இட்லி பானையில் ஆவியில் ஏழு எட்டு நிமிடங்கள் வேக விடவும். நன்கு வெந்ததும் புட்டு மாவின் வாசனை வரும். இப்பொழுது இறக்கி சிறிது ஆறியதும் அகலமான பாத்திரம் அல்லது தட்டில் கொட்டி சிறிதளவு நெய் விட்டு கட்டிகள் இல்லாமல் கையால் உதிர்க்கவும்.

வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு (1/4 கப்) கட்டிகள் கரையும் வரை கொதிக்க விட்டு தூசிகள் போக வடிகட்டி திரும்பவும் கொதிக்க விடவும்.

பாகு கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி தயாராக உள்ள அரிசி மாவில் கொட்டி கரண்டியால் நன்கு கிளறவும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும். ஆற‌ ஆற உதிர் உதிராக பட்டுப்போல் மென்மையான புட்டு தயாராகிவிடும். சுவாமிக்கு நிவேதனம் செய்ய சுவையான புட்டு தயார்.

குழந்தைகளுக்கு அவல் கட்லெட்!

தேவை;

அவல் 200 கிராம்

உருளைக்கிழங்கு 1

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கொத்தமல்லி சிறிது

தனியா தூள் 1 ஸ்பூன்

சீரகத்தூள் ‌1/2 ஸ்பூன்

கரம் மசாலா  1 ஸ்பூன்

எலுமிச்சம்பழம் 1 மூடி

உப்பு தேவையானது

அவலைக் களைந்து இருபது நிமிடம் ஊறவிட்டு நீரை ஒட்டப் பிழிந்து எடுக்கவும். அத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தனியாத் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, எலுமிச்சம் பழச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு சூடானதும் 5, 6 கட்லெட்டுகளை வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன் கலர் வரும் வரை வைத்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Batman-இன் தலைசிறந்த 9 வாழ்க்கைத் தத்துவங்கள்! 

உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும் கல்சட்டி பாரம்பரிய சமையல்!

பணத்தை விட மகிழ்ச்சி தரும் விஷயம் எதில் இருக்கிறது தெரியுமா?

மைக்ரோஷியா ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

சிறுகதை: கதை கேளு, கதை கேளு... சுவையான கதை கேளு!

SCROLL FOR NEXT